பாயாசம் முதல் பூரி வரை... வாழைப்பழத்தின் விதவிதமான அவதாரங்கள்!
வாழைப்பழ பாயாசம்
தேவை:
நாட்டு வாழைப்பழம் – 3 (நசுக்கியது)
பால் – 2 கப்
பனை வெல்லம் – ¾ கப்
தேங்காய் பால் – 1 கப்
ஏலக்காய் தூள் – ½ டீஸ்பூன்
நெய் – 2 டீஸ்பூன்
முந்திரி, திராட்சை – சிறிதளவு
செய்முறை:
வாழைப்பழங்களை மசித்து வைக்கவும். ஒரு பாத்திரத்தில் பாலை கொதிக்கவைத்து, அதில் நசுக்கிய வாழைப்பழத்தை சேர்த்து நன்றாகக் கிளறவும். பனை வெல்லத்தை சிறிது தண்ணீரில் கரைத்து வடிகட்டி பாலைச் சேர்க்கவும். பின்னர் தேங்காய் பால், ஏலக்காய் தூள் சேர்த்து நன்றாகக் கலக்கவும்.
இறுதியில் நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சை சேர்த்து பரிமாறவும். வித்தியாசமான சுவையில் வாழைப்பழ பாயாசம் தயார்.
******
வாழைப்பழ அடை
தேவை:
கோதுமை மாவு - 200 கிராம், வாழைப் பழம் - 2,
தேங்காய் - 2 துண்டு,
ஏலக்காய் - 2,
வெல்லம் - 200 கிராம்,
நெய் - தேவையான அளவு, முந்திரி - 5.
செய்முறை:
கோதுமை மாவுடன் வாழைப் பழம், ஏலக்காய்த்தூள், வெல்லம் சேர்த்து, தண்ணீர் விட்டு அடை மாவு பதத்துக்குக் கரைக்கவும். தோசைக் கல்லைக் காயவைத்து, மாவை ஊற்றிச் சிறிய அடைகளாக வார்த்து, நெய் விட்டு, வெந்ததும் எடுக்கவும். பொடியாக நறுக்கிய தேங்காய், முந்திரித் துண்டுகளை மேலாகத் தூவிப் பரிமாறவும்.
******
வாழைப்பழ பர்பி
தேவை:
வாழைப்பழம் - 3
வெல்லம் - 100 கிராம்
நெய் - 8 டீஸ்பூன்
கோதுமை மாவு - 150 கிராம்
ஏலக்காய்த் தூள் - 2 டீஸ்பூன்
பொடித்த பாதாம் - சிறிதளவு
செய்முறை:
முதலில் வாழைப்பழத்தை தோல் நீக்கி மிக்சியில் போட்டு நன்றாக அரைத்துக் கொள்ளவும். பின்பு அடிப்பக்கம் கனமான பாத்திரத்தில், வெல்லத்தைப் போட்டு அது கரையும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்து வடிகட்டி கொள்ளவும். பின்பு வேறொரு பாத்திரத்தில் 6 ஸ்பூன் நெய் ஊற்றி சூடுபடுத்தி, கோதுமை மாவு சேர்த்து 5 நிமிடங்கள் நன்றாகக் கிளறவும்.
பின்பு அரைத்து வைத்திருக்கும் வாழைப்பழக் கலவையை கொட்டி 10 நிமிடங்கள் நன்றாக கிளறவும். பின்பு வடிகட்டிய வெல்ல நீர் மற்றும் ஏலக்காய் தூளைச் சேர்த்து கெட்டியாகும் வரை கிளறவும். பிறகு 2 டீஸ்பூன் நெய் ஊற்றிக் கலந்து இறக்கவும்.
இந்தக் கலவையை வேறொரு பாத்திரத்துக்கு மாற்றி, பொடித்த பாதாமை அதன் மேல் தூவி, விருப்பமான வடிவத்தில் வெட்டிக்கொள்ளவும். சுவையான வாழைப்பழ பர்பி ரெடி.
*******
வாழைப்பழ பூரி
தேவை:
வாழைப் பழம் - 2
ஏலக்காய் பொடி -
அரை டீஸ்பூன்
சர்க்கரை - 2 டீஸ்பூன்
தயிர் - ஒரு டீஸ்பூன்
கோதுமை மாவு - ஒன்றரை கப்
சீரகம் - அரை டீஸ்பூன்
எண்ணெய் - பொரிப்பதற்கு
செய்முறை:
மிக்ஸி ஜாரில் வாழைப்பழ துண்டுகள், ஏலக்காய்ப் பொடி, சர்க்கரை, தயிர் சேர்த்து நன்றாக அரைத்துக்கொள்ளவும்.
கிண்ணத்தில் கோதுமை மாவு, சீரகம் சேர்த்து கலக்கவும். பிறகு, வாழைப்பழ கலவையை அத்துடன் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு நன்றாக பிசைந்துக் கொள்ளவும். இதனை அரைமணி நேரம் ஊறவிட்டுப் பிறகு, சிறிய உருண்டைகளாக எடுத்துக் கொள்ளவும். இந்த உருண்டைகளை பூரி பதத்திற்கு விரித்துக் கொள்ளவும். வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும், பூரிகளை ஒவ்வொன்றாக போட்டு பொரித்து எடுக்கவும். சுவையான வாழைப்பழ பூரி ரெடி..!