
பொதுவாக பொங்கல் என்றால் அரிசியையும் பயத்தம் பருப்பையும் சேர்த்துதானே செய்வார்கள். அரிசியே இல்லாம வித விதமான பொங்கல் ரெசிபியை பார்க்கலாமா..?
கொள்ளு பொங்கல்:
முதலில் 200g கொள்ளை சுத்தம் செய்து அத்துடன் ஒரு சிறிய கப் அளவு பயத்தம் பருப்பை சேர்த்து பொன்னிறத்தில் வறுக்கவும்(எண்ணெய் விடாமல் வறுக்கவும்). பின்பு ஆறிய பிறகு அதை மிக்ஸியில் போட்டு அரைக்கவும். ரவை பதத்திற்கு அரைக்கவும். பிறகு அதை தண்ணீரில் போட்டு அரைமணி நேரத்திற்கு ஊறவைக்கவும்.
அது ஊறுவதற்குள் பொங்கலுக்குத் தேவையான மிளகு சீரகத்தை வறுத்து ஒன்றும் இரண்டுமாக பொடி செய்து கொள்ளவும். இஞ்சியை பொடி பொடியாக நறுக்கி கொள்ளவும். முந்திரி பருப்பை நெய்யில் வறுத்தெடுத்து கொள்ளவும்.
அரை மணி நேரம் ஊறிய பிறகு குக்கரில் மூன்று அல்லது நான்கு ஸ்பூன் நெய்யை ஊற்றி காய்ந்த பிறகு கடுகு, சீரகம், நறுக்கிய இஞ்சி மற்றும் கருவேப்பிலையை போட்டு தாளிக்கவும். இப்போது வறுத்த முந்திரி பருப்பு, மிளகு சீரகத் துளையும் சேர்த்து கலக்கவும். ஊறிய கொள்ளு பருப்பு கலவையை (தண்ணீரை வடிகட்டவும்) இத்துடன் போட்டு தேவையான உப்பையும் சேர்த்து கிளறிவிடவும். பிறகு மூன்று கிலாஸ் தண்ணீர் ஊற்றி நன்றாக கலந்த பிறகு குக்கரை மூடி நான்கு அல்லது ஐந்து விசில் வந்த பிறகு அடுப்பை அணைக்கவும். குக்கர் ஓசை அடங்கிய பிறகு நன்றாக கிளறி சூடாக பொங்கலை பரிமாறவும்.
இதே முறையில் எல்லாவிதமான millets லும் மற்றும் கோதுமை ரவையிலும் பொங்கல் செய்யலாம்.
ரவா பொங்கல்:
முதலில் ஒரு கப் பயத்தம் பருப்பை குக்கரில் வேக வைத்துக் கொள்ளவும். 200g ரவைக்கு ஓரு சிறிய கப் பயத்தம் பருப்பு போதுமானது. ரவையை வாணலியில் பச்சை வாசனை போகும் வரை வறுக்கவும். மிளகு சீரகத்தூளை பொடி செய்து கொள்ளவும். முந்திரி பருப்பையும் வறுத்து கொள்ளவும். வாணலியில் தேவையான நெய்யை ஊற்றி கடுகு, சீரகம், நறுக்கிய இஞ்சி, வறுத்த முந்திரி பருப்பு மற்றும் கருவேப்பிலையை போட்டு தாளிக்கவும்.
பிறகு வறுத்த ரவையை போட்டு சிறிது கிளறிய பிறகு வேகவைத்துள்ள பயத்தம் பருப்பு, மிளகு சீரகத் தூள் மற்றும் தேவையான உப்பையும் போட்டு கிளறவும். இப்போது இரண்டரை கிலாஸ் தண்ணீரை ( வெந்நீரை ) ஊற்றி sim ல் வைத்து நன்றாக எல்லாம் ஒன்று சேர்ந்து ரவை வெந்து பொங்கல் பதத்திற்கு வந்த பிறகு அடுப்பை அணைக்கவும். சூடான ரவா பொங்கல் ரெடி..
அவல் பொங்கல்:
முதலில் அவலை தண்ணீரில் கழுவி பின்பு தண்ணீரை வடிகட்டி சிறிது நேரத்திற்கு ஊற வைக்கவும். ஒரு கப் பயத்தம் பருப்பை வேக வைக்கவும்(200g அவலுக்கு ஒரு கப் பருப்பு). பிறகு வாணலியில் நெய்யை ஊற்றி கடுகு, சீரகம், நறுக்கிய இஞ்சி, வறுத்த முந்திரி பருப்பு மற்றும் கருவேப்பிலையை போட்டு தாளிக்கவும். பிறகு ஊற வைத்த அவலை போட்டு சிறிது கிளறிய பிறகு வேகவைத்துள்ள பயத்தம் பருப்பு, மிளகு சீரகத் தூள் மற்றும் தேவையான உப்பையும் போட்டு கிளறவும்.
இப்போது இரண்டரை அல்லது மூன்று கிலாஸ் தண்ணீரை ஊற்றி sim ல் வைத்து எல்லாம் ஒன்று சேர்ந்து அவல் நன்றாக வெந்து பொங்கல் பதத்திற்கு வந்த பிறகு அடுப்பை அணைக்கவும். அவல் பொங்கலுக்கு வெந்நீர் தேவை இல்லை. சுவையான அவல் பொங்கல் ரெடி.