
எந்த வயதிலும் நம் முகமும், சருமமும் வெள்ளையாக, பளிச்சென்று இருப்பதைதான் விரும்புவோம். இளம் வயதினரும் தங்கள் முகத்தை ப்ளீச்சிங் பண்ண ஆர்வம் கொண்டு அடிக்கடி பண்ணிக்கொள்கின்றனர். பதினாறு வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு சருமம் மென்மையாக இருக்கும். இவர்கள் எந்த வகையான ப்ளீச்சிங்கையும் செய்து கொள்ளக் கூடாது. வறண்ட சருமத்திற்கும் ப்ளீச்சிங் செய்து கொள்வது நல்லது அல்ல.
சாதாரண சருமம் உள்ளவர்கள் ப்ளீச் செய்தால், முகம் இன்னும் பளபளப்பாகும். ஆனால் அவர்கள் குளிர் காலத்தில் ப்ளீச் செய்வதால் சருமம் வறண்டு பாதிப்பை ஏற்படுத்தும்.
எண்ணெய் சருமம் உள்ளவர்களுக்கு தான் ப்ளீச்சிங் மிகவும் நல்லது. பிளீச் செய்வதற்கு முன் கை அல்லது காதின் பின்புறம் பேட்ச் பரிசோதனை செய்து கொண்டு பாதிப்பு இல்லை என்றால் மட்டுமே செய்து கொள்ள வேண்டும். மாறாக எரிச்சல், தடிப்பு போன்ற பாதிப்புகள் தெரிந்தால் ப்ளீச்சிங் செய்யக் கூடாது.
நிறைய பேர் ப்ளீச்சிங் செய்து கொள்வது முகத்தை கருப்பாகி விடுகிறது என்று சொல்லக் கேட்கிறோம். உண்மையில் பிரச்சினை ப்ளீச்சிங்-கில் இல்லை. ப்ளீச்சிங் செய்த பிறகு, சருமத்தை சரியாக பராமரிக்காததுதான் காரணம்.
பொதுவாக பியூட்டி பார்லரில் ப்ளீச்சிங் செய்தவுடன் பேஷியல் செய்யப்படும். ஆனால் வீட்டிலேயே செய்து கொள்பவர்கள் பேஷியலை சரியான முறையில் செய்து கொள்ளாததோடு, சன் ஸ்கிரீன்-ம் போட மாட்டார்கள். இதனால் முகம் சில நாட்களில் கருமையாகி விடும். மேலும் சுருக்கங்களும் ஏற்படும். எனவே ப்ளீச்சிங் செய்தவுடன் பேஷியல் செய்து கொள்ள வேண்டும். அதன் பிறகு அரை மணி நேரத்திற்கு பிறகு தான் வெளியில் செல்ல வேண்டும்.
ஆண்கள் ப்ளீச்சிங் செய்வதற்கு முன் ஷேவ் செய்யக்கூடாது. கடினமான தோல் என்பதால் எரிச்சல் ஏற்படும்.
சிலர் முகம் எப்போதும் பளிச்சென்று இருக்க வேண்டும் என பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை ப்ளீச்சிங் செய்து கொள்வார்கள். இது தவறு. மாதத்திற்கு ஒரு முறைதான் ப்ளீச் செய்ய வேண்டும். சருமம் பளிச்சென்று ஆரோக்யமாக இருக்க சமச்சீரான உணவு, நல்ல தூக்கம், தரமான அழகுப் பொருட்களை உபயோகப்படுத்துதல் போன்றவை நம்மை அழகாக்கும்.
வீட்டில் செய்து கொள்ள ஹெர்பல் ப்ளீச்சிங் நல்லது. எலுமிச்சை, தேன், தயிர் இந்த மூன்றையும் கலந்து முகம், கழுத்துப் பகுதியில் தடவி ஊற விட்டு பின் கழுவ கருமை மறைந்து பளிச்சென்றாகி விடும்.