எந்த உணவுக்கு எந்த சைட் டிஷ் பெஸ்ட்?

எந்த உணவுக்கு எந்த சைட் டிஷ் பெஸ்ட்?

மைப்பது ஒரு கலை. இல்லை என்று சொல்ல முடியாது ஆனால் சமைத்ததை ரசித்து ருசித்து சாப்பிடுவது என்பது கலைகளுள் தலையாய கலை!

விதவிதமாக, புதுசுவைகளில் சைட்டிஷ் சமைத்துக் கொண்டால் வழக்கமான உணவு கூட விருந்து கணக்காக நம் நாவுக்கு இதம் தரும் .உங்கள் உணவு நேரம் எல்லாமே விருந்து நேரமாக அமர்க்களப்பட... உணவை ரசித்து ருசித்து சாப்பிட...

இதோ சில விஷயங்கள்.


*வெறும் மிளகு ரசம் வைத்தால் கூட  அதற்கு தொட்டுக்கொள்ள துவரம் பருப்பு துவையல் அரைத்து தொட்டுக்கொண்டு சாப்பிடும் போது அதன் சுவையே அலாதி.

*மணத்தக்காளி வத்தக் குழம்பு செய்யும்போது, காய்கறிகளை அளவாக நறுக்கி செய்த புத்தம் புதிதாய் தயிர் ஊற்றி தேங்காய் எண்ணெயில் கடுகு கருவேப்பிலை தாளித்து தேங்காய் எண்ணெய் மினுமினுக்க அவியல்.   மற்றும் சுட்ட அப்பளம்.

*வெண்பூசணி போட்ட மோர் குழம்பு தொட்டுக்கொள்ள சற்று காய்ந்த மிளகாய் அதிகம் சேர்த்த பீட்ரூட் பொரியல் மற்றும் வாழைக்காய் பால் கறி…

 *பருப்பு உருண்டை குழம்பு காரசாரமாக தொட்டுக் கொள்ள பீன்ஸ் உசிலி சுவை. 

*தேங்காய் சாதம், எலுமிச்சை சாதம்,புளி சாதம் இப்படி கலந்த வகை சாதங்களில் இறக்கும் தருவாயில் பொடியாக நறுக்கிய முந்திரியை எண்ணெயில் வறுத்து மேலே தூவி கூடவே வயிற்றுக்கு கெடுதல் செய்யாத ஏதேனும் ஒரு வகை காய்கறியில் கூட்டு.

*பொட்டுக்கடலை பொடி, பருப்பு பொடி ,கருவேப்பிலை பொடி, புதினா பொடி ,போன்ற பொடிகளை சூடான சோற்றில் விட்டோ நெய் விட்டோ போட்டு பிசைந்து வாழைக்காயை சுடச்சுட வறுத்து சாப்பிட்டு பாருங்கள்! 

*வெங்காய சாம்பார்,தொட்டுக் கொள்ள உருளை பட்டாணி கறி வேறொன்றும் தேவையில்லை. 

*சுடச் சுட பிஸிபேளாபாத், வெங்காய பச்சடி அப்பளப் பூ.

*தாளித்த பகளாபாத் தொட்டுக்கொள்ள கிளி மூக்கு மாங்காயை பொடியாக நறுக்கி காரம் போட்டு கடுகு பெருங்காயம் தாளித்து ஊறுகாய்.

சரி காலை மற்றும் இரவு உணவுக்கு உகந்த சைட்டிஷ்!

*துணியில் வார்த்த சூடான இட்லி, மல்லி சட்னி அல்லது அம்மியில் அரைத்த காரச்சட்னி. 

 *மெத்து மெத்தென்ற சப்பாத்திக்கு, தால் மக்கனி அல்லது தேங்காய் ,பெருஞ்சீரகம் அரைத்து விட்ட தக்காளி குழம்பு.

*தரமான அரிசியில் செய்த அருமையான இடியாப்பத்துக்கு மாப்பிள்ளை சொதி.

*வெள்ளை வெளேரென்று ஆப்பம் கூடவே ஏலக்காய் மணத்துடன் கூடிய தேங்காய் பால்.

*இஞ்சி, பெருஞ்சீரகம் காய்ந்த மிளகாய் எல்லாம் சரியான விகிதத்தில் சேர்த்த தவளை அடை தொட்டுக்கொள்ள சற்று மிளகாய் தூக்கலாக உளுத்தம் பருப்பு வாசத்துடன் கூடிய இட்லி பொடி (நல்லெண்ணெய் ஊற்றி).

 *காய்கறிகளை எல்லாம் கண்ணுக்கே தெரியாமல் பொடியாக நறுக்கி நெய் மற்றும் எண்ணெய் சற்று தாராளமாக ஊற்றி செய்த ரவா கிச்சடிக்கு(டிபன் களின் சூப்பர் ஸ்டார்) வெள்ளரிக்காய் அல்லது கேரட் தயிர் பச்சடி...

 *எண்ணெய் குடிக்காத பூரிக்கு, மிதமான காரத்துடன் கூடிய பட்டாணி குருமா.

 *பொடியாக நறுக்கிய வெங்காயம், இட்லி பொடி ஆங்காங்கே தூவி சுற்றிலும் எண்ணெய் விட்டு மொறுமொறுப்பா ஊத்தப்பத்துக்கு  புதினா சட்டினி அல்லது வேர்க்கடலை சட்டினி.

இப்படி எந்த உணவை சாப்பிட்டாலும் சரியான இணையுடன் சேர்த்து ரசித்து ருசித்து சாப்பிட வாழும்போதே சொர்க்கத்தை காணலாம். வாழ்க்கையில் இவ்வளவு கஷ்டப்பட்டு, துன்பப்பட்டு, துயரப்பட்டு, சிரமப்பட்டு... இப்படி நிறைய பட்டு பட்டு பட்டு... வேலைக்குச் சென்று சம்பாதிப்பது எல்லாம் எதற்காக பாஸ்! சந்தோஷமாக மகிழ்ச்சியோடு சாப்பிடத் தானே!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com