அவலை வைத்து இவ்வளவு டிபன் செய்யலாமா?

அவல்
அவல்Intel

அவல் சாப்பிடுவதற்கு மிகவும் டேஸ்டாக இருக்கும். காரம், இனிப்பு என இரண்டு வகையிலும் அவலை செய்யலாம். இரண்டிலுமே அட்டகாசமான டேஸ்டை கொடுக்கும். சிறு குழந்தைகளுக்கு அவல் ரொம்பவே பிடிக்கும். அவல் ஒரு எளிமையாக கிடைக்கும் பொருளாகும். அதை வைத்து என்ன செய்தாலும் அது நமக்கு எளிதான வேலை தான்.

வெறும் அவலை கடையில் வாங்கி பால் ஊற்றி சர்க்கரை சேர்த்து சாப்பிட்டாலே போதும். சுவை நாக்கிலே நிற்கும். மேலும் பெண்களுக்கு அவலை வைத்து என்ன செய்யலாம் என்று தெரியாது. அதிகபட்சம் அவல் உப்மா செய்வார்கள். அதை தாண்டி என்ன செய்வதென்று பலருக்கும் தெரியாது. அப்படிப்பட்டவர்களுக்கு இதோ அவலை வைத்து என்னென்ன செய்யலாம் என்று பார்க்கலாம்.

அட்டகாசமான அவல் ஊத்தாப்பம்:

தேவையான பொருட்கள்:

அவல் - 1 கப்

வெங்காயம் - 1

துருவிய இஞ்சி - ½ டீஸ்பூன்

கடலை மாவு - 2 டேபிள் ஸ்பூன்

அரிசி மாவு - 2 டேபிள்ஸ்பூன்

பச்சை மிளகாய் - 1

மஞ்சள் பொடி - ¼ டீஸ்பூன்

கறிவேப்பிலை - சிறிதளவு

கரம் மசாலா பொடி - ½ டீஸ்பூன்

கொத்தமல்லி - சிறிதளவு

மிளகாய் பொடி - ½ டீஸ்பூன்

சீரகப்பொடி - ½ டீஸ்பூன்

மிளகு பொடி - ½ டீஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

முதலில் ஒரு பாத்திரத்தில் கழுவி சுத்தம் செய்து வைத்துள்ள அவலுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்கு மசித்து கொள்ளவும். இதனுடன் நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை, கொத்தமல்லி, பச்சை மிளகாய் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கலக்கவும். நீங்கள் விரும்பினால் இதில் துருவிய காய்கறிகளையும் சேர்த்துக் கொள்ளலாம்.

அடுத்ததாக மஞ்சள் பொடி, மிளகாய் பொடி, சீரகப்பொடி மற்றும் சீரகப்பொடி சேர்த்து நன்கு கலக்கவும்.

இதனுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கட்டிகள் இல்லாமல் தோசை மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும் இப்போது தோசைக்கல்லை சூடாக்கி சிறிய ஊத்தாப்பங்களாக ஊற்றி, இருபுறமும் பொன்னிறமாக வரும் வரை வேகவைத்து பரிமாறலாம்.

அசத்தலான அவல் மசாலா சப்பாத்தி:

தேவையான பொருட்கள்:

அவல் - 1 கப்

கோதுமை மாவு - 1/2

வேகவைத்த உருளைக்கிழங்கு - 2

இஞ்சி பூண்டு விழுது

மிளகாய் பொடி - 1 டீஸ்பூன்

மஞ்சள் பொடி - ஒரு சிட்டிகை

சீரகப்பொடி - ½ டீஸ்பூன்

கொத்தமல்லி இலைகள் - சிறிதளவு

பச்சை மிளகாய் - 1

தயிர் - 2 டேபிள் ஸ்பூன்

துருவிய கேரட் - ½ கப்

ஆலிவ் எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

தண்ணீர் - தேவையான அளவு

செய்முறை:

ஒரு கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு விழுது, மஞ்சள் பொடி, சீரகப்பொடி மற்றும் மிளகாய் பொடி சேர்க்கவும்.

இதனுடன் ஒரு கப் தண்ணீர் மற்றும் ஆலிவ் எண்ணெய் சேர்த்து கொதிக்க விடவும். தண்ணீர் கொதிக்கும் பொழுது பொடித்து வைத்துள்ள அவல் சேர்த்து கிளறவும். இது கெட்டியான பதத்திற்கு வந்த பிறகு அடுப்பை அணைக்கவும். அவல் கலவையுடன் துருவிய கேரட், மசித்த உருளைக்கிழங்கு, கொத்தமல்லி இலைகள், தேவையான அளவு உப்பு மற்றும் கோதுமை மாவு சேர்த்து நன்கு கலந்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து வைக்கவும். இதனை சப்பாத்திகளாக திரட்டி, தோசை கல்லில் நன்கு திருப்பிப் போட்டு இருபுறமும் வேகவிட்டு பரிமாறலாம். இந்த இரண்டு அவல் ரெசிபிக்களையும் நீங்களும் உங்கள் வீட்டில் செய்து ருசித்து மகிழுங்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com