ஒரு வியாபார நிறுவனத்துக்கோ அல்லது சமூக அமைப்பு ஒன்றுக்கோ தலைமை தாங்குவது என்பது எளிதான வேலை அல்ல. தலைவருக்கான பொறுப்புகளும் சுமைகளும் அதிகம். அந்த வகையில் மனம் மற்றும் மதிநுட்பத்துடன் பணி செய்யும் ஆற்றல் பெற்ற நிர்வாகத் தலைவருக்கான 10 குணங்கள் குறித்து இந்தப் பதிவில் காண்போம்.
1. பிறரை கவருவதும் ஊக்குவிப்பதும்: தெளிவான எதிர்கால இலக்கை உருவாக்கி அதன்படி பணியாளர்களை செயலாற்றும்படி ஊக்குவித்து அதன் தாக்கத்தை சமூகம் அல்லது வாடிக்கையாளர்கள் மீது வெளிப்பட செய்பவரே சிறந்த தலைவர்.
2. ஒருமைப்பாட்டையும் நேர்மையும் வெளிப்படுத்துதல்: தனது செயல்களிலும் பேச்சுகளிலும் அனைவரையும் ஒருங்கிணைத்து செல்பவராகவும் நேர்மை, வெளிப்படைத் தன்மை போன்ற உயர்ந்த பண்புகளைக் கொண்டிருப்பவரே தலைமை பொறுப்புக்கு ஏற்றவர்.
3. பொறுப்புகளை பகிர்ந்தளித்தல்: தன்னிடம் பணிபுரியும் ஊழியர்களின் திறமைக்கேற்ப சிறந்த ஊழியர்களை சிறு குழுக்களாக தலைமை தாங்குமாறு செய்து தலைமை பண்பை அவர்களுக்குப் பயிற்றுவிக்க வேண்டும்.
4. பிரச்னைகளை சமாளித்தல்: சந்தையிலும் சமூகத்திலும் ஏற்படும் பிரச்னைகளை தீர்க்கும் திறமைகளையும் அனுபவங்களையும் தலைமை பொறுப்பில் இருப்பவர் பெற்றிருப்பதோடு, சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப நிறுவனத்துக்கு சாதகமாக மாற்றிக்கொள்பவராக இருக்க வேண்டும்.
5. இலக்குகளை நோக்கிப் பணிபுரிதல்: தலைவர்கள் விடாமுயற்சி கொண்டவர்களாகவும் இலக்குகளை சரியாக திட்டமிடத் தெரிந்தவர்களாகவும் மற்றவர்களை விட துடிப்பு மிக்கவர்களாகவும் பல்வேறு விஷயங்களை தெரிந்தவர்களாகவும் இருக்க வேண்டியது மிக மிக அவசியம்.
6. நேர்மறை மனப்பான்மை: நிறுவனத்தின் இலக்கை நோக்கி செல்லும் பாதையில் ஊழியர்கள் தொடர்ந்து நேர்மறையான சிந்தனைகளை ஏற்படுத்துவது ஊழியர்கள் மத்தியில் எப்போதும் உற்சாகத்தை உண்டாக்கும்.
7. மற்றவர்களை தரம் உயர்த்துதல்: ஊழியர்களின் தொழில்நுட்பம் கல்வி சார்ந்த திறமைகளை மேம்படுத்தி ஊக்கப்படுத்தி அடுத்த தலைமுறையினரை அடையாளம் காண வேண்டும்.
8. படைப்பாற்றல்: சிக்கலான முடிவுகளை கடந்து வருவதுடன் வேலை முறைகளில் புதிய அம்சங்களை புகுத்தி வெற்றி பெறவும் தலைமை பொறுப்பில் உள்ளவருக்குத் தெரிந்திருக்க வேண்டும்.
9. விவாதம்: ஒவ்வொருவரும் தங்களது யோசனையை தயக்கமின்றி தெரிவிக்கும் சூழலை தலைவர் விவாதங்களில் ஏற்படுத்தித் தர வேண்டும்.
10. தொடர்புகள்: நிறுவனத்தின் வளர்ச்சிக்குப் பயன்படுவது போன்ற தொடர்புகளுடன் தலைமை பொறுப்புகளில் இருப்பவர் எப்பொழுதும் இருக்க வேண்டும்.
மேற்கூறிய 10 குணங்கள் ஒரு சிறந்த நிர்வாகத்தை நிர்வகிக்கூடிய தலைமை பொறுப்பில் உள்ளவருக்கு இருக்க வேண்டியது மிகவும் அவசியமாகும்.