குழந்தைகள் மிகவும் விரும்பக்கூடிய கார்ன் கட்லெட், சத்து மிகுந்த வாழைப்பழ அல்வா எப்படி செய்யலாம் என்பதை இப்பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
கார்ன் கட்லெட்:
தேவையான பொருட்கள்:
வேகவைத்த கார்ன்-2 கப் (உதிர்த்தது )
கடலை மாவு -1/2 கப்
அரிசி மாவு-1/4 கப்
பெரிய வெங்காயம்-1
கேரட்-1
குடைமிளகாய் - பாதி அளவு
பச்சை மிளகாய் -2
இஞ்சி- சின்ன துண்டு
பூண்டு-5 பல்
தனியா தூள் -1 ஸ்பூன்
கரம் மசாலா-1/2 ஸ்பூன்
மிளகாய்த்தூள் -1/2 ஸ்பூன்
மஞ்சள் தூள் -1/4 ஸ்பூன்
உப்பு- தேவையான அளவு
நறுக்கிய கொத்தமல்லி- சிறிதளவு
செய்முறை:
வேகவைத்து உதிர்த்து எடுத்த கார்னை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு கொரகொரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ளவும். அதனுடன் நறுக்கிய பெரிய வெங்காயம், பச்சை மிளகாய், துருவிய கேரட், துருவிய இஞ்சி, நறுக்கிய பூண்டு, கரம் மசாலா மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், தனியா தூள், உப்பு, நறுக்கிய கொத்தமல்லி சேர்த்துநன்கு கலக்கவும். பின் இதனுடன் கடலை மாவு மற்றும் அரிசி மாவு சேர்த்துநன்கு கலக்கவும். (தண்ணீர் ஊற்ற தேவையில்லை, காய்கறிகளில் உள்ள தண்ணீரே போதுமானது)
ஒரு பத்து நிமிடம் வைத்திருந்து அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி எண்ணெய் நன்கு சூடானவுடன் இந்தக் கலவையை கட்லெட் வடிவில் தட்டி சூடான எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்தால் காரசாரமான கார்ன் கட்லெட் ரெடி!
வாழைப்பழ அல்வா:
தேவையான பொருட்கள்:
நன்கு பழுத்த நீளமான
வாழைப்பழம் -4
துருவிய வெல்லம் -3/4 கப்
ஜவ்வரிசி-1/4 கப்
நெய்- 8 டேபிள்ஸ்பூன்
முந்திரி- தேவையான அளவு
ஏலக்காய் பொடி-1/4 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
ஜவ்வரிசியை 3 லிருந்து 4 மணி நேரம் நன்கு ஊறவைத்து அரைத்து எடுத்துக் கொள்ளவும். அதனுடன் நன்கு பழுத்த வாழைப்பழங்களை சிறிது சிறிதாக வெட்டி அரைத்த ஜவ்வரிசியுடன் சேர்த்து நைசாக அரைத்துக் கொள்ளவும். ஒரு வாணலியில் 3டேபிள் ஸ்பூன் நெய்விட்டு தேவையான அளவு முந்திரியை போட்டு வறுத்து எடுத்துக்கொள்ளவும். பின் அதே வாணலியில் அரைத்த கலவையைக் கொட்டி மிதமான சூட்டில் நன்கு கிளறவும். ஓரளவுக்கு கெட்டியாக வரும்போது நெய் சேர்த்து நன்கு கிளறவும். பச்சை வாசனை போனவுடன் துருவிய வெல்லம், இரண்டு டேபிள் ஸ்பூன் நெய் சேர்த்து நன்கு கிளறவும். ஓரளவுக்கு அல்வா பதத்துக்கு வந்தவுடன் வறுத்த முந்திரி, ஏலக்காய்தூள், மீதமுள்ள நெய் ஆகியவற்றை சேர்த்து நன்கு கிளறி எடுக்கவும். மிதமான சூட்டில் பரிமாறினால் வாயில் வைத்தவுடன் கரையக்கூடிய சுவையான வாழைப்பழ அல்வா ரெடி!
இவை இரண்டும் குழந்தைகளுக்கு மாலை வேளையில் செய்து கொடுக்கக்கூடிய எளிய ரெசிபிகள், நீங்களும் வீட்டில் செய்து பார்த்து இதன் அட்டகாசமான சுவையை ருசித்து மகிழுங்கள்!