மழைக்காலத்தில் வரும் சருமப் பிரச்னைகளுள் முக்கியமானது சிரங்கு. இது சருமத்தில் தோன்றும் ஒரு ஒட்டுண்ணி தொற்றாகும். மனிதக் கண்களால் கண்டறிய முடியாத வகையில் இந்த ஒட்டுண்ணிகள் இருக்கும்.
சிரங்கு நோய்க்கான காரணங்கள்: சொறி, சிரங்கு நோய் நுண்ணுயிர்களால் ஏற்படுகிறது. பெண் நுண்ணுயிர்கள் சருமத்தைத் துளைத்து முட்டைகளை இடுகிறது. ஆக்சிஜன் மற்றும் சூரிய ஒளி குறைவாக உள்ள இடங்களிலும், வெயிலில் உலர வைக்காத துணிகளிலும் தானாக உற்பத்தி ஆகும்.
பரவும் விதம்: இந்தத் தொற்று பீடித்த நபர், மற்றொரு நபருடன் கைகளைக் கோர்த்தல் அல்லது நேரடியான சருமத் தொடர்பின் மூலமாக இது பரவுகிறது. அவர் உபயோகித்த துவாலைகள், தலையணைகள், சோப்பு மூலமும் இது பிறருக்குப் பரவுகிறது. நுண்ணுயிர்கள் மனிதரில் மாத்திரம்தான் இனப்பெருக்கம் செய்ய முடியும். செல்லப்பிராணிகளால் சொறி, சிரங்கு நோயைப் பரப்ப முடியாது. நெரிசலான வீடுகளில் வசிப்போர், நெரிசலான பகல் நேரப் பராமரிப்பு நிலையத்தில் விடப்படும் பிள்ளைகள் சொறி, சிரங்கு நோய்க்கு எளிதில் ஆளாகிறார்கள். சொறி, சிரங்கு மக்கள் கூட்டம் அதிகமுள்ள இடங்களில் மிகச் சுலபமாகப் பரவும்.
தொற்றின் பாதிப்புகள்: சிரங்கு இரவெல்லாம் உறங்க விடாமல் அரிக்கும். பெரும்பாலும் விரல்களுக்கிடையிலுள்ள தோல் பகுதி, மணிக்கட்டைச் சுற்றியுள்ள பகுதி, முழங்கைகள், அக்குள்கள், பிறப்புறுப்பு போன்ற இடங்களில் காணப்படும். குழந்தைகளின் உள்ளங்கைகள், உள்ளங்கால்கள், கழுத்து, முகம் மற்றும் உச்சந்தலை போன்ற இடங்களில் வரலாம். இதன் சிறப்பம்சம் முகத்தில் வராது. மெல்லிய மடிப்புகளில்,அந்தரங்க உறுப்புகளில் மாலை தொடங்கி இரவு முழுவதும் உறங்க விடாமல் கடுமையான அரிப்பு மற்றும் கொப்பளங்களை ஏற்படுத்தும். சொரிந்துகொண்டே இருக்க வேண்டும் என்கிற உணர்வையும் ஏற்படுத்தும். அதனால் புண்கள், கொப்பளங்கள் மற்றும் பொருக்குகள் தோன்றும்.
சிரங்கு நோய்க்கான சிகிச்சை: சிரங்கு நோய்க்கு சிகிச்சை செய்யப்படாமல் நிவாரணமடையாது. மருத்துவர் எழுதிக் தரும் கிரீம் அல்லது லோஷனை உடலில் தடவி இரவில் 8 மணி நேரங்களுக்கு அப்படியே விட்டுவிட வேண்டும். குழந்தைகள் என்றால் உடல் முழுவதும் பூசி, விரல்களுக்கிடைப்பட்ட பகுதிகள், மணிக்கட்டுகள், அக்குள்கள் போன்ற பகுதிகளுக்கு விசேஷ கவனம் செலுத்தவும். நுண்ணுயிர்கள் திரும்பவும் தோன்றினால், ஓரிரு வாரங்களுக்குப் பின்னர் திரும்பவும் க்ரீம் பூச வேண்டியிருக்கலாம்.
வராமல் தடுக்க: மழைக்காலம் வரும் முன்னே, துவைக்க முடியாத தலையணை, மெத்தைகளை வெயிலில் நன்கு உலர்த்தி எடுக்கவும். படுக்கை விரிப்பை தினம் வெளியில் கொண்டு சென்று உதறி, வெயிலில் நன்றாக காயவைத்து மாலை எடுத்து வரவும். நோய் பாதித்த நபரின் உடைகள், துவாளைகள் மற்றும் படுக்கை விரிப்புகளை வெந்நீரில் துவைக்கவும்.