இளநீர் இட்லி:
புழுங்கல் அரிசி 5 கப்
உளுந்து ஒரு கப்
கல் உப்பு தேவையானது
இளநீர் இட்லி செய்ய:
இட்லி மாவு 2 கப்
இளநீர் தண்ணீர் 200 மில்லி
இளநீர் வழுக்கை 1/2 கப்
தேங்காய் எண்ணெய் சிறிது
பஞ்சு போன்ற இளநீர் இட்லி செய்வது மிகவும் சுலபம். அதற்கு இட்லிக்கு மாவு அரைக்கும்பொழுது மிகவும் கெட்டியாக அரைத்து எடுக்க வேண்டும். மொத்த மாவில் இளநீரை கலக்காமல் தேவையான அளவு மாவை எடுத்துக்கொண்டு, அத்துடன் இளநீர் வழுக்கையை மிக்ஸியிலிட்டு அரைத்து, ஒரு கப் இளநீர் தண்ணீரையும் சேர்த்து நன்கு கலந்து ஆறுமணி நேரம் புளிக்க விடவும்.
இளநீர் இட்லி நிறைய அளவில் செய்வதாக இருந்தால் அரிசி, உளுந்து அரைக்கும் பொழுது தண்ணீருக்கு பதிலாக இளநீரையும், வழுக்கையையும் சேர்த்து அரைத்து தேவையான உப்பு கலந்து புளிக்க விட்டு இட்லிகளாக வார்த்து எடுக்கலாம்.
இவற்றை சின்ன சின்ன கிண்ணங்களில் தேங்காய் எண்ணெய் தடவி அதில் முக்கால் பாகம் மாவை விட்டு வைக்கவும்.
இட்லி பாத்திரத்தில் தண்ணீர் விட்டு கொதித்ததும் இட்லி தட்டின் மேல் இந்த மாவை நிரப்பிய கிண்ணத்தை வைத்து மூடி 10 நிமிடங்கள் வரை நன்கு வேகவைத்து எடுக்கவும். சிறிது ஆறியதும் ஓரங்களை மெதுவாக கத்தியால் கீறி விட்டு கவிழ்த்து விட சுவையான இளநீர் இட்லி தயார்.
இளநீர் ருசியில் பஞ்சு போல் இருக்கும் இதனை சுடச் சுட ஆந்திரா கார சட்னியுடன் பரிமாற மிகவும் நன்றாக இருக்கும்.
ஆந்திரா காரச்சட்னி:
கடலை பருப்பு 1 ஸ்பூன்
உளுத்தம் பருப்பு 1 ஸ்பூன்
தனியா 1 ஸ்பூன்
மிளகாய் வற்றல் 6
சின்ன வெங்காயம் 4
பூண்டு ஐந்தாறு பற்கள்
புளி சிறிய நெல்லிக்காய் அளவு
உப்பு தேவையானது
கறிவேப்பிலை சிறிது
நல்லெண்ணெய் 1/4 கப்
வாணலியில் கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு, தனியா, மிளகாய் வற்றல் ஆகியவற்றை நன்கு சிவக்க வறுத்தெடுக்கவும். இரண்டு ஸ்பூன் நல்லெண்ணெய் விட்டு சின்ன வெங்காயம், பூண்டு சேர்த்து வெங்காயம் நிறம் மாறும் வரை நன்கு வதக்கி எடுக்கவும். புளியை அரை கப் சூடான நீரில் ஊறப்போடவும்.
மிக்ஸியில் வறுத்த பொருட்களுடன் உப்பு, புளி கரைத்த நீர் சேர்த்து நைசாக அரைத்தெடுக்கவும். கடுகு கருவேப்பிலை சிறிது உளுத்தம் பருப்பு சேர்த்து நல்லெண்ணையில் தாளித்து சட்னியில் சேர்க்கவும். காரசாரமான ஆந்திரா சட்னி தயார்.