
நிறங்கள் உண்மையிலேயே பசியை தூண்டுமா?
ஒரு உணவு எவ்வளவு கவர்ச்சிகரமானதாகவோ அல்லது விரும்பத்தகாததாகவோ இருக்கிறது என்பதில் நிறம் குறிப்பிடத்தக்க தாக்கத்தை உண்டு பண்ணும் என்பது உண்மை. உணவை பார்த்த மாத்திரத்தில் நம் வாயில் உள்ள சுரப்பிகள் சாப்பிடுவதற்கு தயாராக உமிழ் நீர் உற்பத்தியை அதிகரிக்க தொடங்குகின்றன.
பசியை தூண்டக்கூடிய நிறங்களாக சிவப்பு, ஆரஞ்சு, மஞ்சள் போன்ற சூடான நிறங்கள் கருதப்படுகின்றன சிவப்பு நிறம் வாசனை உணர்வை அதிகரித்து பசியை தூண்டுவதாக ஆய்வுகள் சொல்கின்றன. மஞ்சள், சிவப்பு மற்றும் ஆரஞ்சு வண்ணத்தை தான் ஓட்டல்களில் அதிகம் உபயோகிக்கிறார்கள். அதன் காரணம் இந்த வண்ணங்கள் அதிக பசி உணர்வை தூண்டக்கூடிய ஆற்றல் பெற்றவை என்பதால்.
சிவப்பு நிறம்:
சிவப்பு நிறம் பசியை தூண்டும். சிவப்பு நிற உணவுகள் மிகவும் கவர்ச்சிகரமானவை. பெரும்பாலான உணவக லோகோக்கள், மெனுக்கள் மற்றும் மேஜைத் துணிகள் இந்த வண்ணங்களில்தான் பயன்படுத்தப்படுகிறது. சிவப்பு என்பது வலுவான உணர்ச்சிகளை தூண்டக்கூடிய ஒரு சூடான நிறம்.
இது உற்சாகம் மற்றும் ஆற்றலுடன் தொடர்புடையது. இந்த நிறம் உணவு மீதான நமது விருப்பத்தை அதிகரிக்கும். பல உணவகங்கள் மற்றும் உணவு பிராண்டுகள் தங்கள் லோகோக்களிலும், அலங்காரங்களிலும் சிவப்பு நிறத்தை பயன் படுத்துகின்றன. ஏனெனில் இது சாப்பிடுவதை ஊக்குவிக்கும் என்று நம்பப்படுகிறது.
மஞ்சள் நிறம்:
இது மகிழ்ச்சியுடன் தொடர்புடையது. இந்த நிறம் கவனத்தை ஈர்ப்பதாகவும், பசியை தூண்டுவதாகவும் உள்ளது. இந்த நிறத்தில் உள்ள உணவுப் பொருட்களை பார்க்கும்பொழுது மூளை உண்மையில் செரோடோனின் என்ற ஒரு நல்ல ஹார்மோன் அதிகமாக சுரக்கிறது.
இதனால்தான் பல உணவகங்களில் மஞ்சள் நிற பூக்கள் மேஜையில் இருப்பதை பார்க்கலாம். மஞ்சள் நிறம் நம்மை நம்பிக்கையுடன் உணர வைக்கிறது. அதிக நம்பிக்கையுடன் உணரும்போது உணவை அதிகமாக சாப்பிடுவோம். வயிறு நிரம்பியிருந்தாலும் சில உணவுகளை பார்த்தவுடன் நமக்கு பசி உணர்வு ஏற்படுவதற்கு காரணம் அதன் வண்ணங்களாலும், வாசனையாலும்தான்.
ஆரஞ்சு:
ஆரஞ்சு நிறம் மகிழ்ச்சி மற்றும் புத்துணர்ச்சியை தரக்கூடியது. சிவப்பு நிறத்தைப் போலவே இது கவனத்தை ஈர்க்கக் கூடியது. பசியை தூண்டக்கூடிய இந்த நிறம் உணவு மற்றும் குளிர்பான நிறுவனங்களால் அதிகம் பயன்படுத்தப்படுகிறது.
பிரகாசமான நிறங்கள் கண்ணை விரைவாக ஈர்க்கும். இதனால் தான் ஸ்டால்களில் பிரகாசமான வண்ண நாற்காலிகள் மற்றும் மேசைகள் போடப்படுகின்றன. துரித உணவு உணவகங்கள் மற்றும் ஹோட்டல்களில் ஆரஞ்சு வண்ணங்களை அலங்காரத்திற்கும், மேஜை நாற்காலிகளுக்கும் உபயோகப்படுத்துகின்றனர்.