நாம் வீட்டில் செய்யும் உணவை விட ரெஸ்டாரண்டுகளில் உணவின் சுவை நன்றாக இருப்பதனாலேயே, பலர் வித்தியாசமான உணவுகளை சுவைக்க உணவகங்களைத் தேடிச்செல்கின்றனர். ஆனால் இந்தப் பதிவில் நான் சொல்லப்போவது போல பன்னீர் டிக்கா செய்தால், இனி நீங்கள் ரெஸ்டாரண்ட் செல்ல மாட்டீர்கள். குறிப்பாக அதை செய்வது ரொம்ப சுலபம்.
பொதுவாகவே புரதச்சத்து அதிகம் நிறைந்த பன்னீர் நம் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இதில் பாஸ்பரஸ், கால்சியம், புரதம் போன்ற ஏராளமான சத்துக்கள் நிறைந்துள்ளது. பன்னீர் என்றாலே பரோட்டாவில் தொடங்கி பாப்கான் வரை பன்னீரை வைத்து பல ரெசிபிக்கள் செய்யலாம். அதிலும் பலரது விருப்பமான பன்னீர் டிக்காவை விரும்பாதவர்கள் யாரும் இருக்க முடியாது. இதை ரெஸ்டாரண்டுகளில் அதிக விலை கொடுத்து நாம் வாங்கினாலும், ஒரு சில துண்டுகள் மட்டுமே நமக்குப் பரிமாறுவார்கள். இதற்கு பதிலாக செலவையும் குறைத்து, ஆரோக்கியமான முறையில் வீட்டில் உள்ள பொருட்களை வைத்து பன்னீர் டிக்காவை சுலபமாக நாம் செய்யலாம். ரெஸ்டாரண்ட் சுவையில் பன்னீர் டிக்கா செய்வதற்கு இந்த ரெசிபி மற்றும் முக்கிய குறிப்புகளைப் பின்பற்றுங்கள்.
தேவையான பொருட்கள்:
பன்னீர் - 250 கிராம்
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
மிளகு பொடி - ½ டீஸ்பூன்
கரம் மசாலா பொடி - கால் டீஸ்பூன்
மிளகாய் பொடி - 1 டீஸ்பூன்
மஞ்சள் பொடி - ¼ டீஸ்பூன்
சீரகப்பொடி - ½ டீஸ்பூன்
எண்ணெய் - 1 டீஸ்பூன்
கசூரி மேத்தி - ½ டீஸ்பூன்
தயிர் - 3 டீஸ்பூன்
எலுமிச்சை - ½
குடை மிளகாய் - 1
உப்பு - தேவையான அளவு
சாட் மசாலா - சிறிதளவு
வெங்காயம் - 1
செய்முறை:
முதலில் பன்னீரை டிக்கா செய்வதற்கு ஏற்ற சைஸில் சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். இத்துடன் வெங்காயத்தையும், குடைமிளகாயையும் நறுக்கிக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் வெறும் தயிர் மட்டும் சேர்த்து நன்றாகக் கலக்கிக் கொள்ளவும். இதில் தண்ணீர் சேர்க்கக்கூடாது. இத்துடன் சீரகப் பொடி, கசூரி மேத்தி, மஞ்சள் பொடி, இஞ்சி பூண்டு விழுது, மிளகாய் பொடி, கரம் மசாலா மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாகக் கலக்கவும்.
இதில் நறுக்கி வைக்கப்பட்ட வெங்காயம், குடைமிளகாய், பன்னீர் சேர்த்து நன்கு ஊற வைக்க வேண்டும். இது குறைந்தது ஒரு மணி நேரமாவது ஊற வேண்டும்.
உங்களிடம் டிக்கா செய்வதற்கு குச்சிகள் இல்லை என்றால், நேரடியாக ஊற வைத்த பன்னீரை தோசைக் கல்லில் மொத்தமாக அடுக்கி வைத்து செய்யலாம். அல்லது குச்சி இருந்தால் அதில் நேராக குத்தி வைத்து தோசைக்கல்லிலோ அல்லது ஓவனிலோ இதைத் தயாரிக்கலாம்.
பன்னீரும் காய்கறியும் நன்கு வேகும்படி திருப்பிப்போட்டு நன்றாக வேக வைக்கவும்.
இறுதியில் அவற்றின் மீது சாட் மசாலா தூவி சிறிது புதினா சட்னி உடன் பரிமாறினால், மிச்சம் வைக்காமல் அனைத்தையும் சாப்பிட்டு விடுவார்கள்.