சுரைக்காய் கோஃப்தாவும், ட்ரை கலர் சப்பாத்தியும்!

healthy foods
healthy foodsImage credit - youtube.com
Published on

சுரைக்காய் பிடிக்காமல் ஒதுக்குபவர்கள் கூட அதை துருவி தேவையான மசாலாக்கள் சேர்த்து கோஃப்தாவாக செய்து கொடுத்தால் விரும்பி உண்பர். அதன் செய்முறை பற்றி பார்ப்போம். 

தேவையான பொருட்கள்:

சிறிய சுரைக்காய்- ஒன்று

கடலை மாவு, அரிசி மாவு, பொட்டுக்கடலை மாவு தலா- ஒரு டேபிள் ஸ்பூன்

மிளகாய் பொடி -2 டீஸ்பூன்

உப்பு, எண்ணெய் தேவையான அளவு

கிரேவி செய்ய தேவையானது பொருட்கள் 

பெரிய வெங்காயம் -2 பொடியாக அரிந்தது

தக்காளி- இரண்டு பொடியாக அரிந்தது 

வெங்காயத்தாள் -இரண்டு பொடியாக அரிந்தது

தனியா ,கருவேப்பிலை -ஒரு டேபிள் ஸ்பூன் 

பாலேடு ,பட்டர் தலா- 2டீஸ்பூன்

எண்ணெய் ,உப்பு -தேவையான அளவு 

சாம்பார் பவுடர் -3 டேபிள் ஸ்பூன்

இஞ்சி பூண்டு சோம்பு மூன்றும் அரைத்த பேஸ்ட் -ரெண்டு டீஸ்பூன்

தாளிக்க தேவையான அளவு - கடற்பாசி ,மராட்டி மொக்கு, கிராம்பு, அன்னாசி பூ, சோம்பு சிறிதளவு. 

கோஃப்தா செய்முறை:

சுரைக்காயை தோல் நீக்கி துருவியில் நன்றாக துருவி அதன் தண்ணீரை பிழிந்து எடுத்து விடவும் .அந்த சக்கையுடன் மாவுகள் மற்றும் மிளகாய் பொடி உப்பு சேர்த்து நன்றாக பிசைந்து கோப்தாக்களாக சற்று நீளமாக ஓவல் சைஸ் முட்டை போன்ற வடிவில் கோப்தாகளாக தயாரித்து வைக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் மிதமான தீயில் கோப்தாக்களை போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்து வைக்கவும். ஒரு சிறிய சுரைக்காயில் அதன் கூட்டு பொருட்களுடன் சேர்த்து 12 கோப்தாக்கள் கிடைக்கும்.

கிரேவி செய்ய:

ஒரு கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்தவற்றை தாளித்து வெங்காயம் சேர்த்து வதக்கவும். பிறகு இஞ்சி பூண்டு பேஸ்ட் தக்காளி சேர்த்து வதக்கி ஸ்பிரிங் ஆனியன் சேர்த்து வதக்கவும். நன்றாக வதங்கியதும் மசாலாக்கள் சேர்க்கவும். சாம்பார்பொடி பிடிக்காதவர்கள் மிளகாய்பொடி ஒரு டேபிள் ஸ்பூன், மல்லி பொடி மூன்று டேபிள் ஸ்பூன், மஞ்சள் தூள் இரண்டு சிட்டிகை சேர்த்து நன்றாக வதக்கி உப்பு சேர்த்து தேவையான அளவு தண்ணீர் விட்டு நன்கு கொதிக்க விடவும். நன்றாக கொதித்து பச்சை வாடை போனவுடன் கோப்தாக்களை அதில் போட்டு கொதிக்க விடவும். கோப்தாக்கள் அதனுடன் ஊறி கிரேவி பதத்திற்கு வந்ததும் பாலேடு மற்றும் பட்டர் சேர்த்து மசாலாக்களை நன்றாக கிளறி விடவும். கடைசியாக கொத்தமல்லி, கருவேப்பிலை தூவி அலங்கரித்து  சப்பாத்தி, ரொட்டி, புல்கா என்று எதனுடனும் ருசிக்கலாம். 

இதையும் படியுங்கள்:
சுயநலமற்ற எண்ணங்களே சொர்க்கத்தின் நுழைவாயில்கள்!
healthy foods

ட்ரை கலர் சப்பாத்தி:

செய்யத் தேவையான பொருட்கள்:

பொடியாக அரிந்த தனியா-இரண்டு டேபிள் ஸ்பூன்

துருவிய கேரட், முள்ளங்கி தலா- ஒன்று 

பச்சை மிளகாய் -ஒன்று பொடியாக நறுக்கியது 

உப்பு தேவையான அளவு

கோதுமை மாவு -ஒரு கப். 

சப்பாத்தி செய்முறை:

தனியா' முள்ளங்கி, கேரட், பச்சை மிளகாய் அனைத்தையும் கோதுமை மாவுடன் கலந்து உப்பு சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும். முள்ளங்கியில் இருக்கும் தண்ணீரே போதுமானதாக இருக்கும். ஆதலால் தேவையானால் மட்டும் தண்ணீர் விட்டு பிசையவும். பிசைந்த மாவை சிறுசிறு உருண்டைகளாக எடுத்து நன்றாக வரமாவு விட்டு சப்பாத்திக்கல்லில் தேய்த்து, சூடாகி கொண்டிருக்கும் சப்பாத்தி தவாயில் போட்டு சப்பாத்திகளாக இருபுறமும் எண்ணெய் விட்டு சுட்டு எடுக்கவும். 

இதற்கு தொட்டுக்கொள்ள பிரத்யேகமாக எதுவும் தேவையில்லை. வெண்ணெய் விரும்புவர்கள் வெண்ணெய் வைத்து சாப்பிடலாம். தயிர் விரும்புபவர்கள் தயிரோடு சாப்பிடலாம்.  பூந்தி, வெள்ளரிக்காய், வெங்காய பச்சடி மற்றும் ரைத்தா  என்று எதனோடும் நல்ல ஜோடி சேரும் இந்த ட்ரை கலர் சப்பாத்தி. முள்ளங்கியை விரும்பாதவர்களுக்கு இப்படி செய்து கொடுத்து அசத்தலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com