

குளிர்காலம் மற்றும் மழைக்காலத்தில் சூடாகவோ, காரமாகவோ ஏதேனும் செய்து சாப்பிட வேண்டும் போல இருக்கும். எப்போதும் வீட்டில் வடையும், பஜ்ஜியும் செய்து சாப்பிட்டு போரடித்து இருக்கும். இம்முறை வித்தியாசமான சுவையில் புதுமையான கோதுமை கார போளியை செய்து ருசிக்கலாம். இந்த கோதுமை கார போளி செய்யும் முறை எளிதானது. அதே நேரத்தில் இதற்கு வீட்டில் உள்ள சமையல் பொருட்களே போதுமானது. இதற்காக வெளியே சென்று எந்த சாமானும் வாங்க தேவை இல்லை.
தேவையான பொருட்கள்:
கோதுமை மாவு : 200 கிராம்
பெரிய வெங்காயம் : 2
மஞ்சள்தூள் : ஒரு தேக்கரண்டி
மிளகாய் தூள் : அரை தேக்கரண்டி
கடலை மாவு : 1 தேக்கரண்டி
சீரகம் : கால் தேக்கரண்டி
இஞ்சி : ஒரு தேக்கரண்டி
பச்சை மிளகாய் : 1
கறிவேப்பிலை : சிறிதளவு
கொத்தமல்லி : அரைக் கைப்பிடி
எலுமிச்சை சாறு : 1 தேக்கரண்டி
வெள்ளை எள்: 1 தேக்கரண்டி
சுடு தண்ணீர் - தேவையான அளவு
உப்பு : சிறிதளவு
செய்முறை:
முதலில் கோதுமை மாவை ஒரு அகன்ற பாத்திரத்தில் இட்டு அதனுடன் அரை ஸ்பூன் பொடி உப்பை போட்டு நன்கு கிளறி விடவும். அடுத்ததாக வெந்நீரை சிறிது சிறிதாக கோதுமைமாவில் விட்டு கட்டி படாமல் பிசைந்து கொள்ளவும். வெந்நீருடன் செய்யும் போது கோதுமை மாவு எளிதில் மிருதுவாகிவிடும். பிசையும் கோதுமை மாவு தளர்வாக இல்லாமல் கெட்டியாக இருக்கும்படி பார்த்துக்கொள்ளவும். பிசைந்த கோதுமை மாவை ஒரு மூடி போட்டு அரைமணி நேரத்திற்கு அப்படியே விட்டுவிடவும்.
அடுத்ததாக இரண்டு பெரிய வெங்காயத்தை நீளவாக்கில் நைசாக நறுக்கிக்கொள்ளவும், இதைப்போல பச்சை மிளகாயை பொடிப்பொடியாக நறுக்கிக் கொள்ளவும், இஞ்சித்துண்டை இன்னும் பொடியாக நறுக்கிக்கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் நறுக்கிய வெங்காயத்தை உதிரி உதிரியாக உதிர்த்து வைத்துக்கொள்ளவும். அதனுடன் நறுக்கிய பச்சை மிளகாய் இஞ்சி துண்டுகள் ஆகியவற்றை சேர்த்து கைகளால் கிளறிக்கொள்ளவும்.
இந்த கலவையில் கடலைமாவு, மிளகாய்தூள், மஞ்சத்தூள், சீரகம் ஆகியவற்றை கலந்து கொள்ளவும். இந்த கலவையில் சிறிது உப்பு மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து கிளறிவிடவும். இறுதியில் நறுக்கிய கருவேப்பிலை கொத்தமல்லி தழைகளை சேர்த்துக்கொள்ளவும்.
கோதுமை மாவுகளை சப்பாத்திபோல மெல்லியதாக போட்டு, அதனுள் இந்தக் காய்கறி கலவைகளை பரவலாக இட்டு, ரோல் போல சுருட்டி, சுருட்டிய ரோலை 4 ஆக நறுக்கிக் கொள்ளவும். நறுக்கிய ரோல்களை நேர் வாக்கில் வைத்து கைகளால் அல்லது, சப்பாத்தி குழவியால் சிறிய பரோட்டோ சைசில் லேசாக உருட்டிக் கொள்ளவும்.
இதன் மேல் சிறிது வெள்ளை எள்ளினை தூவி விட்டு, தோசைக்கல் அல்லது பானில் சிறிது எண்ணெய் விட்டு இந்தக் கார போளியை நன்கு வேகும் வரை காத்திருந்து எடுக்கவும். அதுவரை இருபுறமும் திருப்பிப் போடவும். லேசாக முறுவலாக மாறும் எடுத்துவிடவும்.
மாலை நேரத்தில், கோதுமை கார போளியை செய்து, தக்காளி சாஸ் உடன் சேர்த்து சாப்பிட அருமையாக இருக்கும்.