சுகப்பிரசவம் நிகழ சில யோசனைகள்!

சுகப்பிரசவம் நிகழ சில யோசனைகள்!

பிள்ளை பெறும் காலம் வந்தால் பெண்ணுக்கு கொண்டாட்டம் என்றொரு பாடல் உண்டு. இதற்கான காரணம், பேறு காலத்திற்கு பெண் தாய் வீட்டிற்குச் செல்வாள். உற்றார், உறவினர், அக்கம் பக்கத்தார் அனைவரும் அவரவருக்கு வசதியான  கர்ப்பிணிக்கு ஏதுவான திண்பண்டங்களை கொடுத்து தாங்குவார்கள் கூடவே அனைவரும் அன்பு பொழிவார்கள். ஈருயிர்க்காரி என்று தனிக் கவனம் எடுத்துக் கொள்வார்கள். கூடவே மருத்துவ அறிவுரைகளும் புகுத்தப்படும். இதனால் கர்ப்பிணி மனம் மகிழ்வாள். அந்த மகிழ்ச்சியிலேயே சுகப்பிரசவத்திற்கான அனைத்தும் கிடைத்து விடும். 

ஆனால் இன்று வாழ்க்கையில் நிறைய மாற்றங்கள் வந்து விட்டதால், கூட்டுக் குடும்பம் சிதறி தனித்தனி தீவாக பிரிந்து விட்டதால், யாரும் யாரிடமும் மனம் விட்டு பேசிக் கொள்ளாததால் சிசேரியனுக்கு இதுவும் ஒரு காரணம். என்ன மாற்றங்களை செய்தால் சுகப்பிரசவத்திற்கு வழி தேடலாம் என்பதற்கு சில குறிப்புகள் இதோ: 

முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்பதை உணர்ந்து டீன் ஏஜ் பருவத்திலிருந்து ஆரோக்கியமான உணவுகளை பெண் பிள்ளைகள் சாப்பிட வேண்டும். வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் சாப்பிட்டு முடித்தது போக, பாக்கி இருப்பதை பெண்தானே என்று அவளுக்கு மீதமான உணவை கொடுப்பதை தாய்மார்கள் நிறுத்த வேண்டும்.

இன்றைய இளைய தலைமுறை பெண்களும் டயட் என்கிற பெயரில் உடல் வருத்தி, ஒல்லியாக இருப்பதற்கு சத்து குறைவான உணவு முறையை கடைபிடித்தால் பின்னாளில் சிசேரியன் செய்ய செய்ய வாய்ப்பு அதிகம் என்பதை உணர்ந்து, உணவு முறையில் அக்கறை காட்ட வேண்டும். ஆதலால் சுகப்பிரசவத்திற்கு பெண்கள் தயாராக வேண்டியதும், குழந்தைகளை தயார்படுத்தி விடுவதும் அவர்கள் பருவம்  எய்தும் காலமே மிகவும் முக்கியமானது.

சித்திரையில் குழந்தை பிறந்தால் மாமாவுக்கு ஆகாது என்ற நம்பிக்கையில் பங்குனியிலே நல்ல நேரமாக நல்ல நேரத்தில் குழந்தை பிறக்க வேண்டும் என ஜோசியரிடம் சென்று, அவர் குறித்து கொடுத்த நல்ல நேரத்தை மனதில் வைத்து ஆரோக்கியமான சுகப்பிரசவத்திற்கு இடம் தராமல் அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பிறக்க வைப்பது பெருந்தவறு என்பதை சம்பந்தப்பட்டவர்கள் உணர வேண்டும். 

தாயின் கர்ப்ப காலத்தில் முறையான உணவு, செக்கப், உடற்பயிற்சி, பராமரிப்பு, மன தைரியம் போன்ற பல காரணங்கள் சுகப்பிரசவத்தை தீர்மானிக்கின்றன. குழந்தைப் பிறப்பில் அவசரம், பரபரப்பு தலையிடாமல் பார்த்துக் கொள்வது முக்கியம். 

கூட்டுக் குடும்பமாக வாழும் போது கருவுற்று  இருக்கும் தாய்க்கு அனுபவம் மிகுந்த பெண்மணி ஒருவர் உடன் இருந்து நேரடியாக கவனித்துக் கொள்வார். அதிர்ந்து பேசக்கூடாது. வேகமாக நடக்கக்கூடாது உள்ளிட்ட சின்ன சின்ன விஷயங்களில் இருந்து எதை சாப்பிட வேண்டும் எதை சாப்பிடக்கூடாது என்பதுவரை கவனித்துப் பார்த்துக் கொள்வார். தனிக்குடித்தன அமைப்பில் அந்த வசதி எல்லோருக்கும் வாய்ப்பதில்லை. கர்ப்ப காலத்தில் எப்படியாவது அனுபவமுள்ள ஒருத்தரை கருவுற்று இருக்கும் தாயுடன் இருக்கும்படி பார்த்துக் கொள்வது நல்லது. இப்படி உட்காராதே, அப்படி படுக்காதே. குனிந்து நிமிர்ந்து வேலை செய், என்று அனுபவசாலிகள் சொல்லும் ஆலோசனைகள் இந்த காலத்து பெண்களுக்கு கசப்பாக இருந்தாலும், மருந்தாக நினைத்து கடைபிடிக்க வேண்டும். 

வீட்டுப் பெரியவர்கள் அடிக்கடி பெற்றோர்களுக்கு அறிவுறுத்துவது  இதைத்தான். வயிற்றில் உள்ள குழந்தை தானாக வெளியே வர வேண்டுமெனில் இடுப்பு எலும்பு கொஞ்சம் விட்டுக் கொடுப்பது அவசியம். வயது முதிர்ந்து பிரசவம் ஆகும் போதும், குழந்தை பேற்றை தள்ளி வைத்து வேண்டுமென்றபோது பெற்றுக் கொள்ளும் போதும் உடல் முழுவதுமாக சுகப்பிரசவத்திற்கு ஒத்துப் போவதில்லை. அதனால் 'காலத்தே பயிர் செய்வது அவசியம்'. 

நெருக்கமான உறவு முறையில் திருமணம் செய்து கொள்வது நாலு சதவீத சிசேரியன்கள் நடக்க காரணம் என்கிறார்கள் மருத்துவ நிபுணர்கள். உறவு முறை திருமணங்களில் அதிகம் பாதிப்புக்கு உள்ளாவது பிறக்கப் போகிற குழந்தைகள்தான். பல்வேறு சிக்கல்களோடு குழந்தை கருவில் வளரும். மேலும் சிக்கல் வராமல் தடுக்க முன்கூட்டியே சிசேரியன் செய்வது அவசியம் ஆகிறது.

கொஞ்சம் வசதியான சூழலில் வளர்ந்த பெண்களுக்கு வேலை செய்வது கடினமாக இருக்கும். கர்ப்ப காலத்தில் கவனித்துக் கொள்கிறோம் என்ற பெயரில் எந்த வேலையும் செய்ய விடாமல் சும்மா இருக்க வைத்து விடுகிறார்கள். இதனால் உடல் எடை கூடி விடுவதோடு உடலின் செயல் திறனும் குறைந்து விடுகிறது. வயல்வெளியில் வேலை செய்து கொண்டு பிரசவ வலி ஏற்பட்டதும் ஒரு மரத்தடியில் குழந்தையைப் பெற்று சில நாட்களில் அதே மரத்து கிளையின் தொட்டில் கட்டி குழந்தையை போட்டு விட்டு வேலை செய்கிற கிராமத்து பெண்களின் உழைப்பு நகரத்து பெண்களிடம் இல்லை. சிசேரியன் நடப்பது அதிகமாக நகரத்துப் பெண்களுக்குதான் என்பதை நினைவில் நிறுத்துவது அவசியம். 

அழகு பற்றிய சிந்தனையில் அதிக எடை போடக்கூடாது என்கிற காரணத்தால் பிரசவ காலத்தில் டயட் இருக்கிறவர்களும் உண்டு. இரண்டு உயிர்களுக்கு சக்தி வேண்டும் என்கிற சிந்தனை இல்லாமல் உணவு முறையில் ஏகப்பட்ட குளறுபடிகள் செய்வதும் அதிகரித்து வருகிறது.  நொறுக்குத் தீனிகள், குளிர்பானங்கள், கொழுப்பு வகை உணவுகள் என ஆரோக்கியத்துக்கு எதிரான உணவுப் பழக்கத்தை கைவிட்டு, சுகப்பிரசவத்திற்கு நம்மை கைப்பிடித்து அழைத்துச் செல்லும் ஆரோக்கியமான உணவு முறையைக் கடைபிடிக்க வேண்டும். 

வலி பொறுத்துக் கொள்ளும் மனநிலை இப்பொழுது பெண்களுக்கு குறைந்து வருகிறது. வலி தாங்கும் சக்தியை பெறாமல் வலியை குறுக்கு வழியில் எதிர்கொள்ள, சில பெண்கள் சிசேரியன் செய்து விடுங்கள் என்று கேட்கிறார்கள். கட்டாயம் இந்த நிலை மாற வேண்டும். அதற்குப் பெண்கள் மனநிலையில் மாற்றம் வர வேண்டும். 

நாட்டு அவரைக்காய், தனியா, காய்ந்த மிளகாய், வெங்காயம், சீரகம், மிளகு, கறிவேப்பிலை ஆகியவற்றைப் போட்டு பொன்னிறமாக வறுத்து, அரைத்து சாதத்தில் கலந்து கொடுத்தால், நாவிற்கு சுவையாய், மருந்துக்கும் மருந்தாய்  இருப்பதுடன் தாய்ப்பால் நன்றாக சுரக்கும். இப்படிப்பட்ட சுகங்களை எல்லாம் ஆழ்ந்து அனுபவிக்கும் தருணம் என்றால் அது பேறு காலத்தின் போதுதான். அதனால்தான் பிள்ளை பெறும் காலம் வந்தால் பெண்ணுக்கு கொண்டாட்டம் என்றார்கள். 

எப்படி இருப்பினும் அனுபவத்தின் அறிவுரைகளையும், விஞ்ஞானத்தின் மாற்றங்களையும் சரியாகக் கலந்து கர்ப்ப காலத்தில் கவனத்தோடு இருந்தால், சிசேரியனைத் தவிர்த்து சுகப்பிரசவம் நிகழ்வதை உறுதி செய்யலாம். அது தாய்க்கும் நல்லது;  சேய்க்கும் நல்லது! ஒட்டுமொத்த குடும்பத்திற்கும் மிக மிக நல்லது!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com