
பூண்டு வெந்தய தேங்காய்ப்பால் கஞ்சி:
பச்சரிசி 200 கிராம்
வெந்தயம் 1 1/2 ஸ்பூன்
பூண்டு 10 பற்கள்
தேங்காய் - 1 மூடி
உப்பு தேவையானது
அரிசியை கழுவி குக்கரில் போட்டு 5 கப் தண்ணீர்விட்டு வெந்தயம், தோல் உரித்த பூண்டு ஆகியவற்றை சேர்த்து 3 விசில் விட்டதும் அடுப்பை சிம்மில் வைத்து ஐந்து நிமிடங்கள் வைக்க பதமாக வெந்திருக்கும். பிரஷர் இறங்கியதும் குக்கரைத் திறந்து கனமான கரண்டியால் நன்கு மசித்து கொள்ளவும். தேங்காயை சிறிது வெதுவெதுப்பான தண்ணீர் விட்டு மிக்ஸியில் அரைத்து வடிகட்ட தேங்காய்ப்பால் தயார். இப்பொழுது வேகவைத்து மசித்த கஞ்சியில் உப்பு, தேங்காய்ப்பால் சேர்த்து சிறிது சூடாக இருக்கும் பொழுதே சாப்பிட ருசியாக இருக்கும்.
ரத்த அழுத்தத்தை குறைக்கும். செரிமான பிரச்னைக்கு உதவும். உடல் சூடு, வயிற்றுப்புண், வாய்ப்புண்ணை குணமாக்கும் அற்புதமான கஞ்சி இது.
உடலுக்கு பலமும் குளிர்ச்சியும் தரும் வெந்தயக்களி:
புழுங்கல் அரிசி 1 கப்
வெந்தயம் 1/4 கப்
வெல்லம் 2 கப்
நல்லெண்ணெய் 1/2 கப்
அரிசியையும் வெந்தயத்தையும் சேர்த்து நன்கு கழுவி ஒரு மணி நேரம் ஊறவிடவும். வெல்லத்தை சிறிதளவு தண்ணீர் விட்டு அடுப்பில் வைத்து கரைந்ததும் கல்மண் போக வடிகட்டிக் கொள்ளவும். மிக்ஸியில் ஊறவைத்த அரிசி, வெந்தயத்தை சேர்த்து தேவையான அளவு தண்ணீர் விட்டு விழுதாக அரைத்துக் கொள்ளவும். கடைசியாக வடிகட்டி வைத்துள்ள வெல்லத் தண்ணீரை சேர்த்து ஒரு சுற்று சுற்றி எடுக்கவும்.
அடுப்பில் வாணலியை வைத்து நல்லெண்ணெய் விட்டு அரைத்து வைத்துள்ள மாவை சேர்த்து கைவிடாமல் கிளறவும். அடுப்பை மிதமான சூட்டில் வைத்து அடிப்பிடிக்காமல் கிளறிக்கொண்டே இருக்கவும். வெந்ததா என்று சரி பார்க்க கையில் சிறிதளவு எண்ணெயை தொட்டுக்கொண்டு சின்ன உருண்டையாக எடுத்துப் பார்த்தால் நன்கு வெந்தது தெரியும். மிகவும் ருசியான உடலுக்கு குளிர்ச்சியைத்தரும் வெந்தயக்களி தயார்.
இந்தக் களியை எப்படி சாப்பிட வேண்டும் என்றால் களியை சிறிதளவு உருண்டையாக எடுத்து வைத்து அதன் நடுவில் சிறு குழி ஏற்படுத்தி அதில் சிறிதளவு நல்லெண்ணெய், வெல்லத்தூள் கலந்து சாப்பிட மிகவும் ருசியாக இருக்கும்.
பருப்பு துவையல்:
உடைத்த கடலை 2 கைப்பிடி
உப்பு தேவையானது
தேங்காய்த் துருவல் 2 ஸ்பூன்
பூண்டு 2 பல்
பச்சை மிளகாய் 1 அ 2
காரத்திற்கு ஏற்ப
உடைத்த கடலை, தேங்காய்த் துருவல், பூண்டு, பச்சை மிளகாய், தேவையான உப்பு அனைத்தையும் சேர்த்து மிக்ஸி ஜாரில் போட்டு இரண்டு சுற்று சுற்றவும். தேவையான அளவு தண்ணீர் விட்டு விழுதாக அரைக்காமல் சிறிது கரகரப்பாக அரைத்து எடுக்க ஜோரான கஞ்சிக்கு ஏற்ற பருப்புத் துவையல் தயார்.