
வெள்ளை பூசணி உளுந்து வடை
தேவை:
கருப்பு உளுந்து - அரை கிலோ
வெள்ளை பூசணி - 2 கீற்று
கொத்தமல்லி - 3 கைப்பிடி
கறிவேப்பிலை - சிறிது
வெள்ளை வெங்காயம் - 2
பச்சை மிளகாய் - 5
உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப
செய்முறை:
முதலில் ஊறவைத்த கறுப்பு உளுந்தை தண்ணீர் அதிகம் சேர்க்காமல், நன்கு அரைத்துக்கொள்ளவும். பிறகு வெள்ளை பூசணியை துருவி அதில் சேர்க்கவும்.
அதனுடன் வெள்ளை வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி மற்றும் கறிவேப்பிலை ஆகியவற்றை பொடியாக நறுக்கி, பின் உப்பு சேர்த்து பிசையவும். ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பிசைந்த கலவையை தட்டையாக தட்டி பொரித்து எடுக்கவும். இப்போது சூடான சுவையான வெள்ளை பூசணி உளுந்து வடை தயார்.
இதற்கு தொட்டுக்கொள்ள சின்ன வெங்காய சட்னி சூப்பராக இருக்கும்.
ரவை இனிப்பு பணியாரம்
தேவை:
ரவை - ஒரு கப்
வெல்லப் பொடி- 1கப்
தேங்காய் துருவல் - அரை கப்
ஏலக்காய் தூள் - சிறிதளவு
எண்ணெய் - தேவைக்கேற்ப.
செய்முறை:
ரவையை ஒருமணி நேரம் நீரில் ஊறவைக்கவும். பிறகு நீரை வடித்து விட்டு மிக்ஸியில் அரைக்கவும். அதனுடன் வெல்லப்பொடி, தேங்காய் துருவல், ஏலக்காய்தூள் சேர்த்து அரைத்து எடுக்கவும். பணியார சட்டியில் எண்ணெய் விட்டு, கரண்டியால் குழிகளுக்குள் மாவை ஊற்றி ஒருபுறம் வெந்ததும், கம்பியால் திருப்பிப்போட்டு வேக வைத்து எடுக்கவும். சுவையான, சத்தான ரவை இனிப்பு பணியாரம் தயார்.
இட்லி சுவையாகவும், மிருதுவாகவும் வர டிப்ஸ்
இட்லிக்கு அரிசியை ஊறவைக்கும் முன், லேசாக வறுத்து விட்டு, பிறகு ஊறவைத்து அரைத்தால், இட்லி மிருதுவாக இருக்கும்.
இட்லிமாவில் சிறிது நெய் கலந்துவிட்டு இட்லி வார்த்தால், இட்லி மென்மையாகவும், மணமாகவும் இருக்கும்.
இட்லி மாவில் உளுந்து குறைந்தால் மாவு கெட்டியாக இருக்கும். அதனால் மூன்று அல்லது நான்கு டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெயை மாவில் கலந்துவிட்டால், இட்லி மென்மையாகவும் இருக்கும். உடலுக்கும் நல்லது.
இட்லிக்கு அரைக்கும்போது உளுந்தம் பருப்பை குறைத்து, அதற்கு பதிலாக சோயா பீன்ஸ் சேர்த்து அரைத்தால், இட்லி மிருதுவாகவும் இருக்கும். சத்தும் நிறைய கிடைக்கும்.
இட்லி மாவில் பெருங்காயத்தூள் சிறிது கலந்தால், இட்லி வாசனையாகவும், மிருதுவாகவும் இருக்கும். வாய்வு பிரச்னைகளும் வராது.
பச்சரிசியில் இட்லி வார்ப்பதாக இருந்தால், ஒரு பங்கு பச்சரிசிக்கு பாதி பங்கு உளுந்தம் பருப்பு சேர்க்க வேண்டும். பச்சரிசியை பொன்னிறமாக வறுத்து, மூன்று மணி நேரம் நீரில் ஊறவைத்து கெட்டியாகவும், உளுந்தம் பருப்பை நைசாகவும் அரைத்து, இட்லி வார்த்தால், பூ போல, மிருதுவாக இருக்கும்.
இட்லி மாவை அரைத்து 8 9 மணி நேரம் புளிக்க வைத்து இட்லி வார்த்தால்தான் இட்லி மென்மையாகவும், சுவையாகவும் இருக்கும். இடைப்பட்ட நேரத்தில் ஏற்படும் ரசாயன மாற்றம்தான், மாவுக்கு சுவை அளிக்கிறது.
இட்லி மாவு நீர்த்து இருந்தால், வறுத்த ரவை சிறிது கலந்து, கால் மணி நேரம் கழித்து இட்லி வார்த்தால், இட்லி மிருதுவாகவும், சுவையாகவும் மாறிவிடும்.