
வெள்ளரிக்காய் சாண்ட்விச் ரெசிபி
தேவையான பொருட்கள்:
1. மீடியம் சைஸ் வெள்ளரிக் காய் 4
2.ஃபிரஷ் க்ரீம் 2 டேபிள் ஸ்பூன்
3.பிரட் 4 ஸ்லைஸ்
4.மிளகுத் தூள் ¼ டீஸ்பூன்
5.உப்பு ஒரு சிட்டிகை
6.கொத்தமல்லி இலை 1 டேபிள் ஸ்பூன்
7.நார்மல் பட்டர் அல்லது பீ நட் பட்டர் 1 டீஸ்பூன்
செய்முறை: வெள்ளரிக்காயை கழுவி, மெல்லிய ஸ்லைஸ்களாக நறுக்கிக்கொள்ளவும். அதிலிருந்து வடியும் நீரை சுத்தமான காட்டன் துணியால் ஒற்றி எடுத்துவிடவும். இதனால் பிரட் ஈரமாகி 'சொத சொதப்பாவதைத் தடுக்கலாம். ஒரு கோப்பையில்
மல்லி இலைகள், உப்புத்தூள், மிளகுத்தூள் மற்றும் ஃபிரஷ் க்ரீம் ஆகியவற்றைப்போட்டு நன்கு கலந்துகொள்ளவும்.
பின் பிரட் ஸ்லைஸ்களின் ஒரு பக்கம் பட்டரை சமமாக தடவவும். ஒரு ஸ்லைஸை கையில் எடுத்து பட்டர் தடவிய பக்கம் க்ரீம் கலவையை ஒரு லேயர் பரத்திவைக்கவும். அதன் மீது வெள்ளரி துண்டுகளை இடைவெளியின்றி ஒரு லேயர் அடுக்கவும். பிறகு இன்னொரு பட்டர் தடவிய பிரட் ஸ்லைஸை எடுத்து வெள்ளரி துண்டுகள் மீது பட்டர் தடவிய பக்கம் படுமாறு மூடவும். சாண்ட்விச்சை கையில் எடுத்து இரு கைகளாலும் லேசா அமுக்கவும். பின் சாண்ட்விச்சின் நான்கு பக்கங்களையும் கத்தியால் ட்ரிம் பண்ணி, உண்பதற்கு கொடுக்கவும்.
பீட்ரூட் கட்லட் ரெசிபி
1. துருவிய பீட்ரூட் 2 கப்
2. வேக வைத்து மசித்த உருளைக் கிழங்கு 1 கப்
3. மிளகாய் தூள் 1 டீஸ்பூன்
4. சீரகப் பொடி ¾ டீஸ்பூன்
5. மிளகுத் தூள் ½ டீஸ்பூன்
6. இஞ்சி பேஸ்ட் 1 டீஸ்பூன்
7. கடல் உப்பு தேவையான அளவு
8. கரம் மசாலா தூள் ½ டீஸ்பூன்
9. கொத்தமல்லி இலைகள் 1 டேபிள் ஸ்பூன்
10. பொடித்த ரஸ்க் தூள் தேவையான அளவு
11. பொரிக்க எண்ணெய்.
செய்முறை:
மேலே கூறிய பொருட்களில் எண்ணெய் மற்றும் ரஸ்க் தூள் தவிர மற்ற அனைத்துப் பொருள்களையும் ஒரு வாயகன்ற பாத்திரத்தில் போட்டு நன்கு பிசைந்து கொள்ளவும். பின் அதிலிருந்து சிறு சிறு உருண்டைகளாக கலவையை எடுத்து கட்லட்களாகத் தட்டி வைத்துக் கொள்ளவும். பின் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். பிறகு தட்டி வைத்த கட்லட்களை ரஸ்க் தூளில் பிரட்டி எடுத்து எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்கவும். சிவந்து வந்ததும் எடுத்து சூடாக தக்காளி சாஸுடன் பரிமாறவும்.