சமையலில் கில்லியாக இருக்கணுமா? இந்த குறிப்புகளை ஃபாலோ பண்ணுங்க!

Cooking special
Cooking special

சின்ன சின்ன விஷயங்கள் கூட நம் சமையலை சிறப்பாக்கிவிடும். இந்த காலத்தில் ஆண் பெண் வித்தியாசமின்றி அனைவரும் சமைக்கின்றனர். அப்படி சமைக்கும்போது சின்ன சின்ன தவறுகள் ஏற்படும். அதனை எப்படி சரி செய்வது என்று பார்க்கலாம்!

அடையோ வடையோ எது செய்யும்போதும் சில சமயம் தண்ணீர் அதிகமாகிவிட்டால் இரண்டு ஸ்பூன் கார்ன் பிளாக்ஸை பொடி பண்ணி சேர்த்து கலக்க மாவு கெட்டியாவதுடன் சுவையும் சூப்பராக இருக்கும்.

எண்ணெய் பலகாரங்கள் செய்யும்போது காறல் எடுக்காமல் இருக்க எண்ணெய் சூடானதும் கொஞ்சம் புளி அல்லது இஞ்சியை தட்டிப் போட்டு நன்கு கரிய விட்டு எடுத்துவிடவும். இப்போது பலகாரங்கள் செய்ய காறல் வாடை வராது.

சப்பாத்தி செய்து எண்ணெய் வடிகட்டியில் போட்டு மூடி வைக்க அடியில் உள்ள சப்பாத்திகள் வேர்த்து ஈரமாகாமல் இருக்கும்.

சப்பாத்தி, பூரி ஆகியவற்றிற்கு மாவு பிசையும்போது முழுவதும் தண்ணீர் சேர்க்காமல் ஒரு கப் பாலை சேர்த்து பிசைந்து செய்ய ருசியாக இருப்பதுடன் மிருதுவாகவும் இருக்கும்.

தக்காளி, லெமன் போன்ற கலந்த சாதங்கள், பிரியாணி போன்றவை செய்யும்போது குக்கரின் மூடியை திறந்ததுமே சிறிது எலுமிச்சம் பழச்சாறு விட்டு கிளற அவை குழைந்து விடாமல் உதிர் உதிராக வரும். ருசியும் கூடும்.

வாழைப்பூ, வாழைத்தண்டு ஆகியவை நறுக்கி வைத்தால் நிறம் மாறி கருப்பு தட்டும். இதைத் தவிர்க்க நறுக்கியவுடன் சிறிது மஞ்சள்தூள், தயிர் ஒரு கரண்டி கலந்த நீரில் போட்டு வைக்க கருக்காமல் பிரஷ்ஷாக இருக்கும்.

சேனைக்கிழங்கு, கருணைக்கிழங்கு ஆகியவற்றை வறுவல் செய்து சாப்பிடும் போது சில சமயம் நாக்கு அரிக்கும். இதற்கு புளியை கெட்டியாக கரைத்த தண்ணீர் ரெண்டு ஸ்பூன் விட்டு தேவையான உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து பிசிறி வைத்து சிறிது நேரம் கழித்து பொரித்தெடுக்க மிகவும் ருசியான, மொறு மொறுப்பான வறுவல் தயார்.

வாழைப்பூ, வாழைத்தண்டு
வாழைப்பூ, வாழைத்தண்டு

எந்த கலந்த சாதம் செய்யும் போதும் குறிப்பாக தக்காளி, எலுமிச்சம் பழ சாதம், தேங்காய் சாதம் செய்யும்போது இஞ்சி, பச்சை மிளகாய் இரண்டையும் மிக்ஸியில் போட்டு இரண்டு சுற்று சுற்றி ஒன்றிரண்டாக அரைத்து சேர்க்க மணமும் ருசியும் கூடும்.

சில சமயம் சப்பாத்தி செய்யும்போது வரவரவென்று கடினமாக இருக்கும். பஞ்சு போல் மிருதுவான சப்பாத்தி செய்ய இரண்டே விஷயங்கள்தான் செய்ய வேண்டும். ஒன்று தயிர் இரண்டு ஸ்பூன், மற்றொன்று எண்ணெய் இரண்டு ஸ்பூன் சேர்த்து தேவையான நீர் விட்டு மாவு பிசைந்து அரை மணி நேரம் ஊறிய பிறகு சப்பாத்தி திரட்ட மிகவும் பஞ்சு போன்ற சப்பாத்தி அனைவரின் பாராட்டையும் பெற்று தரும்.

இதையும் படியுங்கள்:
வெற்றிக்கு திறமையோடு பொறுமையும் அவசியம்!
Cooking special

தோசை வார்க்கும்போது தோசைக்கல்லில் மாவு ஒட்டிக்கொண்டு சரியாக வராமல் இருந்தால் சிறிது புளியை எடுத்து ஒரு துணியில் கட்டி அதை எண்ணெயில் தொட்டு கல்லில் தேய்த்து விட்டு தோசை வார்க்க பட்டுப்பட்டாக வரும்.

தயிர்வடை செய்யும்போது பொதுவாக வடைகளை வெந்நீரில் மூக்கி எடுத்து தயிரில் போடுவோம். அப்படி செய்யாமல் சூடான பாலில் சிறிது தோய்த்து எடுத்து தயிரில் போட ருசியும் மாறாது, புளிப்பும் அதிகமாகாது. அத்துடன் மேலே பொடியாக நறுக்கிய கொத்தமல்லி, துருவிய கேரட் சேர்த்து பரிமாற கண்ணுக்கும் நாவிற்கும் விருந்தாகும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com