ட்ரிப்டோஃபன் (Tryptophan) என்பது புரதங்களை உருவாக்கப் பயன்படும் ஒரு அத்தியாவசிய அமினோ அமிலம் ஆகும். மெலடோனின் தூக்கம் - விழிப்பு சுழற்சியை சீராக்க உதவுகிறது. செரட்டோனின் பசி, தூக்கம், மனநிலை மற்றும் வலியை சீராக்க உதவுகிறது. மெலடோனின் மற்றும் செரட்டோனின் தயாரிக்க உடல் டிரிப்டோஃபனை பயன்படுத்துகிறது.
ட்ரிப்டோஃபன் நன்மைகள்:
1. மனநிலை மேம்பாடு: ட்ரிப்டோஃபனின் மிக முக்கியமான பண்பு மனநிலையை மேம்படுத்துவதாகும். மனதை உற்சாகமாக வைத்திருக்க உதவும் செரட்டோனின் என்கிற ரசாயனம் சுரக்க இது உதவுகிறது. மனநிலையை ஒழுங்குபடுத்துவதில் முக்கியப் பங்கு வகிக்கும் ஒரு நரம்பியல் கடத்தி ட்ரிப்டோஃபன் ஆகும். இது மனச்சோர்வு மற்றும் மனப்பதற்றத்தின் அறிகுறிகளைப் போக்க உதவுகிறது.
2. தூக்க ஒழுங்குமுறை: மனிதர்கள் நிம்மதியாக தூங்குவதற்கு உதவுவது மெலடோனின் என்கிற ஹார்மோன் சுரப்பே காரணம் ஆகும். இது தூக்கம், விழிப்பு சுழற்சிகளை கட்டுப்படுத்துவதன் மூலம் ட்ரிப்டோஃபன் தூக்கத்தின் தரத்தை மேம்படுத்தி வேகமாக தூங்கவும், நிம்மதியான தூக்கத்தையும் தருகிறது.
3. அறிவாற்றல் செயல்பாடு: ட்ரிப்டோஃபனில் இருந்து உற்பத்தி செய்யப்படும் செரட்டோனின், நினைவகம் மற்றும் கற்றல் உள்ளிட்ட மேம்பட்ட அறிவாற்றல் செயல்பாடுகளுக்கு உதவுகிறது. செரட்டோனின் சீரான அளவு, கவனம் மற்றும் அறிவாற்றல் செரிவு ஆகியவற்றை அதிகரிக்க உதவுகிறது.
4. நோய் எதிர்ப்பு அமைப்பு ஆதரவு: நன்மை பயக்கும் செரட்டோனின்களின் உற்பத்தியை ஊக்குவிப்பதன் மூலம் நோய் எதிர்ப்பு மண்டலத்தை அதிகரிக்க உதவுகிறது. இது நோய் தொற்றுகளை எதிர்த்துப் போராடும் மற்றும் வீக்கத்தை திறம்பட நிர்வகிக்கும். உடலின் திறனையும் மேம்படுத்தும்.
5. மாதவிடாய் முன்நோய்க் குறி நிவாரணம்: மாதவிடாய் முன்நோய்க்குறியின் (PMS) அறிகுறிகளைப் போக்க உதவுகிறது. மனநிலை மாற்றங்கள், எரிச்சல் மற்றும் உடல் ரீதியான தொந்தரவுகளைக் குறைக்கிறது.
6. எடை மேலாண்மை: ட்ரிப்டோஃபன் முழுமை உணர்வுகளை ஊக்குவிப்பதன் மூலம் பசியை குறைக்கிறது. பசியை கட்டுப்படுத்தவும் உதவுகிறது. அதனால் எடைக் கட்டுப்பாடு மற்றும் ஆரோக்கியமான உணவுப் பழக்கத்திற்கு வழி வகுக்கிறது.
7. வலி மேலாண்மை: சில ஆய்வுகள் ட்ரிப்டோஃபன் வலி நிவாரணி விளைவுகளை கொண்டிருக்கலாம் என்று கூறுகின்றன. செரட்டோனின்களைத் தூண்டுவதன் மூலம் வலி உணர்வை மாற்றி அமைத்து, நாள்பட்ட வலி நிலைமைகளை நிர்வகிக்க உதவுகிறது. மேலும். கவலைக் குறைப்புக்கு உதவுகிறது. கவலை கோளாறுகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் தருகிறது.
8. இதய ஆரோக்கியம்: ஆரோக்கியமான செரட்டோனின் அளவை ஊக்குவிப்பதன் மூலம் ட்ரிப்டோஃபன் இருதய ஆரோக்கியத்தை பராமரிக்க உதவும். ஏனெனில், செரட்டோனின் இரத்த அழுத்தம் மற்றும் வாஸ்குலர் செயல்பாட்டை ஒழுங்குபடுத்துவதில் ஈடுபட்டுள்ளது. உடற்பயிற்சியின்போது சோர்வை குறைப்பதில் ட்ரிப்டோஃபன் முக்கியப் பங்கு வகிக்கிறது. செரட்டோனின் அளவை சமநிலைப்படுத்துவதன் மூலம் உடற்பயிற்சி செயல் திறனை மேம்படுத்துகிறது.
ட்ரிப்டோஃபன் நிறைந்த உணவு வகைகள்: வான்கோழி, கோழி, மீன் குறிப்பாக சால்மன், டுனா, முட்டையின் மஞ்சள் கரு, பால், தயிர் மற்றும் சீஸ் போன்ற பால் பொருட்களிலும், டெம்பே டோஃபு போன்ற சோயா தயாரிப்புகளிலும், பீன்ஸ், பருப்பு மற்றும் கொண்டைக்கடலை, ஓட்ஸ், குயினோவா மற்றும் பழுப்பு அரிசி போன்ற முழு தானியங்களிலும், டார்க் சாக்லேட், சிவப்பு இறைச்சி, வாழைப்பழங்கள், பாதாம், அக்ரூட் பருப்புகள், சூர்யகாந்தி விதைகள் மற்றும் பூசணி விதைகள் போன்றவற்றிலும் ட்ரிப்டோஃபன் அதிகமாக உள்ளன.