உச் கொட்ட வைக்கும் தயிர் வெண்டை கிரேவி!

தயிர் வெண்டை கிரேவி
தயிர் வெண்டை கிரேவிwww.youtube.com

டல் நலனுக்கு உகந்த நாட்டு காய்கறிகளை அதிகம் உணவில் சேர்ப்பது நல்லது. அதே போல் கால்ஷியம், புரதச்சத்து நிறைந்த பால் பொருட்களையும் நம் உணவில் கலந்து குழந்தைகளுக்கு தருவது மிகவும் நல்லது. ஆனால்  சில காய்களின் மணமும் குணமும் பலருக்கும் பிடிப்பதில்லை. அதில் ஒன்றுதான் வெண்டைக்காய்.

வெண்டைக்காயின் வழவழப்பான தன்மையை குழந்தைகள் விரும்புவதில்லை. ஆனால்  மூளைத் திறனுக்கு தேவையான சத்துள்ள வெண்டைக்காய்களை நம் குழந்தைகளுக்கு தருவதே  நல்லது. அதனுடன் தயிர் சேர்த்து செய்யப்படும் இந்த கிரேவியை செய்து தந்து பாருங்கள் வேண்டாம் என்று சொல்லாமல் விரைவில் சாப்பிட்டு விடுவார்கள்.

தேவையான பொருட்கள்:
முற்றாத இளம் வெண்டைக்காய்- கால்  கிலோ
புளிக்காத புதிய கெட்டித்தயிர்  -ஒரு கப்
சின்ன வெங்காயம் - 8
தக்காளி - 1
சீரகத்தூள் மிளகுத்தூள் - தலா 1 டீஸ்பூன்
கரம் மசாலா தூள், மல்லித்தூள், மஞ்சள் தூள் - தலா அரை டீஸ்பூன்
கடுகு சீரகம்  - தாளிக்க(அரை டீஸ்பூன்)
இஞ்சி பூண்டு விழுது -ஒரு டீஸ்பூன்
கடலை மாவு - ஒரு டீஸ்பூன்
கருவேப்பிலை- சிறிதளவு
காய்ந்த மிளகாய்-  இரண்டு
உப்பு - தேவையான அளவு
எண்ணெய்-3 டே. ஸ்பூன்

செய்முறை:
இளம் வெண்டைக்காய்களை நன்றாக கழுவி சற்று பெரிய துண்டுகளாக நறுக்கி வைக்கவும். ஒரு கடாயில் ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும் துண்டுகளாக நறுக்கிய வெண்டைக்காயை சேர்த்து மிதமான தீயில் வைத்து சுமார் மூன்று அல்லது நான்கு நிமிடம் அதன் பிசுபிசுப்பு தன்மை போகும் வரை வதக்கி தனியே எடுத்து வைக்கவும். மேலும் அதே கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு சீரகத்துடன்  கருவேப்பிலை காய்ந்த மிளகாய் தாளித்து அதனுடன் இரண்டாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.

வெங்காயம் வதங்கியதும் அரைத்த தக்காளி விழுதைப் போட்டு வதக்கி அதனுடன் இஞ்சி பூண்டு விழுதை போட்டு நன்கு வாசம் வரும் வரை வதக்கவும். உடன் (மிளகு சீரகத்தூள் தவிர்த்து) தந்துள்ள பொடி வகைகளை சேர்த்து வதக்கவும். எண்ணெய் பிரியும் வரை வதக்கி கடலைமாவை சிறிது நீரில் நன்கு கரைத்து ஊற்றி தேவையான  உப்பு போட்டு ஒரு கொதி விடவும்.

இதையும் படியுங்கள்:
உலகின் பிரம்மாண்ட சொகுசுக் கப்பல் இதுதான்! விலை என்ன தெரியுமா?
தயிர் வெண்டை கிரேவி

இப்போது கெட்டித்தயிரைக் கடைந்து அதில் ஊற்றி வதக்கிய வெண்டைக்காய்களைப் போட்டு மிதமான தீயில் 2 நிமிடம் வைத்து கிளறி விட்டு மிளகுத்தூள் சீரகத்தூள் தூவி இறக்கி பரிமாறலாம்.

இந்த கிரேவி சூடான சாதம், சப்பாத்தி போன்றவை களுக்கு ஏற்ற சைட் டிஷ். இதில் அவரவர் விருப்பம் போல் காரம் மற்றும் பொடிகளை கூட்டியோ குறைத்தோ சேர்க்கலாம். (கடலை மாவு சேர்ப்பதால் விரைவில் கெட்டித்தன்மை ஆகும்) கால்ஷியம் மற்றும் புரதம் நிறைந்த சத்தான சைட் டிஷ் ரெடி.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com