ஆரோக்கிய வாழ்வு தரும் கம்பு

ஆரோக்கிய வாழ்வு தரும் கம்பு

நீரிழிவு நோய் தாக்கம் கொண்டவர்கள் சர்க்கரை சத்துக்கள் அதிகமுள்ள அரிசி போன்றவற்றை சாப்பிடமுடியாது. அந்த அரிசிக்கு மாற்றாக தினமும் கம்பு கூழ், களி, தோசை போன்றவற்றை செய்து சாப்பிடுவது அவர்களின் ஆரோக்கியத்திற்கு சிறந்தது. இழந்த உடல்சக்திகளை மீண்டும் தர வல்லது இந்த கம்பு.

சிறுதானியமான கம்பில் பல உடலுக்கு தேவையான சத்துகளும், வேதிப்பொருள்களும், வைட்டமின்களும் நிறைந்துள்ளன. இந்த கம்பை தொடர்ந்து உணவாக உட்கொள்பவர்களுக்கு உடலில் நோய் எதிர்ப்பு திறன் மேம்பட்டு உடலை பல நோய்களின் தாக்கத்திலிருந்து காக்கிறது.

நாம் உண்ணும் உணவுகள் அனைத்தும் எளிதில் செரிமானம் அடைய வேண்டும். கம்பு நார்சத்து அதிகம் கொண்டதால் வயிற்றில் செரிமான கோளாறுகள் மற்றும் புண்கள் கொண்டவர்கள் தொடர்ந்து சில காலம் உண்டு வருவதால் வயிறு சம்பந்தமான அத்தனை குறைபாடுகளையும் நீக்கும்.

பசி அதிகம் எடுப்பவர்கள் அடிக்கடி எதையாவது உண்பதால் அவர்களின் உடலில் கட்டுப்பாடில்லாமல் எடை கூடிவிடுகிறது. இவர்கள் கம்பு கொண்டு செய்யப்பட்ட உணவுகளை உண்பதால் பசியை சரியான நேரத்தில் மட்டுமே எடுக்கச்செய்து, இவர்களின் உடல் எடையை குறைக்கும்.

இன்றைய காலங்களில் மனிதர்களுக்கு பல்வேறு விதமான புற்று நோய்கள் வருகின்றன. அதில் ஒன்று தான் குடல் புற்று. கம்பு உணவுகளை தினந்தோறும் ஒரு முறையேனும் உட்கொள்பவர்களுக்கு குடல் புற்று ஏற்படுவது தடுக்கப்படுவதாக மருத்துவ ஆய்வுகள் கூறுகின்றன.

கம்பு அதிகம் உட்கொள்பவர்களின் ரத்தத்தில் இருக்கும் செல்களின் பிராணவாயு உபயோகிப்பை அதிகப்படுத்துவதால், அவர்களின் தோலில் சுருக்கங்கள் ஏற்படுவதை தடுத்து, தோல் பளப்பளபையும் இளமை தோற்றத்தையும் தருகிறது. முதுமை அடைவதை தாமதப்படுத்துகிறது.

புதிதாக குழந்தை பெற்ற சில தாய்மார்களுக்கு ஒரு சில சமயங்களில் தாய்ப்பால் சுரப்பு குறையும் அல்லது நின்றுவிடும். இந்த தாய்மார்கள் தினமும் கம்பு கூழ் அல்லது களி போன்றவற்றை உண்பதால் தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கும்.

பெண்களுக்கு மாதந்தோறும் ஏற்படும் மாதவிடாய் சமயங்களில் அதிக ரத்த போக்கும், அடிவயிற்று வலியும் ஏற்படுகின்றன. இப்படியான நேரங்களில் இளம் சூடாக கம்பு கூழ் அல்லது கம்பு சூப் அருந்த மேற்கண்ட பிரச்சனைகள் தீரும்.

கம்பு ரத்தத்தில் இறுக்கத்தன்மையை தளர்த்தி பிராணவாயு கிரகிப்பை அதிகப்படுத்துவதால் உயர் ரத்த அழுத்தம் போன்றவை ஏற்படும் வாய்ப்பை தடுக்கிறது. ரத்தத்தில் இருக்கும் கழிவுகளை நீக்கி, ரத்தத்தை தூய்மைப்படுத்துகிறது. இதனால் உடல் சுறுசுறுப்பாக இயங்க முடிகிறது.

வெயிலில் அதிகம் அலைகிறவர்கள், கடின வேலை செய்பவர்கள் அதிகம் சோர்வடைகின்றனர். இவர்கள் புத்துணர்வு பெற கம்பை கூழாக்கி, அதனுடன் மோர் கலந்து மதிய வேளையில் அருந்தி வந்தால் உடல் சோர்வு நீங்கி புத்துணர்வு கிடைக்கும்.

அஜீரணக் கோளாறு கொண்டவர்கள் கம்பங் கஞ்சியை அருந்தி வந்தால் அஜீரணக் கோளாறுகள் நீங்கி நன்கு பசியெடுக்கும். வயிற்றில் புண்கள் உண்டானால் வாயிலும் புண்கள் ஏற்படும். மேலும் வயிற்று புண்களை குணப்படுத்தும் குணம் கம்புக்கு உண்டு.

கம்புடன் அரிசி சேர்த்து நன்கு குழையும்படி சோறாக்கி மதிய உணவில் சேர்த்துக் கொண்டால் குடல்புண், வயிற்றுப்புண், வாய்ப்புண் குணமாகும்.

உடல் வலுவடைய கம்பு மிகச் சிறந்த உணவாகும். அடிக்கடி கம்பங்கஞ்சி சாப்பிட்டு வந்தால் உடல் வலுவடையும்.

கண் நரம்புகளுக்கு புத்துணர்வு கொடுத்து பார்வையை தெளிவாக்கும். இதயத்தை வலுவாக்கும். சிறுநீரைப் பெருக்கும். நரம்புகளுக்கு புத்துணர்வைக் கொடுக்கும். இரத்தத்தை சுத்தமாக்கும்.

உடலில் தேவையற்ற நீரை வெளியேற்றும். நோய் எதிர்ப்பு சக்தியைத் தூண்டும். தாதுவை விருத்தி செய்யும். இளநரையைப் போக்கும்.

அதிகமாக கம்பங்கஞ்சி அருந்தினால் சில சமயங்களில் இருமல், இரைப்பு போன்றவற்றை உண்டாக்கும். அதனால் அளவோடு சாப்பிட்டு ஆரோக்கியமாக வாழலாம்

உடல் ஆரோக்கியமாக இருந்தால்தான் சிந்தனை தெளிவாக இருக்கும் சிந்தனை தெளிவாக இருந்தால் தான் குடும்பம் மகிழ்ச்சியாக இருக்கும் ஆரோக்கியத்தை காப்போம் மகிழ்ச்சியுடன் இருப்போம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com