
கம்யூனிகேஷன் திறன் என்பது எல்லா இடங்களிலும் அவசியம். பள்ளிக்கு செல்லும் பொழுது, கல்லூரி அல்லது வேலைக்கு செல்லும் பொழுது என எல்லா நிலையிலும் இந்த திறன் மிகவும் அவசியம். நாம் என்ன நினைக்கிறோம், என்ன சொல்ல வருகிறோம் என எல்லோருக்கும் புரிவது போல் எந்த தயக்கமும் இல்லாமல் சரளமாக பேசவும், நம்முடன் பழகும் சக மனிதர்களிடமும் பேசிப்பழகவும் இந்த திறன் இருந்தால்தான் நம்மால் சிறப்பாக மிளிர முடியும். சிலருக்கு பேச ஆரம்பித்தாலே வேர்த்து கொட்டி, பயத்தில் கை கால்களில் நடுக்கம் ஏற்படும். இந்த பயத்தை போக்கி சரளமாக பேச என்ன செய்யலாம்?
தயக்கத்தை உதறிவிட்டு சரளமாக எப்படி பேசலாம் என்பதை பார்க்கலாம்...
1) நம்மால் முடியும் என்ற நம்பிக்கையுடன் நம்மைச் சுற்றியுள்ள மனிதர்களிடம் தயக்கத்தை விட்டு பேசத் தொடங்கினாலே போதும், பயம் போய் சரளமாக நம்மால் பேச முடியும்.
2) தொடர்புத் திறனை வளர்த்துக் கொள்ளவும், மேம்படுத்தவும் விரும்பினால் முதலில் நாம் செய்ய வேண்டியது பேசுவதை விட அதிகமாக கேட்பது தான். மற்றவர்கள் சொல்வதை காது கொடுத்து கேட்பது மிகவும் அவசியம்.
3) பேசும் பொழுது வார்த்தைகளை மடமடவென மடைத்திறந்த வெள்ளம் போல் கொட்டாமல் நின்று நிதானமாக பேசிப் பழக வேண்டும். அப்பொழுதுதான் ஏதாவது தவறான வார்த்தைகளை பயன்படுத்தப் போனாலும் அதை நம்மால் சட்டென தடுத்து நிறுத்திக் கொள்ள முடியும்.
4) பேசுவதற்கு முன்பு நாம் எதைப் பற்றி பேச நினைக்கிறோமோ அதைப் பற்றி குறிப்பெடுத்துக் கொள்வது நல்லது. இதன் மூலம் பேசும்பொழுது எந்த விஷயத்தையும் தவறவிடாமல் தெளிவாக கூற முடியும்.
5) கம்யூனிகேஷன் திறன் என்பது வெறும் பேச்சு மட்டுமல்ல. மற்றவர்களை எப்படி எளிதாக அணுகுவது, அவர்களை நம் பேச்சால் எப்படி கவர்வது, மற்றவர்களின் கவனம் வேறு பக்கம் திரும்பாமல் நம் பேச்சை கவனிக்க வைப்பது போன்றவை அடங்கும்.
6) பேசுவதற்கு முன்பு நம்மை தயார் செய்து கொள்ள வேண்டும். எப்படி பேச வேண்டும், என்ன பேச வேண்டும் என்பதை தயார்படுத்திக் கொண்டால் நம்பிக்கை பிறக்கும். ஆகவே எங்கே பேசுவதாக இருந்தாலும் அதற்கு முன்னர் நம்மை நன்கு தயார்படுத்திக் கொள்வது தயக்கத்தை போக்க உதவும்.
7) நம் தயக்கத்தை உடைக்க முதலில் கண்ணாடி முன்பு நின்று பேசிப் பழகலாம். செல்போனில் வீடியோ ரெக்கார்ட் செய்து பேசி பழகலாம். இது நாம் எப்படி பேசுகிறோம், எந்த இடத்தில் தவறு செய்கிறோம், எங்கு தடுக்கிறது, போன முறை பேசியதை விட இந்த முறை ஏதேனும் முன்னேற்றம் உள்ளதா என்று சரி பார்த்து நம் தவறுகளை சரி செய்து கொள்ள உதவியாக இருக்கும்.
8) பேசும் பொழுது நம் எதிரில் இருப்பவர்களைப் பார்த்து பயந்து நடுங்குவதோ, தயங்குவதோ கூடாது. நாம் சொல்ல வந்த கருத்துக்களை கோர்வையாக எடுத்து சொல்ல தானாகவே வார்த்தைகள் வந்து குவிந்து விடும். நம் எதிரில் இருப்பவர்கள் எல்லாம் தெரிந்தவர்கள், வல்லவர்கள், விஷய ஞானம் மிக்கவர்கள் என்று எண்ணாமல் அவர்களையும் நம்மைப் போல் சக மனிதராக எண்ணி நினைத்து பேச பயமோ தயக்கமோ வராது.
9) பேசும் பொழுது தன்னம்பிக்கையுடன் எதிரில் இருப்பவர்களை நேராகப் பார்த்து பேசுவது முக்கியம். இது நம்மை பதற்றம் கொள்ளாமல் ஆசுவாசப்படுத்தும். அத்துடன் நம் பேச்சு நேர்மறையான எண்ணத்துடன் நேர்மறை வார்த்தைகளையும் கொண்டிருக்க வேண்டும்.
10) நாம் பேசும்போது எதிரில் இருப்பவர்கள் நம் உடல் மொழியையும் கவனிப்பார்கள். எனவே மற்றவர்களுடன் பேசும் பொழுது உடல் மொழியும் முக்கியம். கவனத்தை வேறிடத்தில் வைத்துக்கொண்டு, கண்களை இங்கும் அங்கும் அலைபாய விட்டுக் கொண்டு பேசாமல் நேருக்கு நேர் பார்த்து உறுதியான குரலில் தெளிவாக அதே சமயம் புன்னகையுடனும் பேச வேண்டும். இதற்கு செல்போனில் நாம் பேசுவதை வீடியோ எடுத்துப் பார்த்து உடல் மொழி எப்படி இருக்கிறது என்பதை கவனித்து மெருகேற்றலாம்.