அழகர் கோவில் தோசையை கள்ளழகர் கோவில் தோசை என்றும் கூறுவார்கள். மதுரையில் இந்த தோசை மிகவும் பிரபலம். மதுரையில் உள்ள அழகர் கோவிலில் இந்த தோசை கொடுக்கப்படுவதால் இதற்கு அழகர் கோவில் தோசை என்ற பெயர் வந்தது. அத்தகைய சிறப்பு வாய்ந்த அழகர் கோவில் தோசையை எப்படி சுலபமாக செய்யலாம்ன்னு பார்க்கலாம் வாங்க.
அழகர்கோவில் தோசை செய்ய தேவையான பொருட்கள்;
பச்சரிசி-1கப்.
கருப்பு உளுந்து-1/2 கப்.
உப்பு- தேவையான அளவு.
மிளகு-1 தேக்கரண்டி.
ஜீரகம்-1 தேக்கரண்டி.
நெய்- தேவையான அளவு.
அழகர்கோவில் தோசை செய்முறை விளக்கம்;
முதலில் 1 கப் பச்சரிசியை ஒரு பவுலில் எடுத்துக் கொண்டு அது மூழ்கும் வரை தண்ணீர் சேர்த்து 4 மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும். பிறகு ½ கப் கருப்பு உளுந்தையும் மூழ்கும் வரை தண்ணீர் சேர்த்து அதையும் 4 மணி நேரம் ஊறவைக்கவும்.
இப்போது கருப்பு உளுந்தை கொஞ்சமாக தண்ணீர் விட்டு கொரகொரப்பாக மிக்ஸியில் அரைத்து எடுத்துக் கொள்ளவும். இப்போது அரிசியை எடுத்து அதனுடன் சிறிது தண்ணீர் விட்டு ரொம்ப அரைக்காமல் கொஞ்சம் கொரகொரப்பாக அரைத்து எடுத்துக்கொள்ளவும். இதை உளுந்து மாவுடன் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து விட்டுக் கொள்ளவும். இப்போது இதை 4 மணி நேரம் மூடி வைத்துவிடவும். பிறகு 1 தேக்கரண்டி மிளகு நசுக்கி போடவும், 1 தேக்கரண்டி ஜீரகம் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
சூடான தோசைக்கல்லில் 1 தேக்கரண்டி நெய் விட்டு மாவை சின்ன தோசையாக ஊற்றிக்கொள்ளுங்கள். இரண்டு பக்கமும் நன்றாக பொன்முருவலாக வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். இந்த தோசை வெளிப்பக்கம் முருவலாகவும், உள்ளே மிருதுவாகவும் இருக்கும். நீங்களும் ஒருமுறை வீட்டில் இந்த ரெசிபியை ட்ரை பண்ணி பாருங்கள்.
சுட்டக்கத்தரிக்காய் சட்னி செய்ய தேவையான பொருட்கள்;
பெரிய கத்தரிக்காய்-1
புளி- எலுமிச்சை அளவு.
உளுத்தம்பருப்பு-2 தேக்கரண்டி.
கடலைப்பருப்பு-1 தேக்கரண்டி.
வரமிளகாய்-5
கருவேப்பிலை-1/4 கப்.
உப்பு- தேவையான அளவு.
எண்ணெய்-1 தேக்கரண்டி.
சுட்டக்கத்தரிக்காய் சட்னி செய்முறை விளக்கம்;
முதலில் ஒரு பவுலில் நெல்லிக்காய் அளவு புளி எடுத்து கொஞ்சமாக தண்ணீர் விட்டு ஊறவைத்துக் கொள்ளவும். இப்போது ஒரு ஃபேனில் 1 தேக்கரண்டி எண்ணெய் விட்டு 2 தேக்கரண்டி உளுத்தம் பருப்பு, 1 தேக்கரண்டி கடலைப்பருப்பு, 5 வரமிளகாய், ¼ கப் கருவேப்பிலை சேர்த்து நன்றாக வறுத்து இறக்கி வைத்துக் கொள்ளவும்
இப்போது கத்தரிக்காயின் மேல் நன்றாக எண்ணெய்யை தடவி விட்டு அடுப்பில் எல்லா பக்கமும் காட்டி சுட்டு எடுத்துக் கொள்ளவும். பிறகு அதை தண்ணீரில் போட்டு ஆற வைக்கவும். அப்போது தான் தோலை சுலபமாக எடுக்க முடியும்.
இப்போது மிக்ஸியில் வறுத்து வைத்திருக்கும் பருப்பை கொஞ்சம் கொரகொரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ளவும். இத்துடன் சுட்டு தோல்நீக்கி வைத்திருக்கும் கத்தரிக்காய், ஊற வைத்த புளி, 1 தேக்கரண்டி உப்பு சேர்த்து நன்றாக அரைத்து எடுத்தால் சட்னி தயார். இந்த சுட்டக்கத்தரிக்காய் சட்னி டேஸ்ட் அல்டிமேட்டாக இருக்கும். நீங்களும் வீட்டிலே ட்ரை பண்ணி பாருங்கள்.