சுடு நீரில் குளிப்பதால் கிடைக்கும் நன்மைகள் தெரியுமா?

சுடு நீரில் குளிப்பதால் கிடைக்கும் நன்மைகள் தெரியுமா?

நாள் முழுவதும் வேலை செய்த பின் சுடு நீரில் குளிப்பது, களைப்பை நீக்கி மூட்டுகளுக்கும் தசைகளுக்கும் நன்மை பயக்கும். இதனால் தசைகள் தளர்வுற்று புத்துணர்வு பெறும். டென்ஷன் குறையும். இரத்த நாளங்களை விரிவடையச் செய்து இரத்த ஓட்டத்தை மேம்படுத்தும். இதனால் இதயத்தை சுற்றியுள்ள இரத்த நாளங்களின் செயல்பாடு சீர் குலையாமல் இதய ஆரோக்கியம் பாதுகாக்கப்படுகிறது.

சுடு நீரின் வெதுவெதுப்பு உடலுக்கும் மனதுக்கும் அமைதியைக் கொடுத்து, மன அழுத்தத்தையும் சோகமான மனநிலையையும் போக்குகிறது. சருமத்தின் மேலுள்ள சிறு சிறு துவாரங்களில் படிந்திருக்கும் அழுக்கு, எண்ணெய்ப் பிசுக்கு, நச்சுக்கள் போன்றவற்றை நீக்கி துவாரங்களை காற்றோட்டமாய் இருக்கச் செய்யும். இதனால் சருமம் பளபளப்பும் ஆரோக்கியமும் பெறும்.

படுக்கைக்குச் செல்லும் முன் சுடு நீரில் குளிப்பது உடலை தளர்வடையச்செய்து தூங்குவதற்கான மனநிலையை கொண்டு வருகிறது. உடல் உஷ்ணத்தை குறைக்கிறது. இது 'இட் ஈஸ் டைம் டு ஸ்லீப்' என்று நமது மூளை நமக்கு சிக்னல் கொடுப்பது போல் இருக்கும். பிறகு இடையூரில்லா ஆழ்ந்த தூக்கம் நமது கண்களைத் தழுவும். தூக்கமின்மை (Insomnia) என்ற நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் சுலபமாக தூக்கம் வரும்.

இதையும் படியுங்கள்:
குளிர்காலத்தில் மூட்டு வலி அதிகமாவது ஏன் தெரியுமா?
சுடு நீரில் குளிப்பதால் கிடைக்கும் நன்மைகள் தெரியுமா?

குளிர், ஒவ்வாமை, மூச்சுக் குழாய் மற்றும் நுரையீரல் தொற்று போன்றவற்றால் உடல் பாதிப்படைந்திருக்கும்போது, சுடு நீரிலிருந்து வரும் நீராவியை நுகர்வதால் அவற்றின் பாதிப்பு விலகும். மூக்கடைப்பு நீங்கும்; எரிச்சலுடன் இருந்த தொண்டை இதமடையும். உடல் வலி, தலைவலி, மாதவிடாய் காலத்து வலிகள், பிடிப்புகள் ஆகியவையும் ஒரு சுடு நீர் குளியலில் காணாமல் போய்விடும்.

சுடு நீர் குளியல் சருமத்திலுள்ள இறந்த செல்களை நீக்கி சருமத்தின் நீர்ச்சத்தை தக்க வைக்கிறது. எண்டோர்பின்களை தூண்டிவிட்டு மனதை அமைதியான நிலைக்குக் கொண்டு செல்ல உதவுகிறது.

இப்படி பல வழிகளில் நமது உடலுக்கு நன்மை தருவதாயிருக்கும் சுடு நீர் குளியலை அவ்வப்போது தேர்ந்தெடுத்து சுகம் பல பெறுவோம்.

Related Stories

No stories found.
logo
Kalki Online
kalkionline.com