முதுமையிலும் மகிழ்ச்சி சாத்தியமே! பணியிலிருந்து ஓய்வு பெற்று முதுமையிலும் நிம்மதியாக, மகிழ்ச்சியாக காலத்தைக் கழிக்க கீழ்கண்ட 10 கட்டளைகளை பின்பற்றினாலே போதும், வாழ்வின் கடைசி பக்கங்கள் இனிமையாக இருக்கும்.
1.சேர்ந்திருக்க நினைக்காதீர்கள்: எந்தக் காரணம் கொண்டும் வாழ்வின் கடைசி பகுதியில் பிள்ளைகளுடன் சேர்ந்து வாழ நினைக்காதீர்கள். இதனால் நம் சுதந்திரம் பறிபோகும். நிம்மதி நிச்சயம் போகும்.
2. விலகியே இருக்க பழகுங்கள்: உறவுகள் என்பது இனிமையாகத்தான் இருக்கும், அளவோடு இருந்தால். ‘என் பிள்ளைக்கு ஒன்றும் தெரியாது’ என்று ஓவராக இழைந்தால் மனம் வருத்தப்படும் சம்பவங்கள்தான் நடைபெறும். எனவே, சற்று விலகியே இருக்கப் பழகுங்கள்.
3. சுதந்திரமாக இருங்கள்; அவர்களையும் சுதந்திரமாக இருக்க விடுங்கள்: நாம் வளர்த்தவர்கள்தான். ஆனால், அவர்களுக்கு சிறகுகள் முளைத்து விட்டது. எனவே, சிறகு முளைத்த பறவைகளை அதன் விருப்பப்படி பறக்க விடுங்கள். தேவையில்லாமல் நெருங்கி நிறைய அறிவுரைகளை வழங்கி வெறுப்பை சம்பாதித்துக் கொள்ள வேண்டாம்.
4. உரிமையை நிலைநாட்ட முயற்சிக்காதீர்கள்: பேரக் குழந்தைகள் மேல் அதிக அளவு உரிமையை நிலைநாட்ட முயற்சிக்காதீர்கள். குழந்தைகள் வளர்ப்பில் மகனுக்கோ, மகளுக்கோ எந்தவிதமான அறிவுரைகளையும் வழங்காதீர்கள். இக்காலத்துப் பிள்ளைகள் அதை விரும்ப மாட்டார்கள்.
5. கையிருப்பில் இருக்க வேண்டியவை: ‘அருளில்லார்கு அவ்வுலகம் இல்லை. பொருளிலில்லார்கு இவ்வுலகம் இல்லை’ என்பது அவ்வையார் கூற்று. இது முற்றிலும் உண்மை. கையில் பணம் இல்லை என்றால் மதிப்பும், மரியாதையும், உரிமையும் நிச்சயம் இருக்காது. சேமித்து வைத்த பணத்தை, சொத்துக்களை நாம் இருக்கும் வரை முழுவதுமாக பகிர வேண்டாம். மீறினால் தெருவில் நிற்க வேண்டியதுதான்.
6. சொல்லிக் காட்டாதீர்கள்: காலம் முழுவதும் பிள்ளைகளின் உயர்வுக்காக பாடுபட்டு பல இழப்புகளை சந்தித்தும் இருப்பீர்கள். அவர்களின் முன்னேற்றத்திற்காக நிறையவும் பாடுபட்டிருப்பீர்கள். அவற்றை எல்லாம் திரும்பத் திரும்ப சொல்லிக்காட்ட வேண்டாம். வெறுப்புதான் வரும். கடமையை செய்தீர்கள். அவ்வளவுதான்.
7. விமர்சிக்க வேண்டாம்: நாம் சிக்கனமாக இருந்தோம் என்பதற்காக நம் பிள்ளைகளின் ஆடம்பர வாழ்வை விமர்சிக்க வேண்டாம். அவர்கள் நவீன கார்ப்பரேட் வாழ்க்கை வாழ்கிறார்கள். நம்மை போல் இல்லை என்பதை உணர்ந்து கொண்டாலே அவர்களின் செலவுகளை, ஆடம்பரத்தை நமக்கு விமர்சிக்கத் தோணாது.
8. ஒதுங்கி இருக்க பழகுங்கள்: கூட்டுக் குடும்ப வாழ்வு சிதைந்துபோன தலைமுறையில் வாழ்கிறோம் என்பதை மறக்க வேண்டாம். தேவைப்பட்டால் வருடத்திற்கு ஓரிரு முறை பரிசு பொருட்களுடன் சென்று பேரன், பேத்திகளை பார்த்துவிட்டு வாருங்கள். அதிக நாட்கள் தங்க வேண்டாம்.
9. தொந்தரவு செய்யாதீர்கள்: நாம் பிள்ளைகளையும், பேரப்பிள்ளைகளையும் பார்க்கச் செல்லும் சமயம் அவர்களுக்கு தொந்தரவு கொடுக்காமல் இருக்கப் பழக வேண்டும். ஏனெனில், மருமகளோ, மருமகனோ அதை விரும்ப மாட்டார்கள். நமக்குத் தேவையான மருந்து, மாத்திரை போன்ற அத்தியாவசிய பொருட்களையும் கையுடன் எடுத்துச் சென்று விடுங்கள். எதற்காகவும் அவர்களை தொந்தரவு செய்ய வேண்டாம்.
10. குறைத்து பேசாதீர்கள்: வயதான காலத்தில் எக்காரணம் கொண்டும் பிள்ளைகள் முன்பு மனைவியை / கணவனை விட்டுக் கொடுத்து பேசாதீர்கள். இருவரில் ஒருவரை யார் குறைத்து பேசினாலும் எதிர்க்குரல் கொடுக்கத் தவறாதீர்கள். வயதான காலத்தில் அன்பும், பாசமும், விட்டுக் கொடுக்காத குணமும் மிகவும் அவசியம்.
அதிக பாசம், ஆசை வைப்பதை குறைத்துக்கொண்டு தாமரை இலை தண்ணீர் போல் வாழப்பழகினால் முதுமையிலும் மகிழ்ச்சி சாத்தியமே.