தீபாவளி பட்சணம் எளிய டிப்ஸ் வகைகள்!

Deepavali special recipes
Deepavali pakshanam
Published on
Deepavali Strip 2024
Deepavali Strip 2024

தேங்காய் பர்பி செய்யும்போது முதலிலேயே சர்க்கரை தேங்காய் துருவல் இரண்டையும் சேர்த்து அடுப்பில் வைக்கக் கூடாது சர்க்கரையை கம்பி பாகு பதம் வரும் வரை காய்ச்சிய பிறகு தேங்காய் துருவலை சேர்த்தால் அதிகம் கிளற வேண்டிய அவசியம் இருக்காது பர்ஃபியும் சீக்கிரத்தில் கெட்டியாகி விடும்.

ரவா உருண்டை பயத்த மாவு உருண்டை பண்ணும்போது கொஞ்சம் மில்க் பவுடரை சேர்த்து நெய்யை உருக்கி விட்டுப் பிடித்தால் சுவை அதிகமாக இருக்கும்.

ஏலக்காயை வாணலியில் இளம் சூட்டில் பிரட்டி சர்க்கரை சேர்த்து பொடித்தால் நன்கு பொடிக்க வரும் இத்துடன் ஒரு கிராம்பு சிறு துண்டு ஜாதிக்காய் ஒரு சிட்டிகை பச்சை கற்பூரம் சேர்த்து மிக்ஸியில் அரைத்து வைத்துக் கொண்டால் ஸ்வீட் செய்யும்போது சேர்த்து செய்ய சுலபமாக இருக்கும்.

தீபாவளிக்கு செய்யும் மிச்சரில் கருவேப்பிலையையும் பட்டாணியையும் பொறித்து போட்டால் சூப்பராக இருக்கும் பட்டாணியை ஊற போட்டு உப்பு போட்டு பாதி வந்தவுடன் எடுத்து வடிகட்டி விட வேண்டும் பிறகு இதை பொறித்தால் வெடிக்காது மிக்சரில் கரகரவென சுவையோடு இருக்கும்.

பட்சணங்கள் செய்ய எண்ணெய் வைக்கும்போது இஞ்சி வாழைப்பட்டையை அம்மியில் நசுக்கி போட்டு பொரித்து எடுத்த பிறகு உபயோகிக்க வேண்டும் இதனால் பலகாரம் அதிகம் எண்ணெய் குடிக்காது எண்ணெய்யும் பொங்கி வழியாது.

இரண்டு கப் மெல்லிய பாம்பே ரவையை வாணலியில் சிவக்க வறுத்து கொண்டு ஒரு கப் தேங்காய் துருவல் ஒரு கப் கேரட் துருவல் ஏலக்காய் இரண்டு கப் சர்க்கரை எல்லாவற்றையும் ஒன்றாக வாணலியில் போட்டு அடுப்பில் ஏற்றி கிளறி உருண்டையாக பிடித்து வைத்தால் கேரட் உருண்டை கலர்ஃபுல்லாக இருக்கும். சாப்பிட சுவையாகவும் ருசியாகவும் இருக்கும்.

சோமாசி செய்யும் போது பூரணம் உதிர்ந்து விடாமல் இருக்க பூரணத்தில் சிறிது நெய் விட்டு பிசிறி அடைத்தால் உதிராது.

குங்குமப்பூ சிறிதளவு கேசரி பவுடர் சேர்த்து சர்க்கரை பாகு காய்ச்சி அதில் ரசகுல்லாவை ஊற வைத்தால் நிறம் மணம் இரண்டுமே ஆளை அசத்தும் விதத்தில் இருக்கும்.

இரண்டு பங்கு பாசிப்பருப்பு ஒரு பங்கு கடலைப் பருப்பு என்று அரைத்த மாவில் மைசூர் பாகு செய்தால் சுவை சூப்பராக இருக்கும்.

இதையும் படியுங்கள்:
தீபாவளிக்கு ஈசியா செய்ய சோளமாவு பிஸ்கட்டும், வரகரிசி தட்டையும்!
Deepavali special recipes

குலோப் ஜாமுன் மிக்ஸ் வாங்கி மாவை பிசைந்து உருட்டி வைக்கும் போது ஒரு குச்சியால் நடுவில் ஒரு துளை போட்டால் மாவு உள்ளே நன்றாக வெந்து விடும் ஜாமுன் கறுகாது.

பர்பி மைசூர்பாகு போன்ற ஸ்வீட்டுகள் செய்யும்போது அவற்றின் மேலே அலங்காரமாக வைக்கிற பாதாம், பிஸ்தா முந்திரி போன்றவை சரியாக ஒட்டிக்கொள்ளாமல் கீழே விழுந்து விடுகிறதா? நெய் தடவிய தட்டில் இவற்றை மேலே கொட்டி ஆற விட்டு துண்டுகள் போட்டால் இவை நன்றாக ஒட்டிக் கொள்ளும். பிறகு ஸ்வீட் துண்டுகளை எடுத்து கீழ்பாகம் மேலே வரும்படி திருப்பி அடுக்கி வைக்க வேண்டும்.

பாதுஷா செய்யப் போகிறீர்களா? சர்க்கரையை இரட்டை கம்பி பாகு வரும் வரை காய்ச்சியதும் அரைமூடி எலுமிச்சம்பழச் சாற்றைப் பிழிந்து விட வேண்டும் இதனால் பாகு திரவ நிலையிலேயே இருக்கும் பொரித்த எல்லா பாதுஷாக்களையும் சுலபமாக பாகில் ஊறவைக்கலாம்.

மைசூர்பாகை இரண்டு விதமாக செய்யலாம் நெய் விட்டு செய்தால் இளகின பதத்தில் எடுத்து விட வேண்டும் அப்போதுதான் வாயில் போட்டதும் கரையும் டால்டா அல்லது ரீஃபைண்ட் ஆயிலில் செய்தால் முற்றிய பதம் வரவேண்டும் அப்போதுதான் கரகரப்பாக இருக்கும்.

பதார்த்தங்களை எண்ணையில் போட்டு வதக்கும்போது அந்த எண்ணெயின் நிறம் செம்பழுப்பாக மாறும் அப்படி மாறாமல் இருக்க எண்ணையில் ஒரு கோலிக் குண்டு அளவு புளியை போட்டு வைத்தால் போதும் எண்ணெய் அப்படியே இருக்கும்.

மைசூர்பாகு செய்யும் போது கடலைமாவை நெய்விட்டு லேசாக வறுத்து பிறகு மைசூர் பாகு செய்தால் மணம் தூக்கலாக இருக்கும்.

மைசூர்பாகினை இறக்கும்போது ஒரு சிட்டிகை சமையல் சோடா தூவி கிளறி கொட்டினால் மைசூர்பாகு பொறு பொறு என்று இருக்கும்.

குலோப் ஜாமுன் பாகில் ஒரு ஸ்பூன் தேன் விட்டு இறக்கினால் பாகு உறையாமலும் கெட்டுப் போகாமல் இருக்கும்.

பட்சணங்கள் நீங்கள் சாப்பிட்ட பிறகு பட்சணங்கள் ஜீரணமாக திடீர் தீபாவளி லேகியம் தயார் செய்யலாம் ஒரு கப் ஓமம் ஒரு கரண்டி வெல்லப் பொடி ஒரு கப் சுக்கு பொடி மூன்றையும் கலந்து தேன் சேர்த்து சின்ன சின்ன உருண்டைகளாக பிடித்து வைத்துவிட்டால் இனிப்பு காரம் சாப்பிட்ட பிறகு இதை எடுத்து சாப்பிட்டால் போதும் ஜீரணம் ஆகிவிடும் வயிறு மந்த நிலை ஏற்படாது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com