

அவல் வெஜிடபிள் புலாவ்
தேவையான பொருட்கள்:
அவல் – 2 கப்
தேங்காய்ப்பால் – 2 கப்
பொடியாக நறுக்கிய கேரட் – 1 கப்
பொடியாக நறுக்கிய பீன்ஸ் – 1 கப்
பச்சை பட்டாணி – 1 கப்
பெரிய வெங்காயம் – 1
தக்காளி – 1
கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை – சிறிதளவு
புதினா – ஒரு கைப்பிடி
பச்சை மிளகாய் – 6
பட்டை, கிராம்பு, ஏலக்காய் – தாளிக்க தேவையான அளவு
முந்திரிப்பருப்பு – 10
இஞ்சி–பூண்டு விழுது – 2 ஸ்பூன்
கரம் மசாலா தூள் – 1 ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
தேங்காய் எண்ணெய் – தாளிக்க தேவையான அளவு
நெய் – 2 ஸ்பூன்
செய்முறை:
முதலில் அவலை சுத்தம் செய்து தண்ணீரில் அலசி வடித்து வைக்கவும். அதில் கொஞ்சம் உப்பு சேர்த்து 1½ கப் அளவு தேங்காய்ப்பாலில் நனைத்து வைக்கவும்.
பெரிய வெங்காயத்தையும் பச்சை மிளகாயையும் நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும். தக்காளியை பொடியாக நறுக்கவும்.
அடுப்பில் மிதமான தீயில் வாணலியை வைத்து தேங்காய் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பட்டை, கிராம்பு, ஏலக்காய், முந்திரி சேர்த்து பொரித்துக்கொள்ளவும். பின்னர் பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை, புதினா சேர்த்து வதக்கவும்.அதன் பிறகு பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
பிறகு வெங்காயத்தை சேர்த்து கண்ணாடி பதத்தில் வரும் வரை வதக்கி,தக்காளியை சேர்த்து நன்கு மசிந்து வரும் வரை வதக்கவும். காய்கறிகளை சேர்த்து கிளறி, கரம் மசாலா தூள் மற்றும் இஞ்சி–பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
உப்பு சேர்த்து, மூடி வைத்து காய்கள் ஆவியில் முக்கால் பதம் வேகும் வரை விடவும். காய்கள் முக்கால் பதம் வெந்ததும் மீதமுள்ள தேங்காய்ப்பாலை ஊற்றி கிளறி மூடி வேகவைக்கவும். காய்கள் நன்றாக வெந்ததும் நனைத்து வைத்துள்ள அவலை சேர்த்து மெதுவாக கிளறி ஐந்து நிமிடம் வரை மூடி வைத்து வேகவிடவும்.
இறுதியாக பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை தூவி, நெய் சேர்த்து கிளறி இறக்கவும். சாம்பார் அல்லது தக்காளி சட்னியுடன் பரிமாறவும். தேங்காய்ப்பாலில் நனைத்து செய்வதால் சுவை மிகவும் அதிகமாக இருக்கும்.