
வீட்டுதோட்டத்தில் எக்கச்சக்கமாக காய்த்து கிடைக்கும் சுரக்காயை வைத்து விதவிதமான ரெசிபிகளை செய்து அசத்தலாம். அதில் இனிப்பையும், சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள ஏதுவான ஒரு கூட்டையும் காண்போம்.
சுரைக்காய் அல்வா செய்ய தேவையான பொருட்கள்:
சுரைக்காய் -ஒன்று
சர்க்கரை -ஒரு கப்
பால்- ஒரு கப்
மில்க்மெய்டு- மூணு டேபிள் ஸ்பூன்
நெய் -7 டேபிள்ஸ்பூன்
ஏலத்தூள்- 1டீஸ்பூன்
ஒடித்து நெய்யில் வறுத்த முந்திரி துண்டுகள்- ரெண்டு டேபிள் ஸ்பூன்
பச்சை ஃபுட் கலர்- ஒரு டீஸ்பூன்
செய்முறை:
சுரைக்காயை தோல் சீவி விதை நீக்கி கேரட் துருவியில் துருவிக் கொள்ளவும். அடிகனமான பாத்திரத்தில் பாலை ஊற்றி சுரைக்காய்த் துருவலை சேர்த்து வேகவிடவும். வெந்ததும் அதில் மில்க் மெய்டு, சர்க்கரை சேர்த்து பச்சை ஃபுட் கலர், ஏலத்தூள் சேர்க்கவும். இடையிடையே நெய்விட்டு நன்றாக கிளறி அல்வா பதம் வந்ததும் முந்திரியை சேர்த்து நன்றாக கிளறி இறக்கி வைக்கவும். என்னது சுரைக்காயில் அல்வாவா என்று முகம் சுளிப்பவர்கள் கூட அடுத்தடுத்து செய்து தரும்பொழுது விரும்பி உண்பர்.
சுரக்காய் பயத்தம் பருப்பு கூட்டு!
செய்ய தேவையான பொருட்கள்:
சுத்தம் செய்த சுரைக்காய்- ஒன்று அரிந்தது
பயத்தம் பருப்பு -அரை கப்
சாம்பார் பொடி -ஒரு டேபிள் ஸ்பூன்
தேங்காய், சீரகம் அரைத்தது- ரெண்டு டேபிள் ஸ்பூன்
எண்ணெய், உப்பு -தேவையான அளவு
தாளிப்பதற்கு :கடுகு, சீரகம், கறிவேப்பிலை ,பெரிய வெங்காயம் -ஒன்று அரிந்தது.
சிறிய தக்காளி- ஒன்று அரிந்தது
செய்முறை:
குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய்விட்டு கடுகு, சீரகம் தாளிக்கவும். பின்னர் வெங்காயத்தை வதக்கி தக்காளியை சேர்த்து வதக்கவும். பின்னர் சாம்பார்பொடி சேர்த்து வதக்கிவிட்டு, அதில் பயத்தம் பருப்பு சேர்க்கவும். பின்னர் சுரக்காயை சேர்த்து அரைத்த தேங்காய் விழுதை போட்டு, தேவையான அளவு உப்பு, தண்ணீர் விட்டு குக்கரில் ஒரு விசில் விட்டு எடுக்கவும். சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள பிரமாதமாக இருக்கும்.