வெள்ளை வெளேர் வெண்பூசணி தயிர்க்குழம்பு!

வெண்பூசணி தயிர்க்குழம்பு
வெண்பூசணி தயிர்க்குழம்பு

மோர் குழம்பு, தயிர் குழம்பு என்றாலே பெரும்பாலும் அதில் மஞ்சள் தூள் சேர்த்து தாளித்துச் செய்வதே நம்முடைய வழக்கம். ஆனால்  வெள்ளை நிறத்தில் வெண்பூசணியை வைத்து சூப்பரான ஒரு தயிர் குழம்பு எப்படி செய்வது என்று பார்ப்போம்.

முதலில் 1/2 கிலோ வெண்பூசணியை தோல் சீவி சிறிய துண்டுகளாக வெட்டி ஒரு பாத்திரத்தில் போட்டு மூழ்கும் அளவிற்கு தண்ணீரை ஊற்றி, தேவையான அளவு உப்பு போட்டு, 2 பச்சை மிளகாய்களை கீறி இதனுடன் சேர்த்து பூசணிக்காயை கண்ணாடி பதத்திற்கு வேகவைத்து எடுத்துக் கொள்ளவும்.

ஒரு மிக்ஸியில்  தேங்காய் துருவல், பச்சை மிளகாய் - 3, இஞ்சி - சிறிய துண்டு, பூண்டு பல் - 3, சீரகம் - 1/2 ஸ்பூன் சேர்த்து கொஞ்சமாகத் தண்ணீர் ஊற்றி கொரகொரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

அடுப்பில் வாணலியை வைத்து 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, கடுகு - 1/2 ஸ்பூன், சீரகம் - 1/2 ஸ்பூன், பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் – 10 , வர மிளகாய் - 3, கறிவேப்பிலை  சேர்த்து தாளிக்கவும். இதனுடன் வேக வைத்த வெண்பூசணியையும் தண்ணீரோடு ஊற்றி, பெருங்காயத்தூள் – 1/4 ஸ்பூன் சேர்த்து  இரண்டு நிமிடங்கள் நன்றாக கொதிக்க விடவும் . 

அடுப்பிலிருந்து இறக்கிய பிறகு  அரைத்து வைத்திருக்கும் தேங்காய் விழுதை ஊற்றி கலந்து நன்றாக ஆற விடவும்.

இதையும் படியுங்கள்:
தொண்டை புண்களை குணமாக்கும் கிராம்பு டீ!
வெண்பூசணி தயிர்க்குழம்பு

சூடு முழுமையாக தணிந்தவுடன் 1/2 லிட்டர் அளவு புளிக்காத தயிரை கட்டிகள் இல்லாமல் அடித்து, வாணலியில் சேர்த்து தேவையான அளவு உப்பு போட்டு கலந்து 15 நிமிடங்கள் கழித்து பரிமாறவும்.

வெள்ளை வெளேர் நிறத்தில் வித்தியாசமான வெண்பூசணி தயிர்க்குழம்பு இவ்வளவு சுவையா என வியந்து போவீர்கள்.

பின்குறிப்பு:

*நன்கு புளித்த தயிரை இதற்கு பயன்படுத்தக்கூடாது.

*உப்பைக் கட்டாயமாக கடைசியில்தான் சேர்க்க வேண்டும்.

*அடுப்பை அணைத்துவிட்டு தான் தேங்காய் விழுதை வாணலியில் இருக்கும் காயோடு சேர்க்க வேண்டும். இல்லையென்றால் தேங்காய் திரிந்துவிடும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com