தன்னம்பிக்கை மிகுந்த பெண்களிடம் ஒருவித வசீகரம் இருக்கிறது. இவர்கள் எப்போதும் பிறரைக் கவர வேண்டும் என்று நினைக்க மாட்டார்கள். ஆழமான சுயமரியாதை மற்றும் மதிப்பு இவர்களுக்கு இருக்கும். அவர்களின் தனித்துவம் மிக்க பத்து அடையாளங்களைப் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.
1. உண்மைத்தன்மை: தன்னம்பிக்கை மிகுந்த பெண்கள் தங்களுக்கு உண்மையாக இருப்பார்கள். சமூக நெறிமுறைகளுக்கு ஏற்றவாறு ஒரு ஆளுமையை ஏற்றுக்கொள்ளவோ தங்களின் நடத்தையை மாற்றவோ முயற்சிக்க மாட்டார்கள். இந்த குணத்தினாலே அவர்கள் தனித்து நிற்பார்கள். தன்னுடைய எண்ணங்கள் கருத்துக்கள் மற்றும் உணர்ச்சிகளை நேர்மையாக வெளிப்படுத்தத் தயங்குவதில்லை.
2. யாரையும் சாராமல் இருக்கும் தனித்தன்மை: இவர்கள் எந்த வேலைக்கும் பிறரது உதவியை எதிர்பார்க்காமல் தானே செய்யக்கூடிய வல்லமை படைத்தவர்கள். யாரிடமும் உதவி கேட்க மாட்டார்கள் என்று அர்த்தமல்ல. வேறு ஒருவரின் தலையீட்டையோ, தானும் தேவையில்லாமல் பிறருக்குத் தொந்தரவு செய்யவோ மாட்டார்கள். தங்கள் பிரச்னைகளை தாங்களே தீர்த்துக் கொள்வார்கள். சவால்களை நேருக்கு நேர் எதிர்கொள்வார்கள். கடினமான சூழ்நிலைகளைக் கூட கையாளும் திறன் பெற்று இருப்பார்கள்.
3. மீண்டு வருதல்: துன்பத்திலிருந்து மீள்வதற்கும், முயற்சிகளில் தோல்வி அடைந்தாலும், பின்னடைவு ஏற்பட்டாலும் அதிலேயே நின்று புலம்பிக் கொண்டு இருக்காமல் மிக எளிதாக மீண்டு வருவார்கள். மன அழுத்தம் மற்றும் துன்பங்களை சமாளிக்கும் திறன் பெற்றவர்கள்.
4. சுயபுரிதல்: தனது பலம், பலவீனம் பற்றிய தெளிவான அறிவு இவர்களுக்கு இருக்கும். தன்னைப் பற்றிய தெளிவான புரிதல் இருப்பதால் பிறரிடம் ஒப்புதலை எதிர்பார்க்க மாட்டார்கள். தங்கள் வாழ்க்கையில் ஆரோக்கியமான எல்லைகளை நிறுவவும் சமநிலையை பராமரிக்கவும் இவர்களால் முடியும்.
5. நேர்மறைத்தன்மை: தன்னம்பிக்கை மிகுந்த பெண்கள் இந்த உலகத்தை எப்போதும் நேர்மறை லென்ஸ் வழியாகவே பார்க்கிறார்கள். பிறருடைய விமர்சனங்களால் சோர்வடைய மாட்டார்கள். தீர்வுகளில் கவனம் செலுத்துவார்களே ஒழிய, பிரச்னைகளில் அல்ல.
6. இரக்கம்: பிறரிடம் கடினமாக இருப்பது வளர்ச்சிக்கு வழி வகுக்காது என்பதை புரிந்து கொண்டு அவர்கள் மீது ஆதரவு மற்றும் இரக்கம் ஆகியவற்றை வெளிப்படுத்துவார்கள். அதனால் அவர்களுடைய உறவுகளை பலப்படுத்திக் கொள்வார்கள். இது அவர்களின் தனிப்பட்ட வளர்ச்சியையும் மேம்படுத்தும்.
7. தைரியம்: தங்களது முடிவுகளிலும் செயல்களிலும் மிகுந்த தைரியத்தோடு செயல்படுவார்கள். ரிஸ்க் எடுத்து கம்போர்ட் சோனை விட்டு வெளியேறுவார்கள். மற்றவர்களைக் கவர வேண்டும் என்பதற்காக அல்ல, தனக்குப் பிடித்ததைச் செய்ய வேண்டும் என்பதற்காகவும் அதில் அவர்களுக்குள்ள ஆழ்ந்த நம்பிக்கையின் காரணமாகவும்தான்.
8. பணிவு: மிகுந்த திறமைசாலிகளாக இருந்தாலும் பணிவு என்பது இவர்களுக்கு ஒரு அணிகலனாகவே இருக்கும். தன்னுடைய தவறுகளை ஒப்புக்கொள்ளவோ அல்லது தேவைப்படும்போது பிறரிடம் உதவி கேட்க பயப்பட மாட்டார்கள். பிறரின் ஞானத்தையும் அனுபவங்களையும் பாராட்டுவார்கள். பணிவு என்கிற பண்பு இவர்களுக்கு வலிமை கூட்டுகிறது.
9. தீர்மானம்: இலக்குகளை நிர்ணயித்து, விடாமுயற்சியுடன் செயல்படுகிறார்கள். தடைகள் அல்லது பின்னடைவுகளால் கலங்குவதில்லை. தான் எடுத்த தீர்மானத்தில் கடைசிவரை உறுதியாக நின்று வெற்றி அடைகிறார்கள்.
10. சுய அன்பு: தன்னை மதித்தல், தன் நல்வாழ்வுக்கான வளர்ச்சிக்கு வழிவகுக்கும் என்பதை தெரிந்து தன்னை அவர்கள் நேசிக்கிறார்கள். தன் உடல், உணர்ச்சி மற்றும் மன ஆரோக்கியத்தை நன்றாக கவனித்துக் கொள்கிறார்கள். இந்த சுய அன்பு என்கிற பண்புதான் அவர்களது பிற பண்புகளுக்கு அடித்தளமாக அமைகிறது.