
நாம் காரில் நீண்ட தொலைவு பயணம் செய்யும்போது உடன் எடுத்துச் செல்லக் கூடாத சில பொருட்கள் இருக்கின்றன. அவை என்னென்ன? ஏன் அவற்றை எடுத்துச் செல்லக்கூடாது என்பதற்கான காரணங்களைப் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.
1. சிகரெட் லைட்டர்கள்: இவற்றில் எளிதில் தீப்பிடிக்கக்கூடிய எரிபொருள் உள்ளது. காருக்குள் இருக்கும் அதிக வெப்பநிலை லைட்டரில் இருக்கும் வாயுவை விரிவடையச் செய்யலாம். கார் சூடாவதால் எரிபொருள் வெளியேறி வெடித்துச் சிதற வாய்ப்பு உள்ளது.
2. பெர்ஃப்யூம் பாட்டில்கள், டியோடெரெண்ட், ஹேர் ஸ்ப்ரே: இவற்றில் அழுத்தப்பட்ட வாயுக்கள் உள்ளன. நீண்ட தொலைவு பயணத்தின்போது காரின் எஞ்சின் சூடாகும். இதனால் பாட்டில்களில் அடைக்கப்பட்டுள்ள வாயுக்கள் வெடித்து, காருக்கும், அதில் பயணிப்போருக்கும் சேதம் ஏற்படலாம்.
3. மூக்குக் கண்ணாடிகள்: பலரும் மூக்கு கண்ணாடிகளை காரின் டாஷ்போர்டில் வைப்பார்கள். காருக்குள் இருக்கும் கடுமையான வெப்பம் பிளாஸ்டிக் ஃபிரேம்களை சிதைக்கவோ அல்லது உருக்கவோ செய்யலாம். கண்ணாடியில் உள்ள லென்ஸ் பூச்சுகளையும் சேதப்படுத்தலாம்.
4. பவர் பேங்குகள்/ போர்ட்டபிள் சார்ஜர்கள்: பவர் பேங்க்குகளில் லித்தியம் அயன் பேட்டரிகள் உள்ளன. இவை தீவிர வெப்ப நிலைக்கு உணர்திறன் கொண்டவை. நீண்ட நேரம் ஓடும் கார் சூடாகி, அது பேட்டரியை சேதப்படுத்தலாம். அதை வீங்க வைத்து தீப்பிடிக்கக் கூட காரணமாகலாம்.
5. பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்கள்: தொலைதூரப் பயணத்தில் பழைய பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்கள் அதிக வெப்பத்திற்கு ஆளாகும். பிளாஸ்டிக்கில் உள்ள சில ரசாயனங்கள் காரின் அதிக வெப்பத்தால் பாட்டிலில் உள்ள தண்ணீரில் கசிந்து விடும். இது உடல் ஆரோக்கியத்துக்கு நல்லதல்ல.
6. மருந்துகள்: பெரும்பாலான மருந்துகளை குறிப்பிட்ட அறை வெப்ப நிலையில் வைக்க வேண்டும். காருக்குள் உருவாகும் அதிக வெப்பம், மருந்துகளின் வேதியல் அமைப்பை மாற்றி அவற்றை குறைவான செயல் திறன் கொண்டதாகவோ அல்லது தீங்கு விளைவிப்பதாக மாற்றலாம். உதாரணமாக இன்சுலின் அதிக வெப்பமடைந்தால் அது பயனற்றதாகிவிடும்.
7. பீர், சோடா பாட்டில்கள்: இவை அதிக வெப்பத்தின் காரணமாக வெடிக்கலாம். ஏனென்றால், இவற்றுள் கார்பனேற்றப்பட்ட பானங்கள் உள்ளன.
8. இசைக்கருவிகள்: அதிக வெப்பநிலை மாற்றங்கள் கிட்டார், வயலின் அல்லது கிளாரினெட்டுகள் போன்ற இசைக்கருவிகளில் உள்ள மரத்தை விரிவடையச் செய்து, சுருங்கச் செய்கிறது. இதனால் இசைக்கருவிகள் சேதமடைந்து விடும்.
9. பால், இறைச்சி, சாக்லேட்: நீண்ட தொலைவு பயணம் செய்யும்போது கார் ஒரு சூடான அடுப்பு போல மாறி உணவு கெட்டுப் போவதை துரிதப்படுத்துகிறது. இது பாக்டீரியா வளர்ச்சிக்கு வழிவகுத்து அந்த உணவை உண்ணும்போது விஷமாக மாறிவிடுகிறது.
10. சன்ஸ்கிரீன்: அதிக வெப்பநிலைக்கு ஆளாகும்போது சன்ஸ்கிரீனில் உள்ள சேர்மங்கள் உடைந்து போகக்கூடும். இதனால் சூரியனின் தீங்கு விளைவிக்கும் புற ஊதா கதிர்களிலிருந்து சருமத்தைப் பாதுகாப்பதில் சன்ஸ்கிரீனின் செயல்திறன் குறைந்து விடும். சமயத்தில் டின்களில் அடைக்கபட்டுள்ள சன்ஸ்க்ரீன் வெடிக்கக்கூடும்.
இந்தப் பொருட்களை காரில் செல்லும்போது பாதுகாப்பாக எடுத்துச் செல்வது எப்படி?
வேறு வழியின்றி மேற்கண்ட பொருட்களை காரில் எடுத்துச் செல்ல நேர்ந்தால் அவற்றை காரின் டேஷ்போர்டு, இருக்கைகள் அல்லது நேரடி சூரிய ஒளி படும் எந்த இடத்திலும் வைக்கக் கூடாது. ஒரு பையில் கனமான போர்வைக்குள் சுற்றி வைத்து, கார் இருக்கைக்கு அடியில் வைக்க வேண்டும். காரை இடையில் நிறுத்தி இறங்கினால், கையேடு பவர்பேங்க், பர்ஃப்யூம் இவற்றை எடுத்துக்கொள்ள வேண்டும். மூக்குக் கண்ணாடியை தனியாக வைக்காமல், அதற்குரிய பெட்டியில் வைக்க வேண்டும். உணவுப்பொருட்கள் கொண்டு சென்றால் விரைவில் உண்டு முடித்து விட வேண்டும்.