ஒரு வீட்டிற்குள் நுழைந்ததும் ஒருவர் அந்த வீட்டினுள் உள்ள ஆடம்பரமான பொருட்களையும் பிரம்மாண்டத்தையும் கண்டு வியப்பது வழக்கமான ஒன்றுதான். ஆனால், ஒரு எளிமையான வீட்டில் எந்த ஆடம்பரப் பொருட்களும் இல்லாத நிலையிலும். அந்த வீட்டிற்கு வருபவரை நிச்சயம் வியப்பில் ஆழ்த்த முடியும். அது குறித்து இந்தப் பதிவில் காண்போம்.
பொதுவாக, வீட்டிற்குள் நுழைந்ததும் ஷூக்களும் செருப்புகளும் ஆங்காங்கே பல திசைகளிலும் இறைந்து கிடக்கும். செருப்புகளை அடுக்கி வைக்க அதற்கான ஸ்டாண்டு இருந்தாலும் ஒருவரும் அதை முறைப்படி பயன்படுத்துவதில்லை. செருப்புகளையும் ஷூக்களையும் ஜோடி ஜோடியாக ஒன்றின் அருகில் மற்றொன்று என்று வரிசையாக நீளமாக அடுக்கி வைத்துப் பாருங்கள். பார்ப்பதற்கே அழகாக இருக்கும். செருப்புகளும் ஷூக்களும் அழகாக வரிசையாக அடுக்கி வைத்திருக்கும் வீட்டிற்குள் நுழைபவர்களின் மனதில் அந்த வீட்டைப் பற்றிய நல்லதொரு அபிப்பிராயம் இயற்கையாகவே மனதில் எழும்.
வரவேற்பறையில் உள்ள மின்விசிறிகள் பொதுவாக தூசியும் அழுக்கும் படிந்து காணப்படும். விளக்குகளும் தூசி படிந்து பார்ப்பதற்கு அலங்கோலமாக காணப்படும். வாரத்திற்கொரு முறை அவற்றை நன்றாகத் துடைத்து வையுங்கள். வரவேற்பறையில் தேவையில்லாத எந்த ஒரு பொருளையும் வைக்காதீர்கள். ஒரு தொலைக்காட்சி, வருபவர்கள் அமர ஒரு எளிமையான சோபா செட், டீபாய் என இவை மட்டும் இருந்தால் போதும்.
எளிமை என்பது மிகவும் அழகுணர்ச்சி நிறைந்தது என்பதே உண்மை. ஆடம்பரம் பார்க்கும் அனைவருக்கும் பொறாமை உணர்ச்சியைத் தூண்டும். ஆனால், எளிமையோ மனதிற்கு ஒருவித நிம்மதியையும் சந்தோஷத்தையும் தரும். எனவே உங்கள் வரவேற்பறையில் ஆடம்பரமான பொருட்கள் எதையும் வைக்காதீர்கள்.
பலர் துவைத்த துணிகளை மடிப்பதற்கு சோம்பல் பட்டுக்கொண்டு வரவேற்பறையிலோ அல்லது படுக்கை அறையிலோ ஆங்காங்கே குவியலாகப் போட்டு வைத்திருப்பார்கள். இது பார்ப்பதற்கே சற்று எரிச்சலூட்டும். துவைத்து முடித்து துணிகள் காய்ந்தவுடன் அவற்றை அடுக்கி அழகாக பீரோவிற்குள் வைத்து விடுங்கள்.
வரவேற்பறையில் செய்தித்தாள்கள் மற்றும் வார இதழ்களை அழகாக டீபாயின் மீது அடுக்கி வையுங்கள். படித்து முடித்த செய்தித்தாள்களையும் வார இதழ்களையும் ஒரு கப்போர்டில் அழகாக அடுக்க வையுங்கள்.
பொதுவாக. எந்த ஒரு வீட்டிலும் தேவையில்லாத பொருட்கள் ஏராளமாக பரண் மீது போடப்பட்டிருக்கும். அப்படிப் போடப்பட்ட பொருட்கள் பத்து பதினைந்து வருடங்களாக அப்படியே கிடக்கும். இத்தனை வருடம் தேவைப்படாத ஒரு பொருள் உங்களுக்கு நிச்சயம் தேவையே இல்லாத பொருட்களாகத்தான் இருக்கும். இவற்றை அவ்வப்போது வீட்டிலிருந்து சுத்தமாக அகற்றி விடுங்கள்.
சமையல் அறையில் ஏராளமான பாத்திரங்கள் மற்றும் டப்பாக்களை அடுக்கி வைத்திருப்பார்கள். இவற்றில் அன்றாடம் தேவைப்படுபவை என எடுத்துக் கொண்டால் வெகு சொற்பமாகத்தான் இருக்கும். அப்படிப்பட்ட பொருட்களை மட்டும் எடுத்து வைத்துக்கொண்டு மீதமுள்ள பொருட்களை அப்புறப்படுத்தி விடுங்கள்.
வீட்டின் கூரையில் உள்ள ஒட்டடை மற்றும் தூசிகளை அவ்வப்போது ஒட்டடைக் குச்சியால் சுத்தம் செய்தபடி இருக்க வேண்டும். ஒட்டடை மற்றும் தூசிகள் பார்ப்பவர்களின் மனதில் ஒருவித எரிச்சலை ஏற்படுத்தும்.
வீட்டின் கழிவறைகளை ஒருநாள் விட்டு ஒருநாள் சுத்தம் செய்ய வேண்டும். கழிவறை சுத்தமாக இருந்தால்தான் அந்த வீடு ஆரோக்கியமாக இருக்கும். பெரும்பாலான வீடுகளில் கழிவறைகள் மிகவும் மோசமான நிலையில் இருக்கும். வீட்டிற்கு வருபவர்கள் உங்கள் வீட்டுக் கழிவறையை உபயோகிக்கும்பட்சத்தில் அது மிகவும் சுத்தமாக பளபளப்பாக இருந்தால் அவர்கள் நிச்சயம் ஆச்சரியப்படுவார்கள்.
இவை எல்லாவற்றையும் விட, வீட்டிற்கு வருபவர்களை மன மகிழ்ச்சிக்குள்ளாக்கும் மற்றும் இல்லத்திற்கு அழகு சேர்க்கும் மற்றொரு முக்கியமான விஷயம் உள்ளது. அது வீட்டிற்கு வருபவர்களை வரவேற்கும் விதம். உங்கள் வீட்டிற்கு உங்களைத் தேடி யார் வந்தாலும் முதலில் தொலைக்காட்சியை அணைத்து விடுங்கள். வருபவர்களை இன்முகத்துடன் வாருங்கள் என்று வரவேற்பு கொடுங்கள். இது நிச்சயம் வரும் விருந்தினரை மகிழ்ச்சிக்குள்ளாக்கி உங்கள் அனைவரின் மீதும் நல்லதொரு அபிப்பிராயத்தை மனதில் ஏற்படுத்தும்.
இவற்றையெல்லாம் செய்து பாருங்கள். உங்கள் வீட்டிற்கு வருபவர்கள் நிச்சயம் வியப்பார்கள். செல்லுமிடமெல்லாம் உங்கள் இல்லத்தைப் பற்றிப் பேசுவார்கள்.