என்னது? முருங்கைக்காய் பிரியாணியா?

முருங்கைக்காய் பிரியாணி...
முருங்கைக்காய் பிரியாணி...

கப்பட்ட சத்துக்கள் நிறைந்தது முருங்கைக்காய்! முருங்கைக்காயின் வித்தியாசமான ருசியை விரும்பாதவர் யாரும் கிடையாது. இதுவரை முருங்கைக்காயில் சாம்பார், குழம்பு, குருமா, கூட்டு என என்னென்னவோ செய்திருப்போம். வாருங்கள்... இன்று முருங்கைக்காய் பிரியாணி செய்வது எப்படி என்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:
பாஸ்மதி அரிசி - 500 கிராம், முருங்கைக்காய் - 500 கிராம், வெங்காயம் - 4, தக்காளி - 3, பச்சை மிளகாய் – 4, இஞ்சி பூண்டு விழுது - 50 கிராம், கொத்தமல்லி - சிறிதளவு, புதினா - சிறிதளவு, எண்ணெய் - 100 மிலி, நெய் - 50 மிலி. மிளகாய்த்தூள் - 1 ஸ்பூன், தயிர் - 150 மிலி, எலுமிச்சை சாறு - ½ மூடி. பட்டை - 1 துண்டு,  கிராம்பு - 3,  ஏலக்காய் - 2, அன்னாசிப்பூ, பிரிஞ்சி இலை - 2, சோம்பு - 1 ஸ்பூன்,  சீரகம் - 1 ஸ்பூன். ½  மூடி தேங்காயின் - பால், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

முருங்கைக்காயை 2 அங்குல நீளத்திற்கு துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும். ஒரு அகலமான பாத்திரத்தில் தயிர், மிளகாய்த்தூள், எலுமிச்சை சாறு, உப்பு சேர்த்து நன்கு கலந்தபின் முருங்கைத் துண்டுகளைப் பிரட்டி ஒரு மணி நேரம் வரை ஊறவைக்கவும். ஒரு அடி கனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய், நெய் சேர்த்து காய்ந்ததும் பட்டை, கிராம்பு, ஏலக்காய், அன்னாசிப் பூ, பிரிஞ்சி இலை, சோம்பு, சீரகம் இவை அனைத்தையும் சேர்த்து தாளிக்கவும்.

அடுத்து நீளவாக்கில் நறுக்கிய வெங்காயம் மற்றும் கீறிய பச்சை மிளகாயை சேர்த்து நன்கு வதக்கவும். வெங்காயம் நன்கு சிவந்த பிறகு மல்லி மற்றும் புதினா இலைகளைச் சேர்த்து வதக்கவேண்டும்.

இதையும் படியுங்கள்:
மன அமைதிக்கு மருந்து நம்மிடமே இருக்கு!
முருங்கைக்காய் பிரியாணி...

பிறகு இஞ்சி பூண்டு விழுதினையும் சேர்த்து பச்சை வாசனை நீங்கும் வரை வதக்கி, பொடியாக நறுக்கிய தக்காளியைச் சேர்த்து வதக்கவேண்டும். தக்காளி நன்றாக வதங்கியபிறகு, தயிருடன் பிசைந்து வைத்துள்ள முருங்கைக்காய்த் துண்டுகளைச் சேர்த்து 5 நிமிடங்கள் வதக்கவும்.

அடுத்து தேங்காய்ப்பால் மற்றும் தண்ணீரை ஊற்றி கலந்து நன்கு கொதிக்க விடவும். (அரிசியின் அளவு 2 கப் என்றால் தேங்காய்ப்பால், தண்ணீர் கலவையின் அளவு 3 கப்). நன்றாக கொதி வந்ததும் ஊறவைத்த அரிசியையும் உப்பையும் சேர்த்து கிளறிவிடவும். தண்ணீர் மற்றும் அரிசி இவை இரண்டும் சம அளவு வரும் வரை அவ்வப்போது கிளறிக்கொண்டே இருக்கவும்.

அரிசியானது 80 சதவீதம் வெந்த பிறகு அடுப்பை குறைந்த தீயில் வைத்து பாத்திரத்தை மூடி, அதன் மீது நல்ல கனமான பொருளை வைத்து, 10 நிமிடம் வேக வைக்கவும். இறுதியாக அடுப்பை அணைத்து 15 நிமிடங்கள் கழித்த பிறகே தம் போட்ட மூடியைத் திறக்க வேண்டும்!
அட்டகாசமான இந்தப் பிரியாணியை சாப்பிட்டதும்  'முருங்கைக்காய் பிரியாணியை வென்றார் உண்டோ?' - எனப் பாட்டு தன்னாலே வரும்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com