ஆவி பிடித்தால் ஆபத்தா?

ஆவி பிடித்தால் ஆபத்தா?

ஆரோக்கியம்

- செளமியா சுப்ரமணியன்.

ளிப்பிடித்தால் அத்துடன் தலைபாரம், மூக்கடைப்பு என பிரச்னைகள் அடுத்தடுத்து வரும். ஆவி பிடித்தல், இதற்கு நல்ல நிவாரணமாக நம்பப்படுகிறது. தலைவலி, தலையில் நீர் கோர்வை போன்ற பிரச்னைகளுக்காகவும் ஆவி பிடிப்பதை பழங்காலம் முதல் நம் சமூகத்தில் வழக்கமாக கொண்டுள்ளார்கள்.

முகத்தில் உள்ள 'சைனஸ்' எனப்படும் காற்றறைகளின் வாயில்களில் சளி சேர்ந்து அடைத்துக்கொள்வதால் மூக்கடைப்பு போன்ற பிரச்னைகள் வருகின்றன. இந் நிலையை 'சைனசைடிஸ்' (Sinusitis) என கூறுவோம். அந்த சமயத்தில் நீராவியை மூக்கின் வழி பிடிப்பது அந்த அடைப்புகளை ஓரளவு சரிசெய்து அந்த பிரச்னை யிலிருந்து நிவாரணம் அளிக்கும்.

ஆனால், முறையற்ற, அலட்சியமான போக்கில் ஆவி பிடிக்கும்போது காயங்கள், கொப்புளங்கள், அலர்ஜி போன்ற சில விபரீதங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.

அதிக நேரம் ஆவி பிடித்தால், மூக்கின் உள் பகுதி புண்ணாக்கும். மேலும் முகத்தில் பருக்கள், கட்டிகள் இருப்பவர்களுக்கு அவை அதிக எரிச்சலை உண்டாக்கிவிடக்கூடும்.

ஆவி பிடிக்க சில வழிமுறைகள் உள்ளன. இரண்டு நிமிடங்களுக்கு குறையாமல் ஆவி பிடிக்கலாம். அதிக பட்சமாக 5-ல் இருந்து 10 நிமிடங்கள் மட்டும் சளியின் தீவீரத்தை பொறுத்து ஆவி பிடித்தால் போதுமானது. சளி இருக்கும் போது காலை மற்றும் இரவு ஆகிய இரு நேரங்களில் மட்டும் ஆவிபிடிக்கலாம்.

பொதுவாக ஆவி பிடிக்கும்போது காற்றை வாய் வழியாக உள்ளிழுத்து, மூக்கு வழியாக வெளியே விடுவோம். இதனால் சுவாசக் குழாய் சுத்தமாகும். ஆவி பிடித்தவுடன் வியர்வையை நன்கு துடைத்துவிட வேண்டும். மேலும் இயற்கை காற்று படும்படி பத்து நிமிடங்கள் நல்ல காற்றோட்டம் உள்ள இடத்தில் இருக்க வேண்டும். குறிப்பாக  ஏ.சி அறையில் உடனே தூங்குவதை தவிர்க்கவும்.

மின்சார ஆவி பிடிக்கும் இயந்திரத்தை காட்டிலும், வீட்டில் தண்ணீரில் சில மூலிகைகளை போட்டு ஆவி பிடிக்கும் முறை சிறந்தது. இது குறித்து தெரிந்துகொள்வோம்.

• வீட்டில் தண்ணீரைக் கொதிக்க வைத்து அதில் 5 முதல் 10 சொட்டு யூக்கலிப்டஸ் தைலம் போட்டு ஆவி பிடிக்க, மூக்கடைப்பு சரியாகும்.

• வேப்பிலை, துளசி இலை, கல் உப்பு சிறிதளவு, ஓமம் ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் அரை டீஸ்பூன், வெற்றிலை மூன்று ஆகியவற்றை கொதிக்கும் தண்ணீரில் போட்டு சில நிமிடங்கள் ஆவி பிடித்தால் சளித்தொல்லை நீங்கும்.
• மூக்கு ஒழுகுதல், உடல் அசதி போன்றவற்றுக்கு, தண்ணீரில் கைப்பிடி நொச்சி இலை, மஞ்சள்தூள் ஒரு டீஸ்பூன் சேர்த்து ஆவி பிடிக்கலாம்.
• நொச்சி இலை, தும்பை இலை, எட்டு மிளகு, அரை டீஸ்பூன் மஞ்சள்தூள் இவற்றை சேர்த்து, சில நிமிடங்கள் ஆவி பிடித்தால் தலைபாரம் குறையும்.

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com