
ரவை அப்பள பாயசம்
தேவை:
பால் - அரை லிட்டர்
ரவை -1 கப்
சர்க்கரை - 1 கப்
நெய்யில் வறுத்த முந்திரி - 10
ஏலக்காய் தூள் - சிறிது
நெய் - பொரிப்பதற்கு
செய்முறை;
ரவையை நீர் தெளித்து, கையில் நெய் தொட்டுக்கொண்டு, அழுத்தி பிசைந்து, ஒருமணி நேரம் ஊறவைக்கவும். பிறகு பிசைந்த ரவையை மெல்லிய அப்பளங்களாக இட்டு, ஒரு சுத்தமான வெள்ளைத் துணியில் போட்டு காயவிடவும். உலர்ந்ததும் வாணலியில் நெய் விட்டு அப்பளங்களை சிவக்க பொரித்து எடுத்து, சிறு சிறு துண்டுகளாக நொறுக்கவும். அடிகனமான பாத்திரத்தில் பாலைக் காய்ச்சி, அதில் நொறுக்கிய அப்பளங்களை போட்டு வேக வைக்கவும். சர்க்கரையை சேர்க்கவும். ரவை அப்பளங்கள் மெத்தன்று வெந்தவுடன், வெயில் வறுத்த முந்திரி பருப்பு, ஏலக்காய் தூள் சேர்க்கவும். சுவையான ரவை அப்பள பாயசம் தயார்.
கேரட் பாயசம்
தேவை:
கேரட் - கால் கிலோ
பால் - 1 லிட்டர்
சர்க்கரை - கால் கிலோ
முந்திரிப் பருப்பு - 40 கிராம்
ஏலக்காய் தூள் - சிறிது
நெய் - 2 ஸ்பூன்
செய்முறை:
கேரட்டை தோல் நீக்கி, நறுக்கி, வேகவைத்து, நன்கு மசிக்கவும். பின்பு அதில் சர்க்கரை சேர்த்து, அது கரைந்ததும், காய்ச்சிய பாலை ஊற்றி கொதிக்க வைத்து, அனைத்தும் நன்றாக இணைந்ததும், இறக்கி நெய்யில் வறுத்த முந்திரி பருப்பு, ஏலக்காய்தூள் கலந்தால், சுவையான கேரட் பாயசம் தயார்.
பப்பாளி பாயசம்
தேவை:
பப்பாளி துண்டுகள்- 1 கப்
பச்சரிசி - 1 கப்
சர்க்கரை - 3 ஸ்பூன்
பாதாம் , முந்திரி - தலா 10
நெய் - 2 ஸ்பூன்
செய்முறை;
பாதாம் பருப்பை நீரில் ஊறவைத்து, தோலை நீக்கி நைசாக அரைக்கவும். பச்சரிசியை வாணலியில் வறுத்து ரவை போல பொடிக்கவும். பப்பாளி பழத் துண்டுகளை அரைத்து சாறு எடுக்கவும். அடி கனமான பாத்திரத்தில் மூன்று கப் நீரை விட்டு கொதிக்க விடவும். அதில் அரிசி ரவையைத் தூவி கிளறவும். வெந்ததும் சர்க்கரை சேர்க்கவும். நெய்யில் வறுத்த முந்திரிப் பருப்பு, பாதாம் விழுது, நெய், பப்பாளிசாறு கலந்து கிளறி இறக்கி வைக்கவும். சுவையான, புதுமையான பப்பாளி பாயாசம் தயார்.
ஆப்பிள் பாயசம்
தேவை:
ஆப்பிள் - 2.
பால் - 2 கப்.
முந்திரி - 10.
பிஸ்தா - 10.
பாதாம் - 10.
சர்க்கரை - 2 கப்.
செய்முறை:
முதலில் அடுப்பில் பாலை வைத்து சுண்டக்காய்ச்சி வைக்கவும். பின் ஆப்பிளை தேங்காய் சீவலில் வைத்து சீவிக்கொள்ள வேண்டும்.
பால் சுண்டி 1 கப் ஆனதும் அதில் சர்க்கரையைப் போட்டு கலக்கவும். சர்க்கரை நன்கு கரைந்ததும் ஆப்பிளைப் போட்டு கலக்கவும்.
பாதாமின் தோலை உரித்துக்கொள்ளவும். பாதாம், பிஸ்தா, முந்திரி ஆகியவற்றை அரைமணி நேரம் பாலில் ஊறவைத்து மிக்சியில் அரைத்து வேகும் ஆப்பிளில் சேர்க்க வேண்டும். இப்போது சுவையான ஆப்பிள் பாயாசம் தயார்.