
வெயில் காலம் வரும்போது வடக காலமும் வருகிறது. வகை வகையான வடகங்கள் சில இங்கே...
* ஜவ்வரிசி வடகம்
மூன்று கப் ஜவ்வரிசியை முதல் நாள் இரவு ஊறவைத்து, மறுநாள் காலையில் குழைய வேகவைத்து, எலுமிச்சைசாறு 3 ஸ்பூன், உப்பு தேவைக்கேற்ப, அரைத்த பச்சை மிளகாய் விழுது 2 ஸ்பூன், சீரகம் 2 ஸ்பூன் கலந்து, எண்ணெய் தடவிய வாழை இலை அல்லது தென்னங்கீற்றுகளில் கரண்டியால் மொண்டு, வடகமாக வைத்து, சிறு அப்பளம்போல் வைக்கவும்.
* ஜவ்வரிசி இனிப்பு வடகம்
2 கப் ஜவ்வரிசியை ஊறவைத்து, 5 ஸ்பூன் சர்க்கரை, ஏலக்காய் பொடி கலந்து மொண்டு வைத்து, காயவைத்தால், சுவையான, இனிப்பு வடகம் தயார்.
* அரிசி வடகம்
ஒரு கிலோ பச்சரிசியை களைந்து, துணியில் பரப்பி உலர வைத்து, கொதிக்கும் நீரில் சிறிது சிறிதாக போட்டு கைவிடாமல் வேக வைக்கவும். அதில் தேவைக்கேற்ப உப்பு, எலுமிச்சைசாறு 5 ஸ்பூன், பச்சை மிளகாய்சாறு 3 ஸ்பூன் சேர்த்து கெட்டியாக பிசையவும். இந்தக் கலவையை முறுக்கு அச்சில் நிரப்பி, வாழை இலையில் எண்ணெய் தடவி, பிழிந்து, வெயிலில் காயவைக்கவும். மாவு சிறிது நீர்த்து இருநதால், அப்பளம்போல் கரண்டியால் அப்படியே இடலாம்.
* அவல் வடகம்
4 டம்ளர் கெட்டி அவலைக் களைந்து, நீரை வடித்து விட்டு ஊற விடவும். அதில் நறுக்கிய பூசணிக்காய் துண்டுகள் ஒரு கப், உப்பு பச்சை மிளகாய் சாறு பெருங்காயம் சிறிது கலந்து நன்கு பிசையவும். எண்ணெய் தடவிய, அகன்ற வாழை இலைகளில் பிசைந்த கலவைகளை உருட்டி உருட்டி வைத்து அதைபோல் தட்டி வெயிலில் காயவைக்கவும். காய்ந்ததும் திருப்பிப் போட்டு, மறுபுறமும் காயவைத்து எடுக்கவும். இது சாம்பார், குழம்புக்கு தொட்டுக்கொள்ள மிகவும் சுவையாக இருக்கும்.
* குழம்பு வடகம்
அரை கிலோ உளுத்தம் பருப்பை ஊறவைத்து, அரைத்து, ஏதாவது காய்கறி துண்டுகள் ஒரு கப், உப்பு தேவைக்கேற்ப, பெருங்காயம் சிறிது, வர மிளகாய் அரைத்த விழுது 2 ஸ்பூன் கலந்து, குட்டி குட்டி உருண்டைகள் செய்து வாழை இலையில் காயவைத்து எடுக்கவும். இதை சாம்பார் குழம்பு, மோர்க் குழம்பு இவற்றில் பொரித்து போட்டால், சுவையும், மணமும், கூடிவிடும். இதே போல், கொள்ளு தானியத்திலும் குழம்பு வடகம் செய்யலாம்.
* காய்கறி வற்றல்கள்
வெங்காயம், வெண்டைக்காய், கொத்தவரங்காய் போன்ற காய்களை நறுக்கி, உப்பு சேர்த்த மோரில் ஊறவைத்து, காயவைத்து எடுத்தால் சுவையான காய்கறி வற்றல்கள் கிடைக்கும்.
* புளி மிளகாய் வற்றல்
மோர் மிளகாய் போடுவது போலவே, புளி சாற்றில் மிளகாயை ஊற வைத்து, புளி மிளகாய் செய்யலாம்.
வடக டிப்ஸ் சில:
அரிசி, பருப்புகளில் வடகம் செய்வது போலவே, சிறுதானியங்களிலும் செய்யலாம். சுவையும், சத்தும் கூடுதலாக கிடைக்கும். மாங்காய் சீசனும் செய்வதால் வடகக் கூழில் மாங்காயை அரைத்து சேர்க்கலாம்.
வடகங்கள், வற்றல்களை சாப்பாட்டில் தொட்டுக் கொள்ளலாம் சாம்பாரில் பொரித்து போடலாம். ஸ்நாக்ஸ் போலவும் சாப்பிடலாம்.
பிளாஸ்டிக்கை தவிர்த்து, வாழை இலை போன்ற அகன்ற இலைகளை பயன்படுத்தி, வடகங்கள், வற்றல்கள் போடலாம்.