நொதித்த உணவுகள் தரும் நிறைந்த நன்மைகள் தெரியுமா?

நொதித்த உணவுகள்
நொதித்த உணவுகள்
Published on

நொதித்த உணவுகள் நமது உடலுக்கு பல வழிகளில் ஆரோக்கிய நன்மைகளைத் தருகிறது. அதில் உள்ள புரோபயாடிக்குகள், பயோ ஆக்டிவ் சேர்மங்கள் மற்றும் மேம்பட்ட ஊட்டச்சத்துக்கள் மிகுந்த நன்மை பயக்கின்றன.

நொதித்த உணவுகள் என்றால் என்ன?

இட்லி மற்றும் தோசை மாவு எட்டில் இருந்து 10 மணி நேரம் வரை நொதிக்க வைக்கப்படுகிறது. அது சற்றே புளிப்பாக மாறுகிறது. இது லாக்டோ நொதித்தல் செயல்முறைக்கு உட்படுகிறது. இயற்கையான பாக்டீரியாக்கள் உணவில் உள்ள சர்க்கரை மற்றும் மாவுச்சத்தை உண்கின்றன. அவை லாக்டிக் அமிலத்தை உருவாக்குகின்றன. இந்த செயல்முறை உணவை பாதுகாக்கிறது. மேலும், நன்மை பயக்கும் என்சைம்கள், பி வைட்டமின்கள், ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் பல்வேறு வகையான புரோபயாடிக்குகளை உருவாக்குகிறது.

நொதித்த உணவு வகைகள் யாவை?

இட்லி, தோசை, அப்பம், டோக்ளா, தயிர், மோர், பனீர், ஊறுகாய், அரிசி ரொட்டி, போகா எனப்படும் அவல், கடி, ராகி கஞ்சி, கஃபீர், புளித்த முட்டைக்கோஸ் கொண்டு தயாரிக்கப்படும் சார்க்ராட், புளித்த காய்கறிகள் கொண்டு தயாரிக்கப்படும் கிம்ச்சி, புளித்த சோயா பீன் கொண்டு தயாரிக்கப்படும் டெம்பே, நாட்டோ போன்றவை.

நொதித்த உணவுகள் தரும் ஆரோக்கிய நன்மைகள்:

மேம்படுத்தப்பட்ட குடல் ஆரோக்கியம்: புளித்த உணவுகளில் ப்ரோபயாடிக்குகள் அதிகம் உள்ளன. இவை குடல் நுண்ணுயிரிகளில் ஆரோக்கியமான சமநிலையை பராமரிக்க உதவும் பாக்டீரியாக்களைக் கொண்டு இருக்கின்றன. இந்த ப்ரோபயாடிக்குகள் செரிமானத்திற்கும், உடல் ஊட்டச்சத்தை உறிஞ்சுவதற்கும், உடல் செயல்பாட்டை மேம்படுத்தவும் உதவுகின்றன. பல்வேறு வகையான நொதிக்க வைத்த உணவுகளை  உட்கொள்வதால் பாக்டீரியாக்கள் குடலில் சென்று சேர்ந்து,  பலதரப்பட்ட குடல் நுண்ணுயிரியை ஊக்குவிக்கும்.

ஊட்டச்சத்து உறிஞ்சப்படுதல்: நாம் உண்ணும் உணவு வகைகளில் எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் இருக்கின்றன. அவை நமது உடலால் சரியான முறையில் உறிஞ்சப்பட்டால் மட்டுமே அவை உடலுக்கு பயன் தரும். ஆன்ட்டி நியூட்ரியன்ட்கள்  புரதம், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உறிஞ்சுவதை தடுக்கின்றன. ஆனால், நொதிக்கப்பட்ட உணவுகளை உண்ணும்போது இந்த ஆன்ட்டி நியூட்ரியன்களை அவை உடைக்கின்றன. அதனால் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் தடையில்லாமல் கிடைக்கின்றன.

வைட்டமின் சத்து: நொதித்த உணவுகள் உடலுக்குத் தேவையான வைட்டமின்களின் அளவை அதிகரிக்கின்றன. கிம்ச்சி, இட்லி போன்ற புளித்த உணவுகள் பி வைட்டமின்கள் மற்றும் வைட்டமின் கே2 இவற்றை தருகின்றன. இவை  ஆற்றல் வளர்ச்சி மற்றும் எலும்பு ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமானவை.

இதையும் படியுங்கள்:
புதினா எலுமிச்சை சாற்றில் இத்தனை ஆரோக்கிய நன்மைகளா?
நொதித்த உணவுகள்

நோய் எதிர்ப்பு அமைப்பு ஆதரவு: நொதித்த உணவுகள் ஆரோக்கியமான குடல் நுண்ணுயிர்களை உருவாக்குவதால் நோய் எதிர்ப்பு அமைப்பை ஒழுங்குபடுத்துகின்றன. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து உடலை ஆரோக்கியமாக வைக்கின்றன. ப்ரோபயாடிக்குகள் நோய்க்கிருமிகளுடன் போராடி நோய் தொற்றுகளின் அபாயத்தை குறைக்கின்றன.

செரிமான மேம்பாடு: நொதித்த உணவுகள் செரிமானத்திற்கு உதவும் நொதிகளை உருவாக்குகின்றன. உடலில் ஏற்படும் வீக்கத்தை குறைக்கின்றன மற்றும் ஒட்டுமொத்த செரிமான மேம்பாட்டை ஏற்படுத்துகிறது.

மனநல மேம்பாடு: பொதுவாக குடல் நலத்திற்கும் மனநலத்திற்கும் இடையே ஒரு வலுவான தொடர்பு இருக்கிறது. நொதித்த உணவுகளில் உள்ள ப்ரோபயாடிக்குகள், செரட்டோனின் போன்ற நரம்பிய கடத்திகளின் உற்பத்தியை அதிகரிக்கிறது. இதனால் மனநிலை மற்றும் அறிவாற்றல் செயல்பாடு அதிகரிக்கும்.

பயோடேட்டிக்குகள் கவலை மற்றும் மனச்சோர்வின் அறிகுறிகளை குறைக்க உதவுகின்றன. இதனால் நொதித்த உணவுகளை உண்பவர்களுக்கு மனதில் உற்சாகமும் உடலுக்கு ஆற்றலும் கிடைக்கிறது.

எனவே, நொதிக்க வைத்த உணவுகள் உணவில் பல்வேறு சுவைகளை மட்டும் தருவதில்லை, செரிமான ஆரோக்கியம் மற்றும் ஒட்டுமொத்த நல்வாழ்வுக்கும் வழிவகுக்கிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com