
இன்று உங்கள் வீட்டில் சாதம் வடித்தாலும் சரி சப்பாத்தி செய்தாலும் சரி, அதற்கு ஒரு ஈஸியான அதே சமயம் வித்தியாசமான குழம்பு எப்படி செய்வது எனப் பார்க்கலாம். இதற்கு வீட்டில் வெள்ளை பூசணிக்காய் இருந்தால் போதும் உடுப்பி ஸ்டைலில் அட்டகாசமான வெண்பூசணிக் குழம்பு செய்யலாம். இந்த குழம்பு, சாதம் சப்பாத்தி என இரண்டுக்குமே சூப்பராக இருக்கும். முக்கியமாக இதை குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.
தேவையான பொருட்கள்:
வெள்ளை பூசணி - ½ கிலோ
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
மஞ்சள்தூள் - ½ ஸ்பூன்
துருவிய தேங்காய் - ½ கப்
வர மிளகாய் - 3
சீரகம் - ½ ஸ்பூன்
மல்லி - 2 ஸ்பூன்
வெல்லம் - 3 ஸ்பூன்
புளிச்சாறு - 1 கப்
வெந்தயம் - ½ ஸ்பூன்
செய்முறை:
முதலில் வெள்ளை பூசணிக்காயை பொடியாக நறுக்கி அதை குக்கரில் போட்டு, மஞ்சள் தூள் மற்றும் உப்பு தூவி ஒரு விசில் விட்டு வேக வைக்க வேண்டும். பின்னர் புளியை சுடுநீரில் போட்டு ஊற வைத்து சாறு பிழிந்து கொள்ளுங்கள்.
ஒரு வாணலியை அடுப்பில் வைத்து அதில் வெந்தயம், வரமிளகாய், சீரகம், மல்லி ஆகியவற்றை சேர்த்து வறுத்து அவை குளிர்ந்த பின்னர் மிக்ஸி ஜாரில் போட்டு, அத்துடன் வெல்லம், தேங்காய், சிறிதளவு நீரையும் சேர்த்து மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
அடுத்ததாக வேகவைத்த பூசணிக்காயில் அரைத்த விழுது, உப்பு மற்றும் புளி கரைசலை சேர்த்து மிதமான தீயில் பச்சை வாசனை போகும் வரை கொதிக்க விட வேண்டும்.
இறுதியில் சிறிய வானொலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி வர மிளகாய், கடுகு, கருவேப்பிலை சேர்த்து தாளித்து அதை அப்படியே குழம்பில் சேர்த்து கிளறினால் சுவையான உடுப்பி வெண்பூசணிக் குழம்பு தயார். இதன் சுவை நீங்கள் எதிர்பார்ப்படை விட அதிகமாக இருக்கும். சாதம், சப்பாத்தி என இரண்டிற்குமே இதை சாப்பிடலாம்.