

நார்த்தங்காய் இலைகள் மிகப்பெரிய வரப்பிரசாதமாகும். இந்த இலைகளை பொடி செய்து சாப்பிட்டால், அஜீரணம், நெஞ்செரிச்சல், உடல் சூடு நீங்கும். ரத்த சுத்திகரிப்புக்கு உதவுகிறது. மேலும் வயிற்றுப்புண்கள், வாய்ப்புண்களை இந்த இலை ஆற்றுகிறது.
நார்த்தை இலைப்பொடி
தேவையானவை:
நாரத்தை இலை ஒரு கைப்பிடி அளவு, காய்ந்த மிளகாய் – 4, பெருங்காயத்தூள் – சிறிதளவு, உப்பு – தேவையான அளவு
செய்முறை:
நார்த்தை இலையின் நடுவில் உள்ள நரம்பினை நீக்கி, இலையுடன் காய்ந்த மிளகாய், உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து மிக்ஸியில் அரைத்து, கெட்டியான சிறு உருண்டைகளாக பிடிக்கவும். காற்றுப்புகாத பாட்டிலில் போட்டு மூடிவைக்கவும். தயிர்சாதத்துக்கு இது சிறந்த காம்பினேஷன். மிகவும் முற்றிய இலையாக இருக்காமல், இளம் துளிர் இலையில் தயாரிக்கவும்.
நார்த்தை இலை ரசம்
தேவையானவை:
தேவைக்கேற்ப இளசான நார்த்தை இலை, காய்ந்த மிளகாய், பூண்டு, மிளகு, சீரகம், கொத்தமல்லி போன்றவற்றை இடித்துக்கொள்ள வேண்டும். பின்னர் ஒரு வாணலில் எண்ணெய், கடுகு, கருவேப்பிலை தாளித்து, இடித்து வைத்திருக்கும் கலவைகளை கொட்டி வதக்க வேண்டும். இதனுடன் தண்ணீர், உப்பு சேர்த்து, இறக்கும்போது, எலுமிச்சம் சாறு பிழிந்து இறக்கினால் நார்த்தை இலை ரசம் ரெடி.
மாங்காய் வற்றல் ரசம்
தேவையானவை:
துவரம்பருப்பு – கால் கப், மாங்காய் வற்றல் – 6, வெங்காயம் – ஒன்று, தக்காளி – ஒன்று, புளி – நெல்லிக்காய் அளவு, மிளகு, சீரகத்தூள் – தலா அரை டீஸ்பூன், பூண்டு – 6 பல், காய்ந்த மிளகாய் – 3, கடுகு, வெந்தயம், மஞ்சள்தூள் – தலா கால் டீஸ்பூன், கருவேப்பிலை, கொத்தமல்லி – சிறிதளவு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
துவரம்பருப்பை குழையாமல் வேகவைக்கவும். மாங்காய் வற்றலை சுடுநீரில் 10 நிமிடம் ஊற வைக்கவும். புளியை அரை டம்ளர் தண்ணீரில் கரைத்துக் கொள்ளவும். வாணலியில் 2 டம்ளர் நீர் விட்டு வேக வைத்த பருப்பு, வெங்காயம், தக்காளி, மாவற்றல் சேர்த்து வேகவிடவும். வெந்ததும், புளித்தண்ணீர் சேர்த்து பச்சை வாசனை போகும்வரை கொதிக்கவிடவும்.
வேறொரு வாணலியில் எண்ணெயை சூடாக்கி, கடுகு, வெந்தயம், மிளகு – சீரகத்தூள், தட்டிய பூண்டு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, ரசத்தில் சேர்க்கவும். கொத்தமல்லித் தழை தூவி இறக்கிப் பரிமாறவும். மாவற்றல் மிகவும் புளிப்பாக இருந்தால், புளியின் அளவைக் குறைக்கவும். வற்றலில் உப்பு இருப்பதால் உப்பையும் பார்த்து சேர்க்கவும்.
செட்டிநாட்டு அவியல்
தேவையானவை:
கத்திரிக்காய் – 100 கிராம், உருளைக்கிழங்கு – 2, வெங்காயம், தக்காளி – தலா ஒன்று, பட்டை – சிறிய துண்டு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.
அரைக்க: தேங்காய் துருவல் – கால் கப், பச்சை மிளகாய் – 5, பூண்டு – 3 பல், சோம்பு – ஒரு டீஸ்பூன், பொட்டுக்கடலை – ஒரு டேபிள்ஸ்பூன்.
செய்முறை:
காய்கறிகளைப் பொடியாக நறுக்கவும். அரைக்க கொடுத்துள்ளவற்றை அரைத்துக்கொள்ளவும். வாணலியில் எண்ணெயை சூடாக்கி, பட்டை தாளித்து வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும். பின்னர் கத்திரிக்காய், உருளைக்கிழங்கு சேர்த்து வதக்கி, நீர் சேர்த்து வேகவிடவும். காய்கள் வெந்ததும், அரைத்து வைத்திருக்கும் மசாலா, உப்பு சேர்த்து நன்கு கிளறி இறக்கினால். ருசியான செட்டிநாட்டு அவியல் ரெடி! இட்லி, தோசை, இடியாப்பம், சப்பாத்தி என எல்லாவற்றுக்கும் ஏற்ற அவியல் இது.