

குளிர் காலத்தில் குழந்தைகளுக்கு அதிகமாகவே பசி எடுக்கும். அந்த சமயத்தில் குழந்தைகளுக்கு நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் ஊட்டச்சத்துள்ள உணவு கொடுக்க வேண்டியது அவசியம். அவர்களுக்கான சுவையான சத்துமிக்க 4 உணவுகளை இந்தத் தொகுப்பில் பார்ப்போம்.
கீரை சப்பாத்தி:
கோதுமை மாவு, அரைத்த கீரை (கீரையை தண்ணீர் சேர்த்து அரைக்க வேண்டும்), சிறிது எண்ணெய் மற்றும் உப்பு ஆகியவற்றை தண்ணீர் கலந்து நன்றாக பிசைந்து வைக்கவேண்டும்.
சிறிது நறுக்கப்பட்ட பச்சை மிளகாய், கேரட், பன்னீர், இஞ்சி பூண்டு பேஸ்ட், கொத்தமல்லி மற்றும் உப்பு சேர்த்து கலந்து வைக்கவேண்டும்.
அந்த கோதுமை கீரை மாவை சப்பாத்தி வடிவத்தில் தேய்த்து, நடுவில் அந்த கேரட் கலவை வைத்து, ரோல் செய்ய வேண்டும். பின்னர் எண்ணெய்யில் போட்டு கோல்டன் ப்ரோன் மாறும் நிலையில் எடுத்து தயிருடன் சேர்த்து குழந்தைகளுக்கு கொடுத்தால் சுவையாக இருக்கும்.
குடைமிளகாய் சாதம்:
ஒரு பாத்திரத்தில் நறுக்கிய சிவப்பு, மஞ்சள் மற்றும் பச்சை குடைமிளகாய் மற்றும் பேபிகார்ன் ஆகியவற்றை போட்டு ஒரு ஐந்து நிமிடங்கள் நன்றாக வேகவைக்கவும். பிறகு அந்த பாத்திரத்தில் அரைத்த தக்காளி, தக்காளி கெட்ச்சப் மற்றும் சர்க்கரை சேர்த்து நன்றாக வேகும் வரை கலந்துவிட வேண்டும். பின்னர் அதனுடன் வடித்த சாதம், மிளகு, உப்பு சேர்த்து நன்றாக கலந்து, இரண்டு நிமிடங்கள் வேகவைத்து இறக்கினால், சுவையான, குளிருக்கு இதமான குடைமிளகாய் சாதம் தயார்.
வெஜ் பாஸ்தா:
ஒரு பாத்திரத்தில் எண்ணெய் சேர்த்து நறுக்கிய வெங்காயம் மற்றும் இஞ்சி பேஸ்ட் சேர்த்து இரண்டு நிமிடங்கள் வேகவைக்க வேண்டும். பின்னர் நறுக்கிய குடை மிளகாய், ப்ரோக்கோலி மற்றும் கேரட் சேர்த்து கலந்துவிடவும். பிறகு சிறிதாக நறுக்கிய தக்காளி மற்றும் உப்பு சேர்த்து மூன்று நிமிடங்கள் வேகவைக்க வேண்டும். அதன்பிறகு பேபி கார்ன், தக்காளி கெட்ச்சப் சேர்த்து இரண்டு நிமிடங்கள் வேக வைக்கவேண்டும். இதனுடன், வேக வைத்த பாஸ்தா சேர்த்து ஐந்து நிமிடங்கள் வேக வைத்தப்பிறகு குழந்தைகளுக்கு கொடுத்தால் குளிருக்கு இதமான உணவாக இருக்கும்.
பனீர் பர்கர்:
பனீருடன் வேகவைத்த பச்சை பட்டானி, கொத்தமல்லி, பிரெட் க்ரம்ப்ஸ், உப்பு மற்றும் பச்சை மிளகாய் பேஸ்ட் சேர்த்து கட்லட் வடிவில் செய்து எண்ணெய்யில் வேகவைத்து எடுக்கவும்.
பின்னர் பர்கருக்கு பயன்படுத்தும் கோதுமை பன்னை இரண்டாக கட் செய்து வெண்ணெய் தடவி சுடவைக்கவும். பின்னர் இரண்டு பன்களுக்கு இடையே கீரை இலை, செய்து வைத்த கட்லட், மாயோனைஸ், ரவுண்டு வடிவத்தில் கட் செய்த தக்காளி, வெங்காயம் வைத்து மிளகு பவுடர், உப்பு தூவி கொடுத்தால் சுவையான ஆரோக்கியமான பர்கர் தயாராகிவிடும்.