மருத்துவ குணங்கள் அடங்கிய ஆவாரம்பூ!

மருத்துவ குணங்கள் அடங்கிய ஆவாரம்பூ!
Published on

ஆவாரம்பூ பல மருத்துவ குணங்களை கொண்ட ஒரு பூ வகை. ஆவாரை பூத்திருக்க சாவாரைக் கண்டதுண்டோ என சொல்வது உண்டு. சாலையோரங்களில் உதிர்ந்து கிடக்கும் ஆவாரம்பூவில் பல மருத்துவ குணங்கள் உள்ளன.

ஆவாரம்பூ உடலுக்கு குளிர்ச்சி தரும். அந்தக் காலத்தில் நீண்ட தூரம் பயணம் மேற்கொள்பவர்கள், உடலின் வெப்பத்தை தணிக்க ஆவாரம்பூ இவைகளைத் துணியில் கட்டி, தலையில் வைத்துக் கொண்டு செல்வார்கள். இதனால் உடல் அதன் வெப்ப சமநிலையை இழக்காமல் சக்தியை தக்க வைத்துக் கொள்வதோடு, உடலுக்கு குளிர்ச்சியைத் தரும்.

எப்படிப்பட்ட காய்ச்சலாக இருந்தாலும் ஆவாரம்பூக்களைப் போட்டு காய்ச்சிய தண்ணீரை அடிக்கடி அவ்வப்போது சிறுக சிறுக பருகிட காய்ச்சல் குறைவதோடு உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும்.

வெப்பம் அதிகமாக இருக்கும்போதும், உடலில் நோய் ஏற்பட்டு நீர்ச்சத்து குறைந்து விடும் போதும் ஆவாரம்பூ குடிநீர்க் குடிக்க உடல் சமநிலைப்பட்டு உடலுக்கு பலத்தை கொடுக்கும். பனங்கற்கண்டு சேர்த்து ஆவாரை தேநீராக அருந்திட சர்க்கரை நோய் குணமாகும்.

இந்த சீசனில் ஏற்படும் கண்நோய்களான கண்எரிச்சல் கண் சிவப்பு, கண்கட்டி போன்றவற்றை குணமாக்கும் சக்தி ஆவாரைக்கு உண்டு. ஆவாரையை சுத்தம் செய்து அரைத்து அதன் சாற்றை ஒரு சில துளிகள் கண்ணில் விட கண் கோளாறுகள் சரியாகும்.

ஆவாரம்பூக்களை சுத்தம் செய்து விட்டு பச்சையாக மென்று சாப்பிட குடல்களில் உள்ள நச்சுத்தன்மை போய் வயிறு சுத்தமாகும். கல்லீரலைப் பலப்படுத்தும் சக்தி ஆவாரைக்கு உள்ளது.

ஆவாரம்பூ அரைத்து புண்கள், காயங்கள் மீது தடவினால் சீக்கிரம் குணமாகும். தொற்றுக்கள் அண்டாமல் நம்மை காக்கிறது. பட்டைகளை உலர்த்தி பொடியாக்கி நீரில் கலந்து பூசி வர நீண்ட கால புண்கள் ஆறும். இந்தப் பொடியை தண்ணீரில் கலந்து நான்கில் ஒரு பங்காக குறையும் வரை வற்றியதும் உபயோகிக்கலாம். ஆவிரைக் குடிநீர் என்றழைக்கப்படும் இந்தக் குடிநீரை தினமும் இரண்டு வேளை 30மி லி அளவுக்கு குடித்து வந்தால் சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும். பக்க விளைவுகளும் குறையும்.

பெண்களுக்கு வெள்ளைப்படுதல், உஷ்ணம் ஆகியவற்றை தணிக்கும்.

மல்லிகைப்பூ, ஆவாரம்பூ, சிறுகம்பிழை ஆகியவற்றை சேர்த்து கஷாயமாக பருகி வர சிறுநீரக கற்கள் கரையும். இதன் பிசினை பத்து கிராம் அளவு எடுத்து தினம் நீரில் கலந்து சாப்பிட சிறுநீரக எரிச்சல், சிறுநீரக கோளாறுகளை சரிப்படுத்தும்.

பாசிப்பருப்பு, கடலைப்பருப்பு, ரோஜா மொட்டு, வெட்டிவேர், கோரைக்கிழங்கு, விளாம்பிச்சை வேர், கஸ்தூரி மஞ்சள், ஆவாரம்பூ இதழ்கள் இவற்றை சம அளவு எடுத்து சிறிது வசம்பு சேர்த்து அரைத்துக் கொள்ளவும். சோப்புக்கு பதில் இந்த நலங்கு மாவை தினமும் தேய்த்து க் குளிப்பதன் மூலம் சருமம் பொன்னிறமாக மின்னும்.சருமம் சுத்தமாகி தேமல், கரும்புள்ளிகள், போன்ற தோல் பிரச்சனைகளைப் போக்கும்.

தலைமுடி வளர்ச்சிக்கும் உதவும். பேன், பொடுகு போன்ற தலைமுடிப் பிரச்சனைகளையும் சரிசெய்கிறது. மொத்தத்தில் ஆவாரம்பூவை உபயோகித்து பல நன்மைகளை பெற்று ஆரோக்கியமாக வாழலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com