பன்னீர் நீரை சேர்த்து கோதுமை மாவு பிசையும்போது ...?

Whey water
Whey water
Updated on

பன்னீர் அதிக மக்களால் எடுத்துக்கொள்ளப்படும் உணவாகும். முக்கியமாக, அசைவம் சாப்பிடாதவர்களின் விருப்ப தேர்வு உணவாக எப்போதுமே பன்னீர் இருக்கும். பன்னீரில் புரதசத்தத்துடன் அதிகளவில் ஊட்டச்சத்துகளும் நிறைந்துள்ளன. உடலுக்கு எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகளைத் தருகிறது இந்தப் பன்னீர்.

பன்னீர் தயாரிப்பதற்கு, முதலில், பாலைக் காய்ச்சி அதனுடன் எலுமிச்சை சாறு அல்லது வினிகர் சேர்க்கப்படுகிறது. இதைச் சேர்த்தவுடன் பால் கெட்டியாகி, திரிந்து, பின் திடப்பொருளாகவும், திரவப்பொருளாகவும் பிரியும்.  அந்த  திடப்பொருளை திரவத்திலிருந்து பிரித்து எடுத்து அதைப் பன்னீராகப் பயன்படுத்துவோம். மீதமுள்ள திரவம் தான் பன்னீர் நீர். இதை  ‘whey water’  அதாவது 'மோர்த் தண்ணீர்' என்றும் அழைப்பார்கள். இதை  என்ன செய்வதென்று தெரியாமல் கொட்டிவிடுவோம்.

எவ்வாறு, காய்கறி வேகவைத்த தண்ணீரில் நிறைய சத்துக்கள் உள்ளனவோ, அதேபோல்தான் இந்தப் பன்னீர் நீரிலும் நிறைய சத்துக்கள் உள்ளன.

இதையும் படியுங்கள்:
பற்களின் எனாமலுக்கு வலிமை சேர்க்கும் சூயிங்கம்!
Whey water

 பன்னீர் நீரில் இருக்கும் ஆரோக்கிய நன்மைகள்:

  • இந்தப் பன்னீர் நீரில்  புரதச்சத்துகள் நிறைந்துள்ளன. பொதுவாக, மற்ற வகை புரதங்களை எடுத்துக் கொள்ளும்போது, அவை செரிமானம் ஆக சற்று தாமதம் ஆகலாம். ஆனால், இந்தப் பன்னீர் நீர் மற்றப் புரதங்களுடன் ஒப்பிடும்போது,  எளிதில் செரிமானம் ஆகிவிடுமாம்.

  • பன்னீர் நீர் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கவும் குறைப்பதற்கும்  உதவுகிறது. அதே சமயம், இதை கார்போஹைட்ரேட் உணவுகளுக்கு முன்போ அல்லது கார்போஹைட்ரேட் உணவுகளுடனோ சேர்த்து சாப்பிடும்பொழுது அது இரத்த சர்க்கரையின் அளவை சற்று அதிகரிப்பதாகக் கூறப்படுகிறது.

  • இது செரிமானத்தை மேம்படுத்தவும், பசியைக் கட்டுப்படுத்தவும்  உதவுகிறது. இதனால், உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்களுக்கு சிறந்த உணவாக பன்னீர் நீர் விளங்குவதாக கருதப்படுகிறது.

  • தசையை வலுப்படுத்தவும், வயது மூப்பின் காரணமாக  ஏற்படும் தசை  இழப்பைத் தடுக்கவும் பன்னீர் நீர் ஒரு சிறந்த உணவுப் பொருளாகப்  பார்க்கப்படுகிறது. 

  • இரத்த அழுத்தத்தை குறைத்து இதய நோய்  ஏற்படும் அபாயத்தை குறைக்கும் சிறந்த பானமாகவும் பன்னீர் நீர் கருதப்படுகிறது.

பன்னீர் நீரை எவ்வாறு உணவில் சேர்த்துக் கொள்ளலாம்?

  • பன்னீர் வைத்து தயாரிக்கப்படும் பன்னீர் பட்டர் மசாலா, ஷாஹி பன்னீர், பாலக் பன்னீர் போன்ற உணவுகளில் தண்ணீருக்குப் பதிலாக பன்னீர் நீரைப் பயன்படுத்தலாம். 

  • அதே சமயம் வழக்கமாக நாம் செய்யும் காய்கறி கிரேவிகளைத் தாயார் செய்யவும் பன்னீர் நீரைப் பயன்படுத்தலாம். இவ்வாறு, சேர்ப்பதன் மூலம்,  உணவுக்கு கூடுதல் சுவை கிடைப்பதோடு, அதை ஆரோக்கியமானதாகவும்  மாற்ற முடியும்.

  • எஞ்சிய பன்னீர் நீருடன் தயிர், கொத்தமல்லி, சீரகத்தூள் சேர்த்து உப்பு லஸ்ஸியாகவும் பயன்படுத்தலாம் அல்லது  அதனுடன் தயிர், சர்க்கரை, சிறிதளவு தேன் சேர்த்து இனிப்பு லஸ்ஸியாகவும் பயன்படுத்தலாம். கோடைகாலத்தில் உடலுக்கு குளிர்ச்சி தரும் பானங்களில் ஒன்றாக இது விளங்குகிறது.

  • கோதுமை மாவு பிசையும்போது அதனுடன் இந்தப் பன்னீர் நீரையும் சேர்த்துக்கொள்ளலாம். இது மிருதுவான சப்பாத்தி மற்றும் பரோட்டாவைத் தருவதுடன், அவற்றில் உள்ள ஊட்டச்சத்து மதிப்பையும்  அதிகரிக்கிறது.

logo
Kalki Online
kalkionline.com