
வில்வ இலை இதயநோய்கள், கல்லீரல் மற்றும் கணைய நோய்களை போக்க உதவும். சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்கும். கல்லீரல் செயல்பாட்டை பலப்படுத்தும் வில்வப் பழம், வில்வ இலை ரசம் மற்றும் வில்வ இலைத்துவையல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
வில்வ மரத்தின் இலை காய் பழம் பூக்கள் வேர் என அனைத்துமே மருத்துவ சக்தி கொண்டது. வில்வ இலைகளில் நிறைய ஆன்ட்டிபயாட்டிக் நிறைந்துள்ளதால் பல்வேறு நோய்களை குணப்படுத்தும்.
வில்வ இலை ரசம்:
வில்வ இலை 15
தண்ணீர் 2 கப்
தனியா 1 ஸ்பூன்
மிளகு 1 ஸ்பூன்
சீரகம் 1/2 ஸ்பூன்
பூண்டு 4 பற்கள்
தக்காளி 1
புளி கொட்டைப்பாக்களவு
உப்பு தேவையானது
மஞ்சள் தூள் 1/2 ஸ்பூன்
கொத்தமல்லி சிறிது
தாளிக்க: கடுகு, சீரகம், காய்ந்த மிளகாய் 1, நெய்
வெறும் வாணலியில் தனியா, மிளகு, சீரகம் ஆகியவற்றை வறுத்துக் கொண்டு கடைசியாக வில்வ இலைகளையும் சேர்த்து இரண்டு பிரட்டு பிரட்டி சிறிது ஆறவிடவும். ஆறியதும் மிக்சியில் பொடித்து வைக்கவும்.
வாணலியில் நெய் விட்டு கடுகு, சீரகம், காய்ந்த மிளகாயை கிள்ளிப் போட்டு, நசுக்கிய பூண்டு சேர்த்து கடுகு பொரிந்ததும் 2 கப் தண்ணீர் விட்டு உப்பு, மஞ்சள் தூள், புளி, பொடியாக நறுக்கிய தக்காளி போட்டு ரெண்டு கொதி கொதித்ததும் அரைத்து வைத்துள்ள பொடியை சேர்த்து மேலும் அரை கப் தண்ணீர் விட்டு பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தூவி இறக்கவும்.
வில்வப் பழ ரசம்:
வில்வ பழம் 1
(மீடியம் சைஸ்)
தனியா மிளகு சீரகம் - வறுத்து பொடித்தது
தக்காளி 2
உப்பு தேவையானது
மஞ்சள் தூள் 1/2 ஸ்பூன்
கொத்தமல்லி சிறிது
தாளிக்க: கடுகு, சீரகம், காய்ந்த மிளகாய், நெய்
வில்வப் பழ ரசத்திற்கு புளி, பூண்டு தேவையில்லை. இதுவும் வில்வ இலை ரசம் போல்தான். ஆனால் இலைக்கு பதில் வில்வப் பழத்தை உடைத்து அதன் உள்ளிருக்கும் சதைப்பகுதியை ஸ்பூனால் சுரண்டி எடுத்து, அதன் மேல் ஓட்டுடன் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் விட்டு கொதிக்கவிடவும். சிறிது ஆறியதும் மிக்சியில் அடித்து வடிகட்டி எடுத்துக்கொண்டு வில்வ இலைக்கு பதில் இந்த பழத்தின் வடிகட்டிய சாறை சேர்த்து ரசம் வைக்கலாம்.
வாணலியில் நெய் விட்டு கடுகு, சீரகம், காய்ந்த மிளகாய் கிள்ளிப் போட்டு கடுகு பொரிந்ததும் தண்ணீர் விட்டு உப்பு, மஞ்சள் தூள், தக்காளித் துண்டுகள், மிளகு, சீரகத்தூள் சேர்த்துப் போட்டு கொதிக்க விடவும். அதில் அரைத்து வடிகட்டிய வில்வப் பழத்தின் சாறை சேர்த்து பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தூவி இறக்கவும்.
வில்வ இலைத் துவையல்:
வில்வ இலை ஒரு கைப்பிடி
மிளகு ஒரு ஸ்பூன்
சீரகம் அரை ஸ்பூன்
உப்பு 1/2 ஸ்பூன்
வெறும் வாணலியில் மிளகு சீரகம் இரண்டையும் நன்கு வறுத்தெடுக்கவும். பிறகு வில்வ இலைகளைப் போட்டு ஒரு பிரட்டு பிரட்டி சிறிது தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் விழுதாக அரைத்தெடுக்கவும் இதனை வாரத்திற்கு இரண்டு நாட்கள் சாப்பிட வைரஸ் நோய்கள், காய்ச்சல், உடலில் தேவையற்று இருக்கும் நச்சுக்கழிவுகளை வெளியேற்றும்.