அடிக்கடி காலை உணவை ஸ்கிப் பண்றீங்களா? அதற்கான தீர்வு இங்கே!

அடிக்கடி காலை உணவை ஸ்கிப் பண்றீங்களா? அதற்கான தீர்வு இங்கே!

காலை வேளையில் அலுவலகம் கிளம்புகிறவர்களும் சரி, பள்ளிக்குக் கிளம்பும் குழந்தைகளும் சரி சரிவிகித உணவு எடுத்துக் கொள்வதில் கொஞ்சம் அசடாகத்தான் இருக்கிறார்கள். கிளம்பும் அவசரத்தில் எதையோ உண்டோம் என்று பேர் பண்ணிக் கொண்டு ஓடியே விடுகிறார்கள். இதனால் நாள் முழுவதும் உழைத்து விட்டும், படித்துக் களைத்தும் வீடு திரும்பும் போது இரவு உணவை ஒழுங்காக உண்ணக் கூட முடியாமல் அசதியில் அப்போதும் எதையோ சாப்பிட்டோம் என்ற பெயரில் கொரித்து விட்டுப் படுத்து விடுகிறார்கள் பலர். இதில் வயது வித்தியாசமே இல்லை.

விடுமுறை நாட்களில் ஆற அமர்ந்து ரசித்து , ருசித்து உண்பதைப் போல மற்ற தினங்களில் முடியாது. எதையாவது வயிற்றில் ரொப்பிக் கொண்டு போகலாம் என்று விட்டேற்றியான மனநிலையால் பல நேரம் சாப்பிடுவதற்கே சோம்பேறித்தனப் பட வேண்டியதாயிருக்கிறது என்கிறார்கள் பள்ளி இறுதி வகுப்பு படிக்கும் மாணவர்களில் சிலர். அலுவலகம் செல்லும் தோழிகளோ, காலையில் எங்க சாப்பிட நேரமிருக்கு? ஆஃபீஸ் கேண்டீன்ல ஸ்நாக்ஸ் டைம்ல ஏதாவது பார்த்துக்கலாம்னு ஒரு வாய் அள்ளிப் போட்டுக்கிட்டு ஓடி வந்தேன் என்பார்கள்.

இதெல்லாம் நல்லதில்லையே!

அவர்களுக்காகவே கண்டுபிடிக்கப்பட்டவை தான் இந்த ஸ்மூத்திகள் என்று சொல்லலாம்.

ஆமாம், நீங்கள் காலை உணவை சரியாகச் சாப்பிடாமல் தவிர்க்கிறீர்கள் என்றால் தயவு செய்து இரவே இந்த ஸ்மூத்திகளுக்குத் தேவையான பழங்கள் மற்றும் காய்கறிகளை தோல் நீக்கி அரிந்து வைத்து விட்டால் போதும். காலையில் மிக்ஸியில் அப்படியே ஒரு ஓட்டி ஓட்டி வயிறு குளிர நாவு இனிக்க அருந்தி விட்டுப் பிறகு இருக்கவே இருக்கின்றன மற்ற பணிகளை நாள் முழுக்கத் தொடரலாம். அதற்காக இது மட்டுமே நாள் முழுக்கப் போதும் என்று சொல்லவில்லை.

நடு நடுவே ஸ்நாக்ஸ், மதிய உணவு, மாலைப் பலகாரம் எல்லாமும் ஸ்மரட்சணையாக சாப்பிடத்தான் வேண்டும். நான் சொல்லும் இந்த ரெஸிப்பி காலை உணவை ஸ்கிப் செய்பவர்களுக்கு மட்டும் ரொம்பவே அதி முக்கியம்.

தேவையான பொருட்கள்:

ஃப்ரெஷ் கேரட் - 1

ஆரஞ்சுப் பழம் - 1

கனிந்த வாழைப்பழம் - 1

பால் - 1 கப்

தேன்- 3 டீஸ்பூன்

செய்முறை:

கேரட்டை நன்றாகக் கழுவி தோல் சீவி வில்லைகளாக நறுக்கிக் கொள்ளவும். பச்சை கேரட் வாசம் பிடிக்காதவர்கள் பாலைக் கொதிக்க வைக்கும் போது கேரட் வில்லைகளை அதில் போட்டு ஒரு கொதி வந்ததும் இறக்கி ஆறவிட்டு எடுத்துக் கொள்ளலாம். ஆரஞ்சுப் பழத்தைத் தோல் உரித்து நார் மற்றும் விதைகளை நீக்கி எடுத்துக் கொள்ளவும் இவற்றுடன் நன்கு கனிந்த வாழைப்பழத்தை வில்லைகளாக்கி அரை கப் பால் கலந்து மேற்சொன்ன பொருட்களுடன் சேர்த்து நைஸாக அரைத்து எடுத்துக் கொள்ளவும். இனிப்பு வேண்டும் என்றால் தேன் கலந்து கொள்ளலாம். அதற்காக மட்டுமில்லை இனிப்புக்கு சர்க்கரை கலப்பதைக் காட்டிலும் தேன் தான் ஆரோக்யமானதும் கூட. இது ஜூஸ் அல்ல ஸ்மூத்தி என்பதால் தண்ணீர் கலக்க வேண்டியதில்லை. பழங்களில் இருக்கும் நீர்ச்சத்தே போதும் தான். கூடுதலாகப் பால் வேறு கலக்கிறோம் இல்லையா... அது போதும்.

இந்த ஸ்மூத்தி மிக அருமையான எனர்ஜி பூஸ்டர். எளிமையாக குளு குளுவென வயிற்றுக்குள் இறங்கும் சுகமே அலாதியாக இருக்கும். விரும்பினால் ஓரிரு ஐஸ் கியூப்கள் சேர்க்கலாம்.

காலை உணவை ஸ்கிப் பண்ணும் சூழல் வந்தால் நீங்கள் இதை முயற்சித்துப் பாருங்களேன்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com