ஹெல்தி டூ டேஸ்டி: வீட்டில் இருக்கும் பொருள்களை வைத்தே அசத்தல் சமோசாக்கள்!

Samosa
SamosaAI image
Updated on

மைதா இனிப்பு சமோசா

தேவை:

மைதா மாவு - கால் கிலோ

தேங்காய்த் துருவல் - கால் கப்

வெல்லம் - கால் கிலோ

எண்ணெய் - தேவைக்கேற்ப

ஏலக்காய் - 2 (பொடியாக்கியது)

செய்முறை:

மைதா மாவில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி பூரிக்கு பிசைவது போல் கெட்டியாகப் பிசைந்துகொள்ளவும். 

வாணலியில் ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி வெல்லத்தைப் போட்டு கொதித்ததும் அதனுடன் தேங்காய்த் துருவலை போட்டு நன்றாகக் கிளறிக்கொள்ளவும். தண்ணீர் வற்றியதும் வாணலியை இறக்கி வைத்து, ஏலாக்காயை பொடி போட்டு கலக்கி, தேங்காய் பூரணத்தை இறக்கி வைக்கவும். பூரணம் ஆறியதும், அதை சிறிய உருண்டைகளாகப் பிடித்து வைத்துக்கொள்ளவும்.

பிசைந்து வைத்துள்ள மைதா மாவை பூரிக்கட்டையில் தேய்த்து முக்கோண வடிவில் வெட்டிக்கொள்ளவும். அதனுடன் செய்து வைத்துள்ள தேங்காய் பூரணத்தை நடுவில் வைத்து நன்றாக மூடி சமோசா வடிவம் போல் செய்யவும்.

பின்பு வாணலியில் எண்ணெய் ஊற்றி நன்றாக காய்ந்ததும் தயார் செய்து வைத்துள்ள இனிப்பு சமோசாவை போட்டு வேகவிடவும். ஒருபுறம் வெந்த உடன் கரண்டியால் திருப்பி போட்டு பொன்னிறமாகும் வரை வேகவிட்டு எடுக்கவும். சுவையான மைதா இனிப்பு சமோசா ரெடி.

முளை கட்டிய பயறு சமோசா

தேவை:

கோதுமை மாவு - 250 கிராம்,

முளைகட்டிய பயறு - 100 கிராம்,

பெரிய வெங்காயம் - 4,

பச்சை மிளகாய் - 2 (நறுக்கியது),

இஞ்சி 1 துண்டு, 

பூண்டு - 10 பல் நசுக்கியது

மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்,

உப்பு - தேவைக்கு,

பட்டை,

கிராம்புத்தூள் - தலா 1/4 டீஸ்பூன்,

பொரிக்க எண்ணெய் - கால் லிட்டர்

செய்முறை:

வாணலியில் 2 டீஸ்பூன் எண்ணெய் விட்டு வெங்காயம், பச்சை மிளகாய், நசுக்கிய இஞ்சி, பூண்டு, மிளகாய்த்தூள், உப்பு, பட்டை, லவங்கத்தூள், முளைகட்டிய பயறு சேர்த்து நன்கு வதக்கி எடுத்துக் கொள்ளவும். கோதுமை மாவில் வெண்ணெய் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்துகொள்ளவும். இதனை சப்பாத்தியாக இட்டு, நீள நீளமாக 3 துண்டாக்கி முக்கோண வடிவில் மடித்து அதனுள் வதக்கிய பயறு கலவையை வைத்து தண்ணீர் தொட்டு மடித்து காய்ச்சிய எண்ணெயில் பொரித்து எடுக்கவும். சுவையான ஆரோக்கியமான முளை கட்டிய பயறு  சமோசா தயார்.

நூடுல்ஸ் சமோசா

தேவை: 

நூடுல்ஸ் - ஒரு பாக்கெட், மைதா மாவு - 100 கிராம், கேரட் துருவல் - ஒரு கப், உருளைக்கிழங்கு - ஒன்று, பொடியாக நறுக்கிய வெங்காயம் - ஒரு கப்,  கோஸ் துருவல் - சிறிதளவு, பச்சை மிளகாய் - ஒன்று (பொடியாக நறுக்கவும்), பொடியாக நறுக்கிய கொத்தமல்லி - சிறிதளவு, எண்ணெய் - 250 மில்லி, உப்பு - தேவையான அளவு.

செய்முறை: 

உருளைக்கிழங்கை வேகவைத்து, தோல் உரித்து மசிக்கவும். நூடுல்ஸை குழையாமல் லேசாக வேகவிட்டு எடுத்துக்கொள்ளவும். கேரட், கோஸ், வெங்காயம், பச்சை மிளகாயை உப்பு சேர்த்து வதக்கிக்கொள்ளவும். மைதா மாவை பிசைந்து சிறு அப்பள வடிவில் இட்டுக் கொள்ளவும். வதக்கி வைத்து இருக்கும் காயுடன், வேக வைத்த நூடுல்ஸ், மசித்த உருளைக்கிழங்கு, கொத்தமல்லி சேர்த்து கலந்து கொள்ளவும். இதுதான் பூரணம். அப்பள வடிவில் இட்ட மாவின் நடுவில் சிறிது பூரணம் வைத்து, சமோசா வடிவில் நன்கு மூடி, எண்ணெயில் பொரிக்கவும். வித்தியாசமான சுவையில் நூடுல்ஸ் சமோசா ரெடி.

logo
Kalki Online
kalkionline.com