
நம்மில் பல பேருக்கு ரவை அல்லது ரவா உப்புமா என்ற பேரைக் கேட்டாலே முகம் அஷ்ட கோணலாகும். கேலி கிண்டலுக்கும் நகைச்சுவைக்கும் உள்ளாக்கப்படும் ரவையிலிருந்து சுலபமா செய்யக்கூடிய சுவையான சில உணவுகளைப்பற்றி இப்பதிவில் பார்ப்போம்.
1. கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு உளுத்தம் பருப்பு காய்ந்த மிளகாய் கறிவேப்பிலை தாளித்து தண்ணீர் உப்பு சேர்த்து ரவையை போட்டு கிளறினால் ரவா உப்புமா!
2. மேற்கூறிய முறையில் ஒரு பெரிய வெங்காயத்தை நீளவாக்கில் மெல்லிசா நறுக்கி தாளிப்பில் சேர்த்து செய்ய கம கமக்கும் மணத்துடன் வெங்காய உப்புமா.
3. ரவையை சிறிது ஊற வைத்து மைதா உப்பு மிளகு சீரகம் இஞ்சி பச்சைமிளகா கறிவேப்பிலை கொத்தமல்லி மோர் சேர்த்து கரைத்து தோசை கல்லில் வார்த்தெடுக்க சூப்பரான ரவா தோசை.
4. ரவையில் சம பங்கு தயிர் சேர்த்து ஊறவைத்து, கடுகு கடலைப்பருப்பு முந்திரி கறிவேப்பிலை தாளித்து கொட்டி உப்பு மல்லிதழை சேர்த்து கலந்து இட்லிகளாக வார்த்தெடுக்க கலக்கலான ரவா இட்லி.
5. நெய்யில் மிளகு சீரகம் இஞ்சி முந்திரி கறிவேப்பிலை தாளித்து தண்ணீர் ஊற்றி உப்புடன் ரவையை போட்டு வெந்ததும், குழைய வேக வைத்த பாசிப் பருப்பு சேர்த்து கூட கொஞ்சம் நெய் சேர்த்து கிளறி இறக்க சுவையான ரவா பொங்கல்.
6. கடாயில் எண்ணெய் ஊற்றி வெங்காயம் தக்காளி இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கி காரட் பீன்ஸ் நறுக்கிப்போட்டு தண்ணீர் உப்பு சேர்த்து காய் வெந்ததும் ரவையை சேர்த்து கிளறி சிறிது நெய்யுடன் மல்லிதழை தூவி இறக்க அருமையான ரவா கிச்சடி.
7. பாலை கொதிக்க வைத்து ரவை சேர்த்து வெந்ததும் சர்க்கரை சேர்த்து கிளறி, நன்கு கரைந்து வந்ததும் தாராளம நெய் சேர்த்து பாத்திரத்தில் ஒட்டாமல் சுருண்டு வரும்போது நெய் தடவிய தட்டில் கொட்டி துண்டுகளாக்க ரவா பர்பி.
8. கொதிக்கும் நீரில் ரவையை போட்டு வெந்ததும் சர்க்கரை நெய் சேர்த்து கிளறி வறுத்த முந்திரி சேர்த்து இறக்க நாவில் நழுவும் ரவா கேசரி.
9. ரவையுடன் மைதா சர்க்கரை சேர்த்து தளர பிசைந்து எண்ணையில் கொஞ்சம் கொஞ்சமா ஊற்றி சுட்டெடுக்க ரவைப் பணியாரம்.
ஒன்றிலிருந்து ஆறுவரை மேலே கூறிய உணவுகளுக்கு, தேங்காய் பச்சைமிளகாய் உப்பு சேர்த்து சுலபமா அரைத்தெடுத்த சட்னியே தொட்டுக்கொள்ளப் போதுமானது.