அனைவரும் விரும்பிச் சாப்பிடும் டேஸ்டி வெஜ் பப்ஸை வீட்டிலேயே தயாரிக்கலாம். வெளியில் வாங்கத் தேவையில்லை. மாலை டிபனுக்கு ஏற்றது.
தேவையான பொருட்கள்:
* சலித்த கோதுமை மாவு 3 கப்
* ரீஃபைன்டு ஆயில் 1 கப்
* உப்பு 1/4 டீஸ்பூன்
முதலில் இந்த மூன்றையும் வாயகன்ற பாத்திரமொன்றில் போட்டு மிக்ஸ் செய்யவும்.பின்னர், தேவையான தண்ணீர்விட்டு சப்பாத்திக்கு பிசைவது மாதிரி பிசைந்து கொள்ளவும். இதை ஒரு தட்டைப் போட்டு சுமார் 10 நிமிடங்கள் மூடி வைக்கவும்.
வெஜ் ஸ்டஃப் தயாரிப்பு:
2 உருளைக் கிழங்குகளை வெந்தெடுத்து, தோல் நீக்கி மசித்துக் கொள்ளவும்.
2 வெங்காயத்தை தோல் நீக்கி பொடியாக அரிந்து வைக்கவும்.
2 கேரட்டை துருவி வைத்துக்கொள்ளவும்.
வாணலியில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் விட்டு காய்ந்ததும், அரை - அரை டீஸ்பூன் கடுகு, சீரகம் போட்டு வெடித்த பின், கொஞ்சம் கருகப்பிலை, 1/4 டீஸ்பூன் மஞ்சள் பொடி, கரம் மசாலா, மிளகாய்த்தூள், சீரகத்தூள் சேர்த்து லேசாக கிண்டிய பிறகு, பொடியாக நறுக்கி வைத்திருக்கும் வெங்காயத்தைப் போட்டு நன்றாக வதக்கவும். அடுப்பை அணைக்கவும்.
இத்துடன், மசித்து வைத்திருக்கும் உருளைக் கிழங்கு, கேரட் துருவல், சிறிது இஞ்சிப் பூண்டு மிக்ஸ், தேவையான உப்பு ஆகியவைகளைச் சேர்த்து நன்கு மிக்ஸ் செய்யவும். பொடியாக அரிந்த கொத்தமல்லி இலைகளைச் சேர்க்கவும்.
கோதுமை மாவை மறுபடியும் நன்கு பிசையவும். நீளமாக இதை உருட்டி 8 துண்டுகளாக கட் செய்யவும். பின்னர் உருண்டையாக்கவும். சப்பாத்தி மாதிரி இட்டு தனித் தனியாக வைக்கவும்.
ஒரு சப்பாத்தி ஷீட் மீது, லேசாக எண்ணெய் தடவி, சிறிது மாவை பரவலாக தூவவும். பிறகு அதன் மீது மற்றொரு ஷீட் சப்பாத்தி, லேசாக எண்ணெய், பரவலாக மாவு இவ்வாறு 4 / 4 ஷீட்களாக தயார் செய்து, குழவியால் லேசாக ப்ரெஸ் செய்துகொண்டு, சதுர வடிவில் கட் பண்ணவும். ஓரங்களை நீக்கி விடலாம்.
ஒவ்வொரு சதுர வடிவிற்குள், தயாரித்து வைத்திருக்கும் வெஜ் ஸ்டஃபை கொஞ்சம் வைத்து, மூடி, ஓரங்களைத் தண்ணீர் தொட்டு ப்ரெஸ் செய்யவும்.
இவ்வாறு எல்லாவற்றையும் செய்தபின், வாணலியில் எண்ணெய் கொஞ்சம் விட்டு காய்ந்ததும், அடுப்பை ஸிம்மில் வைக்கவும். ப்ரெஸ் செய்து ரெடியாக வைத்திருப்பதை இரண்டிரண்டாக மெதுவாக அதில் போட்டு, லேசாக மூடி வைக்கவும். பின்னர் திறந்து அதைத் திருப்பிப்போட்டு, மீண்டும் மூடவும். சில நொடிகளில் பொன்னிறமான பப்ஸ் ரெடி. வெளியே எடுத்துச் சாப்பிட்டால் யம்மியோ யம்மிதான்! தொட்டுக்கொள்ள ஒன்றும் தேவையில்லை.