‘நன்றாகத்தான் விதவிதமான சத்தான ஆகாரங்களை சாப்பிடுகிறேன். ஆனாலும் மிகவும் ஒல்லியாகவே இருக்கிறேன். உடம்பில் சதை பிடிக்கவே மாட்டேன் என்கிறது’ என்று கவலைப்படுவோர் பலரைப் பார்க்கலாம். அதுபோன்றவர்கள் உடலில் சதை பிடித்து உடல் வனப்பாக மாற 10 எளிய ஆலோசனைகளை இந்தப் பதிவில் பார்க்கலாம்.
குருணை அரிசியுடன் கொள்ளையும் சேர்த்து கஞ்சியாக வைத்து தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் விரைவில் உடலில் நன்றாக சதை பிடிக்கும்.
காய்ச்சிய பசும்பாலில் சம்பங்கிப் பூவை சேர்த்து சாப்பிட்டு வர, ஒல்லியான தேகத்தில் சதை பிடித்து அழகாகக் காட்சி தரலாம்.
வேப்பம் பூவை சுத்தம் செய்து தேனில் ஊற வைத்து குல்கந்து போல செய்து அதை இரவில் மட்டும் சாப்பிட்டு வந்தால் உடலில் சதைப் பிடிப்பு ஏற்பட்டு நல்ல பலன் கிடைக்கும்.
பேரீச்சம் பழத்தை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி அதை தேனில் ஊறவைத்து இரவில் மட்டும் சாப்பிட்டு வந்தாலும் உடல் பருமன் ஆகும்.
பலா சுளையை நெய் அல்லது தேனில் தோய்த்து சாப்பிட்டு அத்துடன் பாலும் அருந்தி வர விரைவில் உடல் பருமன் ஆகும்.
இரவில் பால், பேரிச்சம்பழம், பச்சை வாழைப்பழம் போன்றவற்றை சாப்பிட்டு வந்தால் சீக்கிரம் உடலில் சதை பிடிக்கக் காணலாம்.
வாத்து முட்டையுடன் இஞ்சி, சீரகம், கொத்தமல்லி சேர்த்து நிறைய சாப்பிட்டு வந்தாலும் எதிர்பார்க்கும் நல்ல பலன் கிடைக்கும்.
பூசணி விதையின் உள்ளே இருக்கும் பருப்பை காய வைத்து பசும்பாலில் கலந்து காய்ச்சி தொடர்ந்து குடித்து வந்தாலும் உடல் பருமன் ஆகும்.
வெண்பூசணி, உருளைக்கிழங்கு, உளுத்தம் பருப்பு, நெய், கடலை, உலர்ந்த பழங்கள், பால், வெண்ணெய் மற்றும் பருப்பு வகைகளை உணவில் நிறைய சேர்த்து உண்டு வந்தாலும் விரைவில் உடல் பருமன் ஆகும்.
வெந்தயக் கீரையை வதக்கி வாதுமை பருப்பு, கசகசா, கோதுமை இவற்றை சேர்த்து பாலில் அரைத்து, நன்றாகக் காய்ச்சி நெய்விட்டுக் கிளறி உண்டு வந்தால் உடலுக்கு வலிமையும், வனப்பும் உண்டாகும்.
பூசினாற்போல் உடம்பு இருக்க மேற்கூறியவற்றை முறைப்படி சாப்பிட்டு வந்தால் உடல் அழகு, வனப்புடன் உடல் பருமன் மற்றும் ஆரோக்கியமும் கிட்டும்.