உடல் உஷ்ணத்தை அதிகப்படுத்தும் மசாலா பொருட்கள்!

கோடைக் காலத்தில் உடல் உஷ்ணம் அடைவது தவிர்க்க முடியாதது. உண்ணும் உணவில் சேர்க்கப்படும் சில மசாலா பொருட்களும் உடல் சூட்டை அதிகப்படுத்தி விடும் தன்மை கொண்டவை. அவை பல்வேறு நன்மைகளை வழங்கினாலும் கூட கோடைக் காலத்தில் கூடுமானவரை தவிர்க்க வேண்டும். அத்தகைய மூன்று மசாலா பொருட்கள்:
பூண்டு:
இது வெப்பத்தை உற்பத்தி செய்யக்கூடியது. இதனை கோடைக் காலத்தில் அதிகமாக உண்ணும்போது உடல் வெப்பமடையும். அதிலும் தினமும் பூண்டை உணவில் சேர்க்கும்போது உடல் சூட்டை அதிகப்படுத்தி விடும். மேலும் கோடையில் அதிகமாக பூண்டு உட்கொள்வது துர்நாற்றம், அசிடிட்டி, ரத்தப்போக்கு போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும். பூண்டு உடல் எடை இழப்புக்கு உகந்தது. வளர்சிதை மாற்றத்தை துரிதப்படுத்தக் கூடியது என்றாலும் குளிர்கால உணவாகவே பூண்டு கருதப்படுகிறது. அதனை குளிர்காலத்தில் அதிகமாக உட்கொண்டாலும் அதிக பாதிப்பை ஏற்படுத்தாது. ஆனால் கோடையில் சற்றென்று பாதிப்பை உணர முடியும்.
இஞ்சி:

காய்கறிகளுடன் இஞ்சி சேர்த்து சமைப்பது சுவையைக் கூட்டும் என்று நம்பப்படுகிறது. உடல் உறுப்புகளுக்கு பல்வேறு நன்மைகளையும் அளிக்கக் கூடியது. ஆனால் கோடையில் இஞ்சி அதிகம் சேர்ப்பது பல்வேறு சிக்கல்களை உண்டாக்கும். அவற்றுள் வயிற்றுப்போக்கு, நீர் இழப்பு போன்றவை முதன்மையானவை. வயிறு தொடர்பான பல்வேறு பிரச்சனைகளையும் எதிர்கொள்ள வேண்டி இருக்கும்.
மிளகாய் தூள்:
கோடைக் காலத்தில் மிளகாய்த் தூள் சமையலில் அதிகம் சேர்க்கும்போது வயிறு, தொண்டை மற்றும் மார்பு பகுதியில் எரிச்சல் உணர்வை ஏற்படுத்தும். உடல் வெப்பநிலையையும் சற்றென்று அதிகப்படுத்தி விடும். அதனை கவனத்தில் கொள்ளாமல் மிளகாய்த்தூள் போன்ற காரமான உணவு பொருளை அதிகம் உணவில் சேர்த்தால் உடல் உஷ்ணம் அதிகமாகி வெப்ப பக்கவாதம் ஏற்படக்கூடும்.

கோடையில் காபி, டீ போன்ற சூடான பானங்கள் உட்கொள்வதையும் தவிர்க்க வேண்டும். காரம் மற்றும் கொழுப்பு குறைவான உணவுகளை உட்கொள்ளுமாறு உளவியல் நிபுணர்கள் அறிவுறுத்துகிறார்கள். ஆதலால் இவற்றை கவனத்தில் கொண்டு சமையலில் கவனமாக சேர்த்து பயன்பெறுவோமாக!