படிப்பதை உடனடியாக மறந்து விடும் குழந்தைகளுக்கு அவர்களின் ஞாபக சக்தியை அதிகரிக்க வல்லாரைக் கீரையை சமைத்துக் கொடுப்பார்கள். அப்படி செய்து கொடுக்கும்போது பெரும்பாலானவர்கள் குழந்தை களுக்கு பிடித்தபடி அதை செய்து கொடுப்பதில்லை. இதன் காரணமாகவே வல்லாரைக் கீரையை குழந்தைகள் விரும்பி சாப்பிடுவதில்லை.
அடுத்த முறை நீங்கள் வல்லாரைக் கீரை வாங்கும்போது பருப்பு சேர்த்து கடைந்து கொடுத்தால், குழந்தைகள் விரும்பி சாப்பிடக்கூடிய சுவையில் அது இருக்கும். இந்த பதிவில் வல்லாரைக் கீரை கடைசல் எப்படி செய்வது எனப் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
வல்லாரைக் கீரை - 1 கப்
வெங்காயம் - 1
பூண்டு - 5 பல்
மஞ்சள்தூள் - ½ ஸ்பூன்
வரமிளகாய் - 3
பெருங்காயத்தூள் - ½ ஸ்பூன்
தக்காளி - 2
புளி - சிறிதளவு
துவரம் பருப்பு - ¾ கப்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
முதலில் துவரம் பருப்பை நன்கு கழுவி குக்கரில் வேகவைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். பின் அதில் மஞ்சள் தூள், பெருங்காயத்தூள், பச்சை மிளகாய், பூண்டு, வெங்காயம், தக்காளி ஆகியவற்றை சேர்க்க வேண்டும்.
அதன் பிறகு அத்துடன் வல்லாரைக் கீரையை தண்ணீரில் சுத்தம் செய்து குக்கரில் சேர்த்து, கீரை மூழ்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி 4 விசில் வரை விட்டு இறக்க வேண்டும்.
குக்கரில் காற்று அடங்கியதும் அதில் புளி கரைசலை சேர்த்து, தேவையான அளவு உப்பு போட்டு மத்து வைத்து கடைய வேண்டும்.
பின்னர் தனியாக ஒரு கடாயை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, கருவேப்பிலை, கடுகு, வெங்காயம், பூண்டு சேர்த்து நன்கு வதக்கி, அதை கீரையுடன் சேர்த்து தாளித்து கிளறினால், வல்லாரைக் கீரை கடைசல் ரெடி. இதை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே விரும்பி சாப்பிடுவார்கள்.